“எரிமலை வெடித்தால் வேட்டிகள் எங்கே போகும்” | மு.ஞா.செ.இன்பா

 “எரிமலை வெடித்தால் வேட்டிகள் எங்கே போகும்” | மு.ஞா.செ.இன்பா

இப்பிரபஞ்சத்தை அழகாக காட்டும்  மாயாஜாலம் பெண். அவளின் கண்சிமிட்டலில் சமுதாயம் என்ற கட்டமைப்பு  கருவாகி ,உருவாகி  இப்பிரபஞ்சத்தை  உயிர் கொள்ள செய்கிறது .

பெண் வழி சமுதாயமாக  உருவான மானுடம்  இன்று ஆண் வழி சமுதாயமாக  மாறி, பெண்ணை அடிமை பொருளாக அடையாளபடுத்துகிறது என்பது விந்தையான சகுனி ஆட்டம் .. ..

ஆதி கடவுள் என்று வருணிக்கப்படும் சிவனுக்கு முக்கண்,தேவ கீரிடம் சூட்டியது  ..அறிவின் ஆற்றல் கொண்ட அக்கண்ணை சிவனுக்கு  சூடி, சிவன் என்ற ஆணை ,இறைநிலைக்கு கொண்டு  சென்றவர் பார்வதி .

ஆனால்  இந்த சமுதாயம் பார்வதியின் திறனை  சத்தமின்றி அமுக்கிவிட்டு , ஆதிக்க சக்தியாக சிவனை அறிவித்து விட்டது .எல்லா விடயங்களிலும்  பெண் இப்படித்தான் வஞ்சிக்கப்பட்டு கொண்டு இருக்கிறாள் .

ஆண் இனம்   உலகத்தை தனதாக்கி  கொள்ள , படைக்கும் திறன் ஆணுக்கு  உண்டு என்ற   விஞ்ஞானம் தான் காரணம் . பெண்ணால் ஆணின்றி தாய்மை அடைந்தது அடுத்த நகர்வுக்கு செல்ல முடியாது .ஆணை சார்ந்து வாழ வேண்டிய நிலை தான்  அவளுக்கு.

படைப்பு இலக்கணம் இதைத்தான் சொல்லுகிறது .ஆண் ஆக்கலுக்கு உரியவன் .பெண் அடங்கி போக படைக்க பட்டவள் என கதை புனைந்தது  இந்த வறட்டு சமுதாயம் ..

புராணம் ஒன்றில் ஆண் துணையின்றி ,இரு பெண்கள் இணைந்ததால் உயிர்  உருவானது என்ற கதை உலா வருகிறது .சுஸ்ப வக்கிரர் என்ற  முனிவரிடம்  அரசனான  கணவனை இழந்த  மனைமார்களில் இருவர்   வந்தனர் .

அரசன் எங்களோடு  இல்லறம் நடத்துவதற்கு  முன்  இறப்பை சந்தித்து  விட்டான் .வம்சம் பெருக வாய்ப்பு இல்லாமல்  போய் விடுமோ என நாங்கள் அச்சப்படுகிறோம்.  எங்களுக்கு  ஏதாவது  வழி சொல்லுங்கள் என்றனர் ..

முனிவர் கொஞ்சம் முற்போக்கு சிந்தனைவாதிப்போல ,பெண்களே  நீங்கள்  இருவரும் கலவி புரிந்தால்  உங்களுக்கு வாரிசு உருவாகும் என விஞ்ஞானத்திற்கு எதிரான கருத்தை முன்வைத்தான் ..

அரசனின் மனனவிமார் இருவரும் ,முனிவரின்  கூற்றை மதித்து கலவியில் ஈடுபட்டனர் .ஆண் இன்றி பெண்ணாலும் குழந்தை  உருவாக்கும்  சூத்திரத்தை  நடைமுறைபடுத்த முடியும் என்பதை  நிரூபித்தனர் .

ஆண் இன்றி பெண்ணால்  உருவானவன் பகீரதன் .இந்த சூத்திரம் எல்லா பெண்களுக்கும் தெரிந்து இருந்தால் ,ஆணின் ஆணவத்திற்கு

என்றோ  கடிவாளம்  போட்டு  இருக்கலாம் ..

ஆதாம் என்னும்   மனிதன்  உலகில் முதல் தோன்றினான் என்பதை மெஞ்ஞானம் கத்தி சொல்லி கொண்டு இருக்கிறது .ஹீப்ரு  தொன்மத்தின்படி  முதலில் தோன்றியவள் பெண் என்ற கருத்து  முன் வைக்கப்படுகிறது .அவளுடைய  பெயர் லிலித்.

அவளை காமத்தின்  உச்சமாக ஆண்வர்க்கம் கட்டி மகிழ்ந்தது  என்பது  வேறு கதை. ஆதாமுக்கு  முன்   படைக்கப்பட்டாள் பெண் என்பதுதான்  நிஜம் ..நம்  பிரபஞ்சத்தின் முதல் மனுசி  பாட்டி லிலித்தான்..

