சீனாவில் உள்ள தமிழ் கