“நான் ஏன் பிறந்தேன் – நாட்டுக்கு நலமென்ன புரிந்தேன்
ஜனவரி_17_2024
“நான் ஏன் பிறந்தேன் – நாட்டுக்கு நலமென்ன புரிந்தேன்
என்று நாளும் பொழுதும் வாழும் வரையில்
நினைத்திடு என் தோழா
நினைத்து செயல்படு என் தோழா”
ஆமாம், அழுத்தமாக, அதே நேரம் எளிமையாக, இனிமையாக தன் கருத்துக்களை பாடல்களால், காட்சிகளால், வசனங்களால் சொல்லி கோடிக்கணக்கான உள்ளங்களிலே குடி புகுந்து, மறைந்தும் மறையாமல் வாழும் பொன் மனச்செம்மல், மக்கள் திலகம், புரட்சித் தலைவர், பாரத் ரத்னா, என்றும் தமிழக மக்கள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களின் 107ஆவது பிறந்த தினம் இன்று 17-01-2024.
என்னைப்போன்ற கோடிக்கணக்கான உள்ளங்களிலே அவர் குடிபுகக் காரணம் என்ன? முதலாவது அவரின் ஆண்மை மிக்க, அதே நேரம் வசீகரம் தவழும் இனிமையான முகத்தோற்றம் கொண்ட அவரது அழகு. இரக்கம் மிகுந்த நம்பிக்கையூட்டும் அவரின் குரல்.
அவரின் காதல் காட்சிகளிலே நளினமும், இளமைத் துள்ளலும் இருந்தன. அருவருப்பும், ஆபாசமும் இருந்ததில்லை. பெண்களை வர்ணித்தார், ஆனால் கொச்சைப்படுத்தியதில்லை. தாய்மையைப் போற்றினார், ஆனால் கேவலப்படுத்தியதில்லை. சண்டைக் காட்சிகளிலே சாகசமும், வீரமும் இருந்தன. வன்முறையோடு கூடிய பழிவாங்கலும், கொடூரமும் இருந்ததில்லை.
இளைய தலைமுறைக்கு, கற்றோருக்கு அதிக மதிப்பளித்தார். அவர்களை நல்வழிப்படுத்தி, எதிர்கால பாரத சிற்பிகள் உருவாவதில் அளவு கடந்த நம்பிக்கை வைத்தார்.
பாடல்களிலே இசையோடு இனிமை போட்டியிடும். ஏனென்றால் அப்படி ஒரு அலாதியான இசைப்பிரியர் அவர். நகைச்சுவைக் காட்சிகளில் கூட அதிக ஈடுபாடு காட்டினார். இனிமையான சுபாவத்துக்கு நகைச்சுவை அடிப்படை என்பது அவரின் அசைக்க முடியாத நம்பிக்கை.
அவர் காட்சியில் தோன்றும்போது, அவரை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த லட்சக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன் என்பதை சொல்வதில் எனக்கு பெருமைதான். “தம்பி” என்று அழைத்து அவர் பேசும்போதெல்லாம் என் தந்தை, என் ஆசான், என் அண்ணன் என்னிடம் நேரடியாகப் பேசுவதைப் போலவே உணர்வேன்.
என்னிடம் இயல்பாகவே இருக்கின்ற அன்பு, இனிமை, நட்பு, கருணை, மனித நேயம், அசாதாரணம் கண்டால் கோபம் – இவை எல்லாமே அவரால் மெருகூட்டப்பட்டு சிறப்படைந்திருக்கின்றன என்றால் அவை மிகையல்ல.
திரையுலகிலும், அரசியலிலும் தான் சந்தித்த அனைத்து சவால்களையும் வெற்றி கண்டு, தமிழக முதல்வராகி, பதினொரு ஆண்டுகள் நல்லாட்சி தந்த சாதனையாளர் அவர். “இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்” என்ற அவரின் வரிகளுக்கு அவரே இலக்கணமாகி வரலாறானவர்.
“பிரச்சனைகளைக் கண்டு அழும் ஆண் ஒரு கோழை” என்று சொன்ன அவரின் இப்பிறந்த நாளிலே அவருக்கு பாத வணக்கம் செய்து மகிழ்கிறேன். பொன்மனச் செம்மலே, என்றும் உங்கள் வழியிலே நான். ♥♥♥
வாழ்க மக்கள் திலகத்தின் நாமம், ஓங்குக அவர் புகழ் என்றென்றும்!!!
