நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் | சதீஸ்
தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக மான நஷ்ட ஈடு வழக்கு தொடர அனுமதி கோரி தாக்கல் செய்த நடிகர் மன்சூர் அலிகானுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.
நடிகை த்ரிஷா மற்றும் நடிகை மடோனா செபாஸ்டின் குறித்து நடிகர் மன்சூர் அலிகான் அருவருக்கத்தக்க வகையில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதைத் தொடர்ந்து நடிகை த்ரிஷா, மன்சூர் அலிகான் பேச்சுக்கு தனது எக்ஸ் தள பக்கத்தில் த்ரிஷா கண்டனம் தெரிவித்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, நடிகை குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்டோர் சமூக வலைதளங்களில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிராகவும், நடிகை த்ரிஷாவுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக நடிகைகள் திரிஷா, குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக நடிகர் மன்சூர் அலிகான் மான நஷ்ட ஈடு வழக்கு தொடர அனுமதி கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
தொடர்ந்து மன்சூர் அலிகானின் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே மூவரும் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டனர். அதனை அவதூறாக கருத முடியாது என நீதிபதி சதீஷ்குமார் தெரிவித்தார். மேலும் பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும்போது அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது மனித இயல்பு. நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும், விளம்பர நோக்கத்திற்காகவும் வழக்கு தொடர்ந்துள்ளார் என மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தது. அபராதத் தொகையை 2 வாரங்களில் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்தவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.