தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள இலக்கிய மலரில்

 தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள இலக்கிய மலரில்

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள இலக்கிய மலர் உண்மையில் மிகவும் கனமான ஒரு தொகுப்பு… அளவில் மட்டும் அல்ல… தரத்திலும். இலக்கிய ரசனையில் தேர்ந்தவர்கள் தயாரித்திருக்கிறார்கள் என்பதை தொகுதியின் ஒவ்வொரு பக்கமும் சொல்கிறது. கவிதை, கதை, கட்டுரை, ஆய்வு எனப் பல வகைகளிலும் படைப்புகள் பதிவாகியுள்ளன. இதைத் தொகுத்தவர்களுக்கும் இதில் படைத்தவர்களுக்கும் இப்படி ஒரு தொகுப்பு காரணமான தமிழக அரசுக்கும் என் வாழ்த்துக்கள்.

அதில் இடம்பெற்ற என்னுடைய இரண்டு கவிதைகளை இன்று வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

1.
சரண்
*
காற்றின் வேகம் உன் வேகம்
நேற்று இன்று நாளை எனும்
கால நிலைகளை எல்லாம் பெயர்த்தெறியும் சூறாவளி உன் சொற்கள்.

கன்றின் பசியறிந்து அமுதூட்டும் தாய்மடி உன் நேசமென்றால்
முரட்டுக்காளையின்
முட்டல்களை
அடக்கும் பிடாரி
உன் தாபம் போலும்.

உன் கண்களில் அலையடிக்கும் மறிகடல்
புயற்சீற்றங்களை என்னுள் சுழன்றடிக்கிறது.

மறைவாய் ரகசியமாய்
மருவொன்று மனதில் .

இதழ் வழியே மருந்தொன்று இடுவாய் மடந்தாய்.

நீளும் ஜென்மாந்திரம்
நிறுத்துன்
நயன தீட்சையால்.

அண்டமும் பிண்டமும் ஒன்றென உணர்ந்தேன்
உன் கடைவிழிப் பார்வையிலும்
நுனிவிரல் தீண்டலிலும்.

பஞ்சபூத சாட்சியாய்
ஆகாசத்தில் நிகழட்டும்
நம் ஆன்ம ஆலிங்கனம்.

மனம் மொழி செயல் எனும்
எனும் என் முப்பாதைகளும்
உன் திசை நோக்கியே

சரண் புகுந்தேன் தேவி
எனைக் கதியேற்றுவது இனி நின் கடன்.
*

2.

வழித்துணை
*
மோனாலிசா புன்னகை அழகுதான்
அதற்காக நீயும் அதையே சூடிக்கொள்ள முயலாதே

செம்பருத்தி மலர்வது போல்
நீ சிரிப்பதே வேண்டும் எனக்கு.

மாடத்து விளக்கின் சுடரை மாலையில்தான்
ஏற்றுவாய் வழமையாய்

ஆனால் முப்பொழுதும் என்னுள் ஒளிவீசுவது உனது புன்னகைதான்.

உன் உதட்டில் எரியும் அச்சுடரே
என் இருளில் எப்போதும் நான் ஏந்தும் வழித்துணை.

மர்ம அழகு மனதில் அச்சத்தையும் சேர்த்தே விதைக்கிறது

நான் அதைக் கடந்துவந்ததே பளிச்செனும் உன்
புன்னகையின் ஒளி கண்ட பின்பே.

நீயும் பூடகப் புன்னகை புரியாதே
என் கைவசம் வேறு தீக்குச்சியும் இல்லை.
*

  • பிருந்தா சாரதி

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...