மரணமே உனக்குக் காது கேட்காதா?

 மரணமே உனக்குக் காது கேட்காதா?

மரணமே உனக்குக் காது கேட்காதா?
*
பறந்த குயிலே வந்துவிடு
நீ பிறந்த கிளைக்குத் திரும்பிவிடு
*
நீ பாடிய கானங்கள்
இன்னும் எங்கள் காதுகளில்

உன் பாடலின் சொற்கள்
இந்தக் கானகத்தில்

நீ சென்றதெங்கே அவசரமாய்
யார் அழைத்தது உன்னை அந்த வானகத்தில்?
*
மயில் போல பொண்ணு ஒன்னு …
மறக்கமுடியுமா

என்னைத் தாலாட்ட வருவாளா என்று கேட்டுவிட்டு ஏன் இப்படி உறங்கி விட்டாய்?

ஒளியிலே தெரிவது
தேவதையா?

அந்த ஒலி மட்டும் உலவுகிறது
எங்கே போனது அதன் ஒளி ?
*
கூட்டை விட்டுக் குயில் பறந்துவிட்டது

அந்தக் குயில்
குடியிருந்த ஆலமரம்
ஆயிரம் கரங்களை நீட்டி
அரற்றுகிறது

அந்தக் குயில் விட்டுச் சென்ற பாடல்களை
இசைத்துக் கொண்டு இருக்கின்றன இலைகள்

வெற்றுக் கூடு
வேடிக்கை பார்க்கிறது

காலைப் பனித்துளிகள் வழிகின்றன
கண்ணீர் துளிகளாக.
*
முரட்டு மரணமே
முட்டாள் வேடனே
உனக்கு இதயம் இல்லை என்பது எங்களுக்குத் தெரியும்
காது கூடவா இல்லை?

சிறு குயிலை ஏன்
இப்படி வேட்டையாடினாய்?

பைத்தியம் பிடித்த காலனே
முதலில் உனக்கு வைத்தியம் பார்க்க வேண்டும்!
*
இசைக்குயில் #பவதாரிணி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்!
*
பிருந்தா சாரதி

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...