இந்தியாவின் 75வது குடியரசு தின கொண்டாட்டம்- பிரான்ஸ் அதிபர் இமானுவேல் பங்கேற்பு!
நாட்டின் 75வது குடியரசு தின கொண்டாட்டம் இன்று டெல்லியின் கடமை பாதையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். எனவே டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டிருக்கிறது.
இந்தியாவின் 75வது குடியரசு தினம் நாடு முழுவதும் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு மூவர்ண கொடியை ஏற்றுகிறார். இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். விழாவின்போது பிரம்மாண்ட அணிவகுப்பு நடத்தப்படும். இந்த அணிவகுப்பில் தலைமை விருந்தினராக பங்கேற்க நட்பு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பது வழக்கம்.
அந்தவகையில், இன்றைய நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, அமெரிக்கா அதிபர் ஜோ பிடனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர் பங்கேற்கவில்லை. இதையடுத்து, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர் அழப்பை ஏற்று இன்று விழாவில் பங்கேற்கிறார்.
குடியரசு தினவிழாவில் பங்கேற்பதற்காக அவர் நேற்று ராஜஸ்தான் மாநிலம் ஜெயப்பூருக்கு வந்திருந்தார். அங்கு பிரதமர் நரேந்திர மோடியுடன் இருநாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் டெல்லி வந்த அவர், இரவு டெல்லியில் தங்கியுள்ளார். இந்த ஆண்டு குடியரசு தின கொண்டாட்டத்தில் மேக்ரோன் பங்கேற்பதன் மூலம், சிறப்பு விருந்தினராக பங்கேற்கும், பிரான்சைச் சேர்ந்த 6வது அதிபர் என்ற சிறப்பை அவர் பெறுகிறார்.
இந்த குடியரசு தின அணிவகுப்பில் பிரான்ஸ் ராணுவக்குழுவும் பங்கேற்க உள்ளது. டெல்லி குடியரசு தின விழாவில் மாநில அரசுகளின் அலங்கார ஊர்திகளும் இடம் பெற உள்ளது. கடமை பாதையில் இந்த அலங்கார ஊர்திகள் அணிவகுத்து செல்லும். விழா ஏற்பாடுகளை கடந்த 2 மாதங்களாக முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த முறை அலங்கார ஊர்தியில் செங்கல்பட்டு மாவட்டம் உத்திரமேரூர் கல்வெட்டு காட்சிப்படுத்தப்பட உள்ளது. கலை நயத்துடன் தயாராகி உள்ள தமிழக அரசின் இந்த அலங்கார ஊர்தி அணிவகுப்பில் கம்பீரமாக இடம் பெற உள்ளது.
டெல்லி, பஞ்சாப் மாநில அரசுகளின் அலங்கார ஊர்திகள் இந்தாண்டு பங்கேற்கவில்லை. குடியரசு தினவிழாவை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. துப்பறியும் நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் செங்கோட்டை முழுவதும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தி வருகின்றனர். செங்கோட்டை பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளன. முக்கிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 70,000 பாதுகாப் புப்படையினர்பாதுகாப்புப்பணி யில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு குடியரசு தின கொண்டாட்டத்தில் நாட்டின் பெண்களின் சக்தி மற்றும் ஜன நாயக கோட்பாடுகள் எடுத்துரைக்கப்பட உள்ளன. சுமார் 90 நிமிடங்கள் நடை பெறும் குடியரசு தின அணிவகுப்பில் முதல் முறையாக முப்படைகளில் உள்ள பெண் படைப் பிரிவினர் பங்கேற்கின்றனர். ராணுவத் தளவாடப் பிரிவில் முதல்முறையாக பணியமர்த்தப்பட்ட 10 பெண் அதிகாரிகளில் தீப்தி ராணா, பிரியங்கா செவ்டா ஆகியோர் பினாகா ராக்கெட் அமைப்பு மற்றும் குண்டுகளைக் கண்டறியும் ரேடார் அமைப்புடன் பங்கேற்கின்றனர்.
வழக்கமாக இடம்பெறும் ராணுவப் பிரிவு பேண்ட் வாத்தியங்களுக்குப் பதிலாக 100-க்கும் மேற்பட்ட பெண் இசைக் கலைஞர்கள் நாதஸ்வரம், நகாடா போன்ற இந்திய இசை வாத்தியங்களை இசைக்க உள்ளனர். இந்திய விமானப் படையைச் சேர்ந்த 15 பெண் விமானிகள் விமான சாகசங்களை நிகழ்த்துகின்றனர். அதேபோல 40 ஆண்டுகளுக்குப் பிறகு குடியரசு தின கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக பாரம் பரிய சாரட் வண்டியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வர உள்ளார்.
40 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சாரட் வண்டி நிகழ்வு நடைபெற உள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்பிறகு, தேசியக் கொடியை குடியரசுத் தலைவர் ஏற்றி வைத்து, முப்படை வீரர்களின் அணிவகுப்பை ஏற்க உள்ளார்.