தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு | சதீஸ்

 தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு | சதீஸ்

அடுத்த 24 மணி நேரத்தில் தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுக்கூடும் என்றும், நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை பெய்து கொண்டு இருக்கிறது. தென் மாவட்டங்களில் அவ்வப்போது லேசான முதல் மிதமான மழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்று மற்றும் நேற்று முன் நெல்லை மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக நெல்லை மாவட்டத்தின் மாஞ்சோலை, ஊத்து மற்றும் நாலுமுக்கு பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 10 மி.மீ மழை பெய்துள்ளது.

இந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுக்கூடும் என்றும், நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தொடர்ந்து தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று (31-12-2023) நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (01-01-2024) வடமேற்கு திசையில் நகர்ந்து, அதே பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும்.

இதன் காரணமாக இன்று திங்கட்கிழமை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

இதேபோல் நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது. இதேபோல் நாளை செவ்வாய்க்கிழமை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

வரும் 3 ஆம் தேதி முதல்5 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தொடர்ந்து 6 ஆம் தேதி மற்றும் 7 ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

தமிழக கடலோரப்பகுதிகள்: 01.01.2024 முதல் 05.01.2024 வரை: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

01.01.2024 மற்றும் 02.01.2024: லட்சத்தீவு பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

03.01.2024 மற்றும் 04.01.2024: லட்சத்தீவு பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

05.01.2024: மத்தியகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...