பிரபஞ்சத்தின்  மாயாஜால அழகாய் காட்சி தந்த  பெண்ணை ,திட்டமிட்டு ஆணினம் வீட்டிற்குள் சிறை வைத்தது .தீரம் சார்ந்த விடயங்கள் ஆணுக்கு உரியது என்றும் ,வீட்டு வேலைகள்   பெண்ணை சார்ந்தது என்றும் கதையளந்து ,சமூக கட்டமைப்பில் பெண்ணை தீட்டுயென புறம் தள்ளியது .

தமிழ் சமூகத்தில் தொல்காப்பியரில் இருந்து இன்றைய படைப்பாளிகள் வரை பெண் இனத்தை திட்டமிட்டு ஆணுக்கு அடிமை என முன்மொழிந்தார்கள்

அச்சமும் ,நாணும், மடனும் முந்துறதல்  நிச்சமும்

பெண்பாற்குரிய ….என்று  தொல்காப்பியர்  பெண்களுக்கு  இருக்கக்கூடிய பண்புகளாக முன் வைக்கின்றார் ..பாரதியிடம் மட்டும் இந்த பருப்பு வேகவில்லை ..

பெண்கள் இச்சமூகத்தின் அடையாளம் .அவர்களை அடிமை செய்யாதீர் என கொதித்து எழுந்தான்  பாரதி ..அவன் தொட்ட அக்கினி கணையை ,பெரியார் தூக்கி கொண்டார் .பெரியாரின் கைத்தடி பாச்சலுக்கு பின் தமிழ்  சமூகத்தில் பெண் விடுதலை பேசுபடுபொருளானது ..

சங்ககாலத்தில் பெண்பாற்புலவர்கள்  இருந்தார்கள் என்றாலும் ,ஆண் வர்க்கத்தின் அசட்டு மொழியை அவர்கள்  முன் மொழிந்தார்கள் .கி.பி.100  இல் தோன்றிய மணிமேகலை மட்டுமே ,சமூகம் சார்ந்தவள் பெண் என்று  குரல் இட்டு காட்டியது .மணிமேகலையை எழுதியது பெண்பாற் புலவர் இல்லை என்பதுதான் வேதனை ..

தமிழில் முதல் புதினமாக கணக்கிடப்பட்ட பிரதாப முதலியார் சரித்திரம் ,அதனை தொடர்ந்தது வந்த மாதவையாவின் பத்மாவதி சரித்திரம்  இவை  இரண்டும்  பெண் கல்வி .விதவை மறுமணம்  குறித்து பேசியது .ஆனால்  இந்த கருத்துக்கு போதுமான ஆதரவு கிட்டவில்லை .நரிக்கூட்டம் என்ற உருவில் சிந்தையை உருவாக்கி கொண்ட ஆண் இனம் எப்படி ஆதரிக்கும் .?

பெண் மென்மையானவள் ,பூப்போன்றவள்  என்று சொல்லும் வார்த்தைகள் .பெண்ணுக்கு எதிரானவை என்று பெண்கள் உணரவேண்டும் .இங்கு கவிஞர்  தாமரை  எழுதிய   வரியை முன் வைப்பது சிறந்ததாக  இருக்கும் ..

ஆண்களை நம்பி பயணிக்கும் பெண் இனம் ,.சமுதாய கட்டமைப்பில் நீந்த தெரியாத இனமாக மாற்றம் கண்டு உள்ளது .

நீந்த தெரியாவிட்டால் என்ன ?

வெள்ளம் சொல்லி தரும்   என்கிறார் தாமரை  ..

மௌனமாகி நிற்கும் பெண் இனத்தின் மனதிற்குள் எத்தனை வலிகள் ,காயம் தந்து கொண்டு இருக்கிறது ..இந்த காலம் ,இறந்த காலங்களை போல  பெண்ணின் வலிமையை அறியாத காலம் அல்ல.வலிகளை உடைத்து எறிந்து,சமூகமாய் பெண் மாறி கொண்டு இருக்கும் காலம் .. எனினும் பெண்களின் திறமைகளை தீயிடுவோரை  சமுதாயம் என்ற பெயரில் பொறுத்து கொள்ளதே..நீ ஆள பிறந்தவள் ..

தீ குச்சிகளை

நீரில் நீர்த்து

போக செய்தாக

ஆணினம் நினைக்கட்டும்

எரிமலை  நீ

வெடித்து கிளம்பும் போது

வேட்டிகள்  என்ன

பாதையை தடுக்கவாமுடியும் ?

மழுங்கடிக்கப்பட்ட

கத்தியாய் கிடந்தாய்

அறிவு சாணை பிடித்து விட்டது

அறுத்தெறி மடைமைகளை

சதைகளை விற்பனை செய்யும்

கறிக்கடை அல்ல நீ ..

சாமியாகி விட்ட மூலம்

பிரஞ்சத்தின் ஆழம் ..

நீரின்றி  உலகு இல்லை

நீயின்றி ஆண் எது ?

நிமிர்ந்து  நில்

இது  உன் உலகம்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...