நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டி– மாயாவதி அறிவிப்பு..!
நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதற்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு என தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இன்னும் சில நாட்களில், தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய அளவில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை பல்வேறு அரசியல் கட்சிகள் நடத்தி வருகின்றன. தேசிய ஜனநாயக கூட்டணி, I.N.D.I.A. கூட்டணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதனிடையே உத்தரப் பிரதேசத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக உள்ள பகுஜன் சமாஜ் கட்சி, I.N.D.I.A. கூட்டணியில் இடம்பெற வேண்டும் என காங். மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான பிரமோத் திவாரி அழைப்பு விடுத்திருந்தார்.
இடம்பெற விருப்பம் இல்லை என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும், உ.பி. முன்னாள் முதல்மைச்சருமான மாயாவதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :
“வரும் மக்களவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. இத்தகைய சூழலில், தேர்தல் கூட்டணி (அ) மூன்றாம் அணி அமைப்பது போன்ற செய்திகள் முற்றிலும் பொய்யானது மற்றும் தவறானது. இதுபோன்ற செய்திகளைக் கொடுத்து ஊடகங்கள் தனது நம்பகத்தன்மையை இழக்கக்கூடாது. மக்களும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக உ.பி.யில், பகுஜன் சமாஜ் கட்சி தனித்து தேர்தலில் போட்டியிடுவதால், எதிர்க்கட்சிகள் சற்று அமைதியற்ற நிலையில் உள்ளனர். அதனால்தான் தினமும் பலவிதமான வதந்திகளைப் பரப்பி மக்களைத் தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார்கள். ஆனால் சமூகத்தின் நலன் கருதி தேர்தலில் தனித்து போட்டியிடும் முடிவில் பகுஜன் சமாஜ் கட்சி உறுதியாக உள்ளது”
இவ்வாறு மாயாவதி பதிவிட்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதன் மூலம் உ.பி.யில் மும்முனைப் போட்டி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.