வரலாற்று நாயகன், புரட்சித் தலைவர், மக்கள் திலகம், பொன் மனச் செம்மல், ஏழைகளின் இதய தெய்வம், தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர், அவர்களின் 107ஆவது பிறந்த நாளாம் இன்று அவரின் பாதம் பணிந்து வணக்கம் சொல்லி, அனைத்துத் தமிழ் நெஞ்சங்களோடும் இணைந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
அறிவுரை சொல்வது, “பஞ்ச் டயலாக்” பேசுவது இதெல்லாம் ஒன்றும் பெரிய விஷயமல்ல, அதையே வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழ்ந்து காட்டுவதுதான் பெரிது. அதை மக்கள் திலகம் செய்து காட்டியதால்தான் இன்றும் நம் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். என்றும் வாழ்வார்.
குறை சொல்பவர்கள், குற்றம் கண்டு பிடிப்பவர்கள் மத்தியிலே, புத்தர், யேசு பிரான், காந்திஜி, நேருஜி, அறிஞர் அண்ணா இவர்கள் கூடத் தப்பவில்லையே! ஆக, சுடச் சுடத்தான் சங்கு வெண்மை பெறும் என்பது போல தீவிரமான, கடுமையான விமர்சனங்கள்தான் அவரை இந்தளவுக்கு உயர்த்தியது என்றால் அது மிகையாகாது.
இங்கே ஒரு விடயத்தை அழுத்தமாகப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருக்கிறேன். பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் விமர்சனத்திற்கு ஆட்படுவது சாதாரணமே. என்றாலும் காழ்ப்புணர்ச்சியோடு தரமற்ற விதத்தில் யாரையும் விமர்சிப்பது பண்பாடாகாது.
பல தடவைகள் இங்கே சொல்லியிருக்கிறேன் – “எனக்கு அவரின் கட்சியிலோ, அரசியலிலோ ஈடுபாடு இல்லை. அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் எனக்கு அக்கறை இல்லை.” (யாருக்குத்தான் தனிப்பட்ட, அந்தரங்க வாழ்க்கை இல்லை? மனசாட்சியைக் கேட்டால் சொல்லும் ‘நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா?’ என்று) ஒரு மனிதனாக, நடிகராக என்னைப் போல பல லட்சக் கணக்கான பேரின் பாதை சீர்பட, அவரின் படங்கள், பாடல்கள், வசனங்கள், ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் வழியாக அவர் காரணமாக இருந்திருக்கிறார் என்பதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.
அவரின் பத்து வருட கால ஆட்சியில் தமிழகம் ஒன்றும் நிகர் இல்லாதபடி முன்னேறி விடவில்லைதான். ஆனால் ஜாதிக் கலவரம் இருக்கவில்லை. ஜாதிக் கட்சிகள் தோன்றவில்லை. எதிலுமே கட்டுப்பாடு இருந்தது. அரசாங்க அமைச்சர்கள் மக்களிடம் நெருக்கமாக இருந்தார்கள். அடாவடித்தனம் இருக்கவில்லை. மக்கள் பணம் கோடிக்கணக்கில் சூறையாடப்படவில்லை. ஏன், அவருக்கே அவரின் திரையுலக சம்பாத்தியத்தில் அவர் வாங்கிய ராமாவரம் தோட்டம் மட்டுமே சொந்தமாக இருந்தது.
நான் ஒரு சவாலாகவே சொல்கிறேன். எங்கேயாவது, பொது இடத்திலோ, தனிப்பட்ட இடத்திலோ, சட்ட மன்றத்திலோ, ஏன், அவரது திரைப்படங்களிலோ யாரையாவது அவர் தரக் குறைவான, கீழ்த்தரமான வார்த்தைகளால் பேசி இருந்தார் என உங்களால் நிரூபிக்க முடியுமா?
‘கண்ணியம்’ என்ற தாரக மந்திரத்தை உரைத்த பேரறிஞர் அண்ணாவின் உண்மையான தம்பியாக இருந்து காட்டியவர் மக்கள் திலகம்.
“மத்தவங்க திருந்தறதுக்கு வழிகாட்டியா இருக்கணுமே தவிர, கெட்டுப் போறதுக்குக் காரணமா இருக்கக் கூடாது” என்ற அவரின் வசனத்திற்கு உதாரணமாக வாழ்ந்து மறைந்தவர் அவர்.
போகட்டும், இந்த நாளில் அவரை நினைவு கூர்ந்து அவர் காட்டிய தன்னம்பிக்கை, உழைப்பு, அன்பு, இரக்கம், நட்பு, பண்பாடு, வீரம், துணிச்சல் இவற்றோடு இனிமை – இவையனைத்தையும் நம் வாழ்விலும் என்றும் கடைப்பிடித்து அவர் புகழ் காப்போம்.
வாழ்க மக்கள் திலகம் நாமம், ஓங்குக அவர் புகழ் என்றென்றும்!!!
by