லயோலா கல்லூரிக் கலைத் திருவிழா
திருவண்ணாமலை மாவட்டம் #வேட்டவலத்தில் அமைந்துள்ள லயோலா கல்லூரிக் கலைத் திருவிழாவின் நிறைவு விழாவில் இயக்குனர் நண்பர் #என்லிங்குசாமி யோடு நானும் கலந்து கொண்டேன்.
திறந்த வெளிக் கலையரங்கத்தில் ஏறக்குறைய அறுநூறு எழுநூறு மாணவ மாணவிகளும் கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினரும் கலந்துகொண்டனர்.
கிராமப்புற மாணவர்களை மிகுதியாக கொண்டது இக்கல்லூரி. இப்படி ஒரு சேவையைக் கிராமப்புறப் பகுதியில் நடத்துவதற்காக லயோலா கல்லூரி நிர்வாகத்தைப் பாராட்ட வேண்டும். கணினி அறிவியல், வணிகவியல், தமிழ் ஆங்கில இலக்கியம் உள்ளிட்ட பல துறைகள் இக்கல்லூரியில் பாடப்பிரிவுகளாக உள்ளன.
இயக்குனர் லிங்குசாமி தான் இயக்கிய #ஆனந்தம் முதல் #வாரியர் வரையான திரைபடங்களைப் பற்றிய அனுபவங்களை மாணவர்களோடு பகிர்ந்துகொண்டார். பிறகு மாணவர்களைக் கேள்விகள் கேட்கச் சொல்லிப் பதில் அளித்தார். அது ஒரு உரையாடலைப் போல நீண்டு மாணவர்களைக் கொண்டாட வைத்தது.
நான் சமூக ஊடகங்களை மாணவர்கள் எந்த அளவு பயன்படுத்த வேண்டும்? என்றும்,
பெற்றோர் மற்றும் ஆசிரியர்களோடு இன்றைய இளைஞர்களுக்கு இருக்கும் முரண்பாடுகள் குறித்தும் சிறிது பேசி எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களின் ‘மரி என்ற ஆட்டுக்குட்டி’ என்ற சிறுகதையை எடுத்துக் கூறினேன்.
ஒரு முரட்டுத்தனம் கொண்ட மாணவியின் இதயத்தை ஓர் ஆசிரியர் எப்படி நெகழ வைக்கிறார் என்பதுதான் அந்தச் சிறுகதை. ரோஜா பூக்காத போது அது ஒரு முட்செடி. பூத்த பிறகு அதுவே ஒரு பூச்செடி. அன்பு மலர்கிற வரை எல்லா மனிதர்களுமே முட்செடிகளாகத்தான் தோன்றுவார்கள். அன்பு எனும் சிறிய மலர் பூத்து விட்டாலோ வாழ்க்கையே ஒரு பூங்காவாகவிடும்.
அன்பின் மூலமே எல்லா முரண்பாடுகளையும் தீர்க்க முடியும் என்று அந்தக் கதை கூறும் செய்தியைச் சொல்லி,
‘காலம் கடந்து கொண்டிருக்கிறது அவசரமாக அன்பு செய்யுங்கள்’ என்ற #அன்னை #தெரசா இவ்வுலகிற்கு அளித்த அருட்செய்தியை மாணவர்களோடு பகிர்ந்து கொண்டு,
அன்பைக் கோருபவர்களாக அல்லாமல் அன்பைத் தருபவர்களாக நாம் இருந்துவிட்டால் இந்த உலகமே வெளிச்சமாகிவிடும் என்றேன்.
பின் போட்டியில் வென்ற மாணவ மாணவியர்களுக்குக் கேடயமும் பரிசுகளும் வழங்கினோம்.
இயக்குனர் லிங்குசாமி மனைவியோடு விழாவுக்கு வந்திருந்தார்.
நேற்று (24 ஜனவரி) இயக்குனர் #லிங்குசாமி யின் 25 -வது திருமண நாள் என்பதைக் கூறியதும் உடனடியாக மேடையில் கேக் வரவழைத்து #லயோலா கல்லூரி நிர்வாகமும் பேராசிரியர்கள் மாணவர்களும் விமரிசையாக கொண்டாடியது மிகவும் சிறப்பாக அமைந்தது . அவர்களை அனைவரும் வாழ்த்தி மகிழ்ந்தோம்.
இருவரும் இந்த நாளை வாழ்வில் மறக்க மாட்டார்கள்.
இந்த விழாவில் நாங்கள் கலந்துகொள்ளக்
காரணமான பங்குத்தந்தை பேராசிரியர் இஞ்ஞாசி அவர்களுக்கும், முதல்வர் , செயலாளர், பொருளாளர், பேராசிரியர்கள் , மாணவ மாணவியர் உள்ளிட்ட வேட்டவலம் லயோலா கல்லூரிச் சுற்றத்திற்கும் இதயம் நிறைந்த இனிய நன்றிகள்.
*
பிருந்தா சாரதி
*