படப்பொட்டி – 3வது ரீல் – பாலகணேஷ்
கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி! 1954ம் ஆண்டில் இவர் மறைந்தபோது இவருக்கு வயது 50தான். அதற்குள் பலப்பல சுவாரஸ்யமான சரித்திரக் கதைகளையும், விறுவிறுப்பான சமூகக் கதைகளையும், பேன்டஸிக் கதைகளையும் எழுதிக் குவித்திருந்தார். இவர் மறைந்து 63 ஆண்டுகள் ஆகி, இவரது படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டு, ஏறக்குறைய இவரது நாவல்களைப் பதிப்பிக்காத பதிப்பகங்களே இல்லை என்ற அளவுக்கு அனைவரும் பதிப்பித்தும் இன்றும் பரபரப்பாக விற்பனையாகி வருகின்றன அவரது புத்தகங்கள். ஐந்து தலைமுறைகள் தாண்டி, இன்றைய இளைய தலைமுறையினரும் கல்கியின் எழுத்துக்களைப் பற்றிக் கேள்விப்பட்டு படிக்கிறார்கள் என்றால் அதைவிடக் கல்கியைப் பற்றிப் பெருமையாக என்ன சொல்லிவிட முடியும்..?
கல்கியின் நாவல்களில் மிகப் புகழ்பெற்ற இரண்டு ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் ‘சிவகாமியின் சபதம்’. பொன்னியின் செல்வன் கதையைப் படமாக்க விரும்பிய எம்ஜிஆர் கல்கியின் குடும்பத்தினரிடம் அதற்கான உரிமையைப் பெற்றிருந்தார். 5 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகத் தக்கதாக அவர்கள் உரிமை தந்த கால அவகாசத்திற்குள் அவரால் திரைப்படமாக்க முடியவில்லை என்பதால் மீண்டும் ஓர் ஐந்து ஆண்டுகள் உரிமையைப் புதுப்பித்து விளம்பரம் கூடச் செய்தார் தன் ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்கு. ஆனாலும் கடைசிவரை எம்ஜிஆருக்குக் கனவாகவே போய்விட்டது ‘பொன்னியின் செல்வன்’. பொ.செ எம்ஜிஆருக்கு மட்டுமில்லை, பலர் அதைப் படமாக்க முயன்றும் கை கூடவில்லை அந்த முயற்சி. இப்போதைய ‘மணிரத்ன’ முயற்சியாவது வெற்றியடைந்தால் அனைவருக்கும் சந்தோஷம்.