அவர்கள் இவர்கள் நான்

 அவர்கள் இவர்கள் நான்

ஒப்பனை அறை … !

மயில் இறகின் மென்மையை மேனியில் கொண்டவளாக முல்லையும், மல்லியும் இணைந்து வாசனைத் தாலாட்டும் பூமகளாக நின்றிருந்த மாதவி, ஆடல் அரங்கேற்றத்திற்கு அணியமாகிக் கொண்டிருந்தாள்.

மெல்லிய ஆடையை மேலாடையாக அவள் போர்த்தி இருந்ததால், மன்னன் கையில் இருக்கும் செங்கோலின் நுனிக் கலசம் போல, மேலாடையை மீறி மார்பகங்கள் பளிச்சிட்டன. அணிகலன் ஒன்று பாதி மறைத்தபடிக் கிடக்க, வெண்ணிலா முகிலுக்குள் மறைந்து விளையாடுவது போல இருந்தன.

கண்ணனின் இதழையொத்த அவள் மேனியில் சிலம்புகள் பூட்டப்பட்ட போது, காதலின் வெப்பச் சலனம் பூப்படைந்தன. சிலம்புகளும் காமம் கற்றுக் கொள்ளும் என்பது அறியாத் தகவலாக இருந்தது.

பட்டுப் போன்ற துகிலை உடைய மெல்லிய இடையில் முத்துகளாக வடிக்கப்பட்ட மேகலை அணியப்பட்டு, காமத்தின் கடைசி இலக்கணம் முத்திற்குள் சிப்பியென ஒளி ஆட்டம் காட்டின.

மேனியில் பூசப்பட்ட சந்தனமும், குங்குமமும் அழகிய சிற்பம் போலக் காட்சி தர, அவளின் கை விரல்கள் கலை படைக்கும் தச்சனின் பிறப்பாயின.

உரசல் கலையில் உறவாடி நிற்கும் கூந்தல் காதில் பூட்டப்பட்ட வளைவாகிய குண்டலத்துடன், உறவுக்கு வரவா என உரிமைப் போர் தொடுக்க, மாதவியின் சின்ன அசைவில் ஆடிய குண்டலம் வேண்டாம் என மறுப்பைக் கூந்தலுக்குச் சொல்லி, தன் கற்பை நிலை நாட்டியது.

மாதவியின் அழகில் மெய் மறந்து நின்ற அவளின் தாய் மனதிற்குள் துயருற்றுக் கொண்டாள். பரத்தையர் குலத்தில் நீ பிறக்கவில்லை என்றால், அகிலம் உனக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து, உன் முன் மண்டியிட்டிருக்கும் ! ஆடல் அரங்கேற்றம் முடிந்தவுடன் உன் கதையின் அளவுகள்தான் பேசு பொருளாயிருக்கும். மகளே பரத்தையராக ஏனடி வந்து பிறந்தாய் என அங்கலாய்த்தாள்.

மாதவிக்குப் பிற்கால சங்கதிகள் தெளிவாகத் தெரியாததால் நாட்டிய அரங்கேற்றத்தை இன்பத்தின் சுகமாக எண்ணினாள்.

பரத்தையர் குலப் பருவ மங்கை ஆடலில் மனம் கவரப் போகிறாள். யார் முதலில் அவளை நுகர்வது என்ற பித்தில் ஆடவர் கூட்டம் அரங்கத்தில் காத்திருந்தது.

பரத்தையர் என்னும் அடையாளம் வேசியாகப் பார்க்கப்பட்டாலும், அதன் உட்பொருள் வேறு விதமாகச் சித்தரிக்கப்பட்டிருந்தது.

ஆடலிலும், கலையிலும் திறனை வளர்த்துக் கொள்ளும் பரத்தையர் குலப்பெண்கள் இன்பத்திற்காகவும், பணத்திற்காகவும் ஆடவரை விரும்பிச் செல்லுவர். இப்பெண்களின் முதன்மைத் தொழில் கோவில்களில் ஆடல் புரிவது, இவர்களைத் தேவதாசிகள் என்று அழைத்தனர். மாதவியும் தேவதாசி இனத்தைச் சேர்ந்தவளே !

ஆடல் ஆரங்கத்தில் மாதவி பொன் மயிலாள் தோகை விரித்தாள். அவள் காட்டிய ஒவ்வொரு அசைவும் கலையின் உச்ச மொழியாக இருந்தது. காலில் அணிந்திருந்த சிலம்பு முத்துகள் எழும்பிய ஓசைக்கு இணையாக, அவளின் விழிகள் மானாட்டம் போட்டது. புறாக்கூடு மார்பகத்தின் மீது கிடந்த அணிகலன்கள் நழுவி அங்குமிங்கும் செல்ல, ஒனிவு விளையாட்டை மார்பகம் கையில் எடுத்துக்கொண்டது.

சேர நாட்டின் பெருங்கவிஞன், இதுபோல் அழகிய பெண்ணை என் வாழ்வில் கண்டிலேனே….என மெய் மறந்து மனதிற்குள் மெச்சிக் கொண்டான். கூடியிருந்த கூட்டமும் அதைத்தான் மனதிற்குள் அசைபோட்டுக் கொண்டது.

மாதவியின் நடன அசைவில் தன் மதியைத் தொலைத்த மன்னன், மிதிலையில் இராமன் விலலை உடைத்தபோது, ஜனகனின் மகள் சீதை காட்டிய வியப்பு கலந்த கிளிர்ச்சியைத் தன் முகத்தில் படர விட்டான்.

வத்தின் இயல்புத் தன்மை மாறாது மாதவி ஆடி நம் மனங்களைக் கொள்ளை கொண்டதால், தலைகோலி என்ற பட்டத்தை அவளுக்குச் சூட்டுகிறேன். இதோ இந்தப் பச்சை மாலை அரசனின் பரிசாக அவளின் கழுத்தில் மின்னட்டுமென, பச்சை மாலை ஒன்றையும் பரிசாகத் தந்தான்.

அரண்மனை தலைமைப் பொறுப்பாளர் ஒரு வெள்ளித் தட்டில் ஆயிரத்தெட்டு கழஞ்சுப் பொன்னைக் கொண்டு வந்து மன்னர் கொடுத்ததாகக் கொடுத்தான்.

தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் ஆச்சரியத்தை தந்தாலும், அடுத்து என்ன நடக்கப் போகிறதோ…….என்ற உள்ளார்ந்த அச்சம் மாதவியிடம் எட்டிப் பார்க்கத் தொடங்கியது ! அந்த அச்சம் ….?!

தொடரும்………….

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...