இமாச்சல பிரதேசத்தில் நிகழ்ந்த விபத்தில் சிக்கி மாயமான வெற்றி துரைசாமியின் உடல் மீட்பு..!

 இமாச்சல பிரதேசத்தில் நிகழ்ந்த விபத்தில் சிக்கி மாயமான வெற்றி துரைசாமியின் உடல் மீட்பு..!

சட்லஜ் நதியில் இருந்து சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் 9 நாட்களுக்கு பிறகு இன்று மீட்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி.  தொழில் அதிபரும்,  சினிமா இயக்குநருமான இவர்,  தான் புதிதாக இயக்கவிருந்த திரைப்படத்திற்கு லொக்கேஷன் பார்ப்பதற்காக ஹிமாச்சல பிரதேச மாநிலத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது.  பின்னர் வெற்றி துரைசாமியும் அவரின் உதவியாளருமான கோபிநாத் என்பவரும் காரில் சிம்லா நோக்கி சென்றுள்ளனர்.  கார் கின்னவுர் மாவட்டத்தில் உள்ள கசாங் நாலா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின்,  கட்டுப்பாட்டை இழந்து 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து சட்லஜ் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஆற்றில் விழுந்த காரை கயிரை கட்டி மீட்டனர்.  காரில் பயணித்த மூவரில் ஓட்டுநர் உயிரிழந்த நிலையில்,  வெற்றி துரைசாமியின் உதவியாளர் கோபிநாத் காயங்களுடன் உயிர் தப்பினர்.  ஆனால் வெற்றி குறித்த தகவல் மட்டும் கிடைக்கவில்லை.  இந்நிலையில், உள்ளூர் மக்கள் உதவியோடு விபத்தில் காணாமல் போன வெற்றி துரைசாமியை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர்.

இமயமலை தொடரில் பிறக்கும் சட்லஜ் ஆறு,  சிந்து நதியின் கிளை ஆறுகளில் ஒன்றாகும். ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் இந்தியாவிற்குள் நுழையும் இந்த ஆறு மூன்று பெரிய மலைத் தொடர்களையும் , மிகப்பெரிய பள்ளத்தாக்குகளையும் கடந்து செல்கிறது.  சட்லஜ் ஆறு செல்லும் வழிகள் யாவும் கரடுமுரடான பாறைகளை கொண்ட பகுதிகளாகவே உள்ளது.  பனிப்பாறைகளில் இருந்து உருவாகும் இந்த ஆற்றில் நீரோட்டம் எப்போதும் அதிகரித்தே காணப்படுவது வழக்கம்.  விபத்து நிகழ்ந்த பகுதியில் கடும் பனிப்பொழிவானது தற்போது ஏற்பட்டுள்ளதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து, வெற்றி துறைசாமியின் உடலை தேடும் பணியில் போலீஸ்சார் மும்முரமாக ஈடுபட்டனர்.

இந்நிலையில்,  தீவிர தேடுதலுக்கு பிறகு சட்லஜ் நதியில் இருந்து வெற்றி துரைசாமியின் உடல் 9 நாட்களுக்கு பிறகு இன்று மீட்கப்பட்டது.  கடந்த பிப்.4ம் தேதி கட்டுப்பாட்டை இழந்த கார் சட்லஜ் நதியில் கவிந்து விபத்துக்குள்ளாகி வெற்றியின் உடல் மாயமான நிலையில், விபத்து நடந்த இடத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தூரத்தில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...