பாரத ரத்னா எம்.ஜி.இராமச்சந்திரன் பிறந்த தினம் இன்று (ஜனவரி 17, 1917).
தொடர்ந்து மூன்று முறை தமிழகத்தில் வெற்றி பெற்று முதலமைச்சரான பாரத ரத்னா எம்.ஜி.இராமச்சந்திரன் பிறந்த தினம் இன்று (ஜனவரி 17, 1917).*
எம்.ஜி.இராமச்சந்திரன் (Maruthur Gopalan Ramachandran) ஜனவரி 17, 1917ல் இலங்கையில் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டி என்ற இடத்தில் கோபாலன் மேனன், சத்யபாமா ஆகியோருக்கு 5 வது மகனாகப் பிறந்தார். அவருடைய தந்தை மருதூர் கோபாலன் மேனன் வழக்கறிஞராக கேரளாவில் பணியாற்றி வந்தார். அதன் பிறகு அந்தமான்தீவில் உள்ள சிறையில் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்து வந்தார். அப்போது ஆங்கிலயர்களின் அடக்கு முறை ஆட்சி என்பதால் தினமும் சுமார் 20 சிறை கைதிகளுக்கு தூக்குத் தண்டனை அளிக்கும் குற்றவியல் நீதிபதியாக இருந்தார். பின்பு மனைவி சத்யபாமா, இந்த உயிரை எடுக்கும் வேலை நமக்கு வேண்டாம் என்று கூற அந்த நீதிபதி வேலையை இராஜினாமா செய்து விட்டார். அந்த இராஜினாமாவை ஏற்று கொள்ளாத ஆங்கிலயர்கள் பயங்கர சூழ்ச்சிக்கு கோபாலன் மேனனை ஆளாக்கினர். அதற்கு காரணமாக ஆங்கிலேயர்களுக்கு சொந்தமான ஆயுதக் கப்பலுக்கு டைனமெட் வெடி வைத்ததாகக் கூறி பொய்யான புகாரில் சிறிது காலம் கோபாலன் மேனனை சிறையில் அடைத்தனர். அதன் பிறகு அவர் குடும்பத்துடன் இலங்கையில் உள்ள கண்டிக்கு அருகே நாவலப்பிட்டியில் குடியேறினார்கள். பின்பு அவரது நண்பர் வேலுபிள்ளை அவர்கள் காவல் துறையில் பணியாற்றிவந்தார். அவரின் உதவியுடன் அங்குள்ள ஒரு சிங்கள பள்ளியில் தலைமை ஆசிரியர் ஆக பணிபுரிந்து வந்தார்.
தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்தில் தனது தம்பி நாராயணன் உதவியுடன் தனது இரண்டு பிள்ளைகளுடன் குடியேறினார். குடும்ப சூழ்நிலைகளின் காரணமாகப் படிப்பைத்தொடர முடியாததால் இவர் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். இவருடன் சக்ரபாணி என்ற சகோதரரும் நாடகத்தில் நடித்தார். நாடகத்துறையில் நன்கு அனுபவமான நிலைமையில் திரைப்படத்துறைக்குச் சென்றார். திரைப்படத்துறையில் தனது அயரா உழைப்புக் காரணமாக முன்னேறி முதன்மை நடிகரானார். இவரது நடிப்பு பெரும் எண்ணிக்கையிலான மக்களைக் கவர்ந்தது. எம்.ஜி.ஆர் முதலில் தங்கமணியை மணந்தார். பிரசவத்திற்காகத் தாய் ஊருக்குச் சென்ற தங்கமணிக்கு குழந்தை இறந்தே பிறந்தது. அதன் பின் தங்கமணியும் உடல்நலக் குறைவினால் இறந்தார். அதன் பிறகு சதானந்தவதியை மணந்தார் எம்.ஜி.ஆர். இருவருக்கும் குழந்தைகள் இல்லை. பின்னர் சதானந்தவதி நோய்க் காரணமாக இறந்தார். இரண்டாவது கதாநாயகனாகத் தியாகராஜ பாகவதர் தயாரித்த ராஜ முக்தி படத்தில் நடித்தார். அப்படத்தில் வைக்கம் நாராயணி ஜானகி என்னும் வி.என்.ஜானகி கதாநாயகியாக நடித்தார். அவர் முதல் மனைவியான தங்கமணி சாயலில் இருந்தார். இதனால் ஜானகியின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. அவ்வீர்ப்பு மோகினி படத்தில் சேர்ந்து நடித்தபொழுது இருவரும் நெருங்கிப் பழகினர். 1950 ஆம் ஆண்டில் மருதநாட்டு இளவரசி படத்தில் கதைத் தலைவனாக எம்.ஜி.ஆர்.வும் கதைத்தலைவியாக ஜானகியும் நடிக்கும்பொழுது காதலாக மாறியது. அக்காலகட்டத்தில் ஜானகிக்கு எழுதப்பட்ட காதற்கடிதங்கள் ஜானகியின் முதற்கணவரான கணபதிபட்டிக் கைகளில் கிடைத்தன. கணபதிபட்டிற்கும் ஜானகிக்கும் இடையில் சண்டை முற்றியது. கேரளாவில் ஒரு கோவிலில் சில நண்பர்கள் முன்னிலையில் எம்.ஜி.ஆர்.வும் ஜானகியும் மாலை மாற்றிக் கொண்டனர். ஜானகிக்கு மகனான அப்பு என்ற சுரேந்திரனை தன் வளர்ப்பு மகனாக ஏற்றுக்கொண்டார். மூன்று திருமணங்கள் என்றாலும் எம்.ஜி.ஆருக்கு குழந்தைகள் இல்லை.
1936ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும், 1947ல் அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார். இவருடைய சக நடிகர்களுள் ஒருவரான எம். ஆர். ராதாவினால் சுடப்பட்டுத் தெளிவாகப் பேசும் திறனை இழந்தபோதும் அவருடைய நட்சத்திர வலிமை குறையவேயில்லை. இச்சம்பவத்திற்குப் பின்னார் முதன் முதலாக வெளிவந்த காவல்காரன் திரைப்படமானது மாபெரும் வெற்றிப் படமாகவும், திரையுலகில் அவரது ஆளுமையை மீண்டும் நிலை நிறுத்தும் நிகழ்வாகவும் அமைந்தது. 1971 ஆம் ஆண்டின் அகில இந்திய சிறந்த நடிகராக, எம்.ஜி. ஆரை மத்திய அரசு தேர்வு செய்து, “பாரத்” விருதை வழங்கியது. இது சத்யா மூவிஸ் தயாரிப்பான ரிக்சாக்காரன் படத்தில் நடித்ததற்காகக் கிடைத்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 12 தியேட்டர்களில் 100 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை ஓடி, வசூலைக் குவித்தது. அவர் நடித்துக் கடைசியாக வெளி வந்த திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் ஆகும். தனது திரைப்பட நிறுவனத்தின் கீழ் எம்.ஜி.ஆர். மூன்று படங்களைத் தயாரித்தார்: நாடோடி மன்னன், அடிமைப் பெண் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன். நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய திரைப்படங்களை அவரே இயக்கினார்.
எம்.ஜி.ஆர். ஒரு மலையாளியாக இருந்தும், ஒரு முன்னணித் தமிழ்த் தேசியவாதியாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராகவும் திகழ்ந்தார். அக்கட்சியின் பொருளாளராகவும் நீண்ட காலம் பணியாற்றினார். கருணாநிதியுடன் நட்பாக இருந்தார். சி.என்.அண்ணாத்துரையின் மறைவுக்குப் பின், மு.கருணாநிதி முதலமைச்சரானதைத் தொடர்ந்து இடம்பெற்ற சம்பவங்களால் ஏற்பட்ட முரண்பாடுகள் எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு வெளியேறினார். 1972ல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியொன்றை அவர் ஆரம்பித்தார். பின்பு அக்கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழமாக மாறியது. முதன் முதலாகப் போட்டியிட்ட திண்டுக்கல் பகுதியில் பெரும் வெற்றி பெற்றது. திரைப்படங்களின் மூலம் அவரடைந்த புகழும், அவருடைய வசீகரமான தோற்றமும், சமூகத் தொண்டனாகவும், ஏழைகள் தோழனாகவும், கொடையாளியாகவும், வீரனாகவும் நடித்ததன் மூலம் பெற்றுக் கொண்ட நற்பெயரும், அவர் மிக விரைவில் மக்களாதரவைப் பெற உதவின. 1977ல் நடைபெற்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுத் தமிழ் நாட்டின் முதலமைச்சரானார். 1984ல் கடுமையாக நோய்வாய்ப்பட்டும், தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தல் பிரசாரத்திற்கே வராமல் முதலமைச்சர் ஆன ஒரே முதல்வரானார். எம்.ஜி.ஆர். 1984ல் இவரது ஆட்சிக்காலத்தில் மதுவிலக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. 1987 வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்துப் பதவியிலிருக்கும் போதே காலமானார். மறைவிற்குப் பின் அவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
எம்.ஜி.ஆர். கட்சி 1988ல் பிரிந்து 1989ல் இணைந்தது. 1991 முதல் 1996 வரையிலும், 2001 முதல் 2006 வரையிலும் 2011 முதல் இன்று வரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஜெ.ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைத்திருக்கிறது. இவர் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் திராவிடக் கட்சியில் இருந்தபோதிலும் தமிழ்நாட்டில் பலர் இவரைக் கடவுள் போலவே போற்றினார்கள். இவர் இறந்து 29 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும் இவருக்காகவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களிப்பவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். இது அவருக்கு மக்கள் மத்தியிலிருந்த பெரும் செல்வாக்கைக் காட்டுகிறது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் என்பது எம்.ஜி.ஆரால் பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு வழங்க தொடங்கப்பட்ட திட்டமாகும். இத்திட்டம் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது தமிழ்நாட்டில் முழுமையாக செயற்படுத்தப்பட்டது. விதவை ஆதரவற்ற பெண்களுக்குத் திருமண உதவி, தாலிக்கு தங்கம் வழங்குதல், மகளிருக்கு சேவை நிலையங்கள், பணிபுரியும் பெண்களுக்குத் தங்கும் விடுதிகள், தாய் சேய் நல இல்லங்கள், இலவச சீருடை வழங்குதல் திட்டம், இலவச காலணி வழங்குதல் திட்டம், இலவச பற்பொடி வழங்குதல் திட்டம், இலவச பாடநூல் வழங்குதல் திட்டம், வறட்சிக் காலத்தில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்குகின்ற திட்டம் போன்ற திட்டங்களைச் செயல்படுத்தினார்.
1921ம் ஆண்டு தமிழ் மொழிக்கு எனத் தனியே ஒரு தமிழ்ப் பல்கலைக் கழகம் வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய உமாமகேசுவரனார் பிறந்த தஞ்சையில், தீர்மானம் இட்ட அறுபது ஆண்டுகள் கழித்து தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவினார் எம்.ஜி.ஆர். தமிழ்மொழி, தமிழர்களின் கலை, இசை, நாடகம், ஓவியம், சிற்பம், கட்டிடக் கலை, தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம், மொழியியல், வரலாறு, புவியியல், மெய்யியல், கடலியல், சித்த மருத்துவம், கைவினைக் கலை, உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழை மேம்படுத்த, தமிழர்களின் மரபுப் பெருமையைப் பரப்ப, 1981 இல் அன்று முதலமைச்சராகயிருந்த திரு.எம்.ஜி. இராமச்சந்திரன் முன் முயற்சியில் தமிழக அரசால் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டது. இலங்கையில் இருக்கும் கண்டியில் பிறந்தமையால் தமிழ் ஈழம் குறித்தான ஆர்வமும், செயல்பாடுகளும் எம்.ஜி.ஆரிடம் அதிகம் காணப்பட்டன. ஈழத்திற்காக வெளிப்படையான ஆதரவினை எம்.ஜி.ஆர் தமிழக முதலமைச்சராக இருக்கும் போது தந்தார். விடுதலைப் புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் வெளிப்படையான ஆதரவு அளித்தார் எம்.ஜி.ஆர். ஆயுதம் வாங்கி இலங்கை கொண்டு சென்று தமிழ்மக்களை காப்பாற்ற, முதலில் இரண்டு கோடி ரூபாயை தந்தார். அந்த உதவி இல்லையென்றால் இந்தளவிற்கு இயக்கம் வளர்ந்திருக்க இயலாது என்று பிரபாகரன் பேட்டியில் கூறியிருக்கிறார்.
தொடர்ந்து மூன்று முறை தமிழகத்தில் வெற்றி பெற்று முதலமைச்சரான எம்.ஜி.இராமச்சந்திரன் டிசம்பர் 24, 1987ல் தனது 70வது அகவையில் சென்னையில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் நினைவாகச் சென்னையில் மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடத்துக்கு அருகில் அவரது உடல் புதைக்கப்பட்டது. அந்த இடத்தில் எம்.ஜி.ஆர். நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு எம்.ஜி.ஆரின். மார்பளவுச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் அரிய புகைப்படங்களும், அவருடைய சில பொருட்களும் மக்களின் பார்வைக்கு தனி கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளன. தாமரை மலர் விரிந்த நிலையில் இருப்பது போன்ற அமைப்பின் நடுவே அவர் உடல் வைக்கப்பட்டுள்ள சமாதி உள்ளது. சமாதியின் அருகே நினைவுத்தூண் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில், பல கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் தொண்டர்களும் வந்து அஞ்சலி செலுத்துகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த நினைவிடத்திற்கு வருகை தந்து தங்களின் அன்பு தலைவருக்கு மரியாதை செலுத்துகின்றனர்.
Source By: Wikipedia