சென்னையில் 13 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் – இன்டர்போல் உதவியை நாடும் சென்னை போலீஸ்..!
சென்னையில் 13க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் இன்டர்போல் உதவியை நாட சென்னை போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
சென்னையில் உள்ள பிரபல பள்ளிகளான கோபாலபுரம் டிஏபி ஆண்கள் பள்ளி, பெண்கள் பள்ளி, திருமழிசை, அண்ணாநகர், முகப்பேரில் உள்ள சென்னை பப்ளிக் ஸ்கூல், ஆர்.ஏ. புரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஸ்ரம் பள்ளி, பூந்தமல்லி, பெரம்பூர், எழும்பூர் ஆகிய இடங்களில் உள்ள சனா ஸ்மார்ட் பள்ளி, பாரிமுனையில் உள்ள செயிண்ட் மேரீஸ் பள்ளி உள்ளிட்ட 13 க்கும் மேற்பட்ட பள்ளிகளின் இமெயிலுக்கு நேற்று காலை 10.40 மணிக்கு ஒரு மெசேஜ் வந்தது.
அந்த மெசேஜில் இந்த பள்ளியில் 2 சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இது வெடித்து சிதறுவதற்கு முன்னர் மாணவர்களின் உயிரை காத்துக் கொள்ளுங்கள். நான் சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என குறிப்பிட்டிருந்தது.
இதையடுத்து பதறிய பள்ளி நிர்வாகத்தினர் போலீஸுக்கு தகவல் அளித்தனர். இதனிடையே பள்ளி மாணவர்களை மைதானங்களுக்கு பள்ளி நிர்வாகத்தினர் வரவழைத்தனர். மேலும் பெற்றோர்களுக்கும் வெடிகுண்டு விஷயத்தை சொல்லாமல் பிள்ளைகளை வந்து அழைத்து செல்லுமாறு கூறிவிட்டனர்.
இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள், வெடிகுண்டை செயலிழக்க வைக்கும் குழுவினர், போலீஸார் பள்ளிகளுக்கு சென்றனர். அங்கு வெடிகுண்டை நிபுணர்கள் தேடினர். அது போல் போலீஸார் பள்ளிகளுக்கு வந்த இமெயில் மிரட்டலை பார்த்த போது அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான மெசேஜ் சென்றுள்ளது தெரியவந்தது.
[email protected] என்ற முகவரியிலிருந்து மெயில் வந்துள்ளது. இதனிடையே பள்ளிகளில் வெடிகுண்டு ஏதும் இல்லை என்றும் இது வதந்தி என்றும் சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் நேற்று மாலைக்குள் அந்த நபரை பிடித்துவிடுவோம் என கூறியிருந்தனர்.
ஆனால் அந்த நபரின் ஐபி முகவரியை கண்டுபிடிக்க முடியவில்லை. அது தெரியாதபடி அந்த நபர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளதாக சைபர் கிரைம் போலீஸார் தெரிவித்தனர். மேலும் அங்கீகரிக்கப்படாத நெட்வொர்க் நிறுவனத்தின் இணையத்தை அந்த நபர் பயன்படுத்தியிருக்கலாம் என தெரிகிறது.
இதையடுத்து பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை பிடிக்க இன்டர்போல் உதவியை நாட போலீஸார் முடிவு செய்துள்ளனர். மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூலம் இன்டர்போல் போலீஸாரின் உதவியை நாட சென்னை போலீஸார் முடிவு செய்துள்ளனர். அது போல் வெளிநாடுகளில் தனியார் நெட்வொர்க்கை பயன்படுத்தி அந்த நபர் மெயில் அனுப்பியிருக்கலாம் என தெரிகிறது. அவரை பிடித்தால்தான் ஒரே நேரத்தில் இத்தனை பள்ளிகளுக்கு ஏன் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார் என்பதை அறிய முடியும்.