மகளிர் தினத்தை முன்னிட்டு சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு..!
சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் மகளிர் தினத்தை முன்னிட்டு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி மகளிர் தினத்தை முன்னிட்டு வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைப்பதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் நாட்டின் லட்சக்கணக்கான பெண்களின் நிதிச்சுமையை குறையும் என்றும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் மகளிர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். மேலும் சமையல் எரிவாயுவை மிகவும் குறைந்த விலையில் வழங்குவதன் மூலம், குடும்பங்களின் நல்வாழ்வை ஆதரிப்பதோடு ஆரோக்கியமான சூழலை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம். இது பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது மற்றும் அவர்களுக்கு எளிதான வாழ்வியல் சூழல் என்ற எங்கள் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.
சென்னையில் தற்போது வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் ரூ.918.50 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் விலை குறைப்பு அறிவிப்பை முன்னிட்டு வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் சென்னையில் ரூ.818.50-க்கு விற்பனை செய்யப்படும்.