சென்னை விமான நிலையத்தில் ரூ.1.77 கோடி மதிப்புள்ள 4.44 கிலோ தங்கம்
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.77 கோடி மதிப்புள்ள 4.44 கிலோ தங்கம் பறிமுதல், ஒருவர் கைது
சென்னை, அக்டோபர் 22, 2019
செவ்வாய் அன்று காலை கொழும்பிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த இலங்கையை சேர்ந்த அனந்தா ரீகன் (வயது 37), மேரி சந்திரகலா (வயது 41) ஆகிய இரண்டு பெண்களை வெளிவாயிலில் இடைமறித்து சோதனையிட்டபோது 614 கிராம் எடை கொண்ட ரூ.24.3 லட்சம் மதிப்புள்ள 6 தங்க நாணயங்கள், ஒரு பிரேஸ்லெட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
திங்கட்கிழமை கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், தில்லியிலிருந்து காமராஜர் உள்நாட்டு முனையத்தில் சென்னை வந்திறங்கிய கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ரஜ்ஜக் அகமது (வயது 50) என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையை அடுத்து நடத்திய சோதனையில், அவரது கால்சட்டை பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒவ்வொன்றும் 10 தோலா எடை கொண்ட 20 வெளிநாட்டு தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. மொத்தம் 2.33 கிலோ எடை கொண்ட இந்த தங்கக் கட்டிகளின் மதிப்பு ரூ.92.33 லட்சமாகும்.
இந்த தங்கத்திற்கு உரிய ஆவணங்களை பயணி சமர்ப்பிக்காததை அடுத்து பறிமுதல் செய்யப்பட்டது. சில அடையாளம் தெரியாத நபர்கள் தன்னிடம் தில்லி விமான நிலையத்தில் இந்த தங்கத்தை கொடுத்ததாகவும், அதை சென்னை விமான நிலையத்தில் சிலர் பெற்றுக் கொள்வார்கள் என்றும் கூறியதாக விசாரணையின் போது அவர் தெரிவித்தார். இதையடுத்து சட்ட விரோதமாக தங்கம் கடத்தியதாக அவர் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக திங்கட்கிழமை ஷார்ஜாவிலிருந்து சென்னை வந்த 4 பயணிகள், துபாயிலிருந்து சென்னை வந்த 3 பயணிகளை சோதனையிட்டதில், ஆசன வாயில் மறைத்து எடுத்து வரப்பட்ட 1.5 கிலோ எடை கொண்ட ரூ.60.27 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மொத்தம் 4.44 கிலோ எடை கொண்ட ரூ.1.77 கோடி மதிப்பிலான தங்கம் சுங்கச் சட்டம் 1962-ன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத் துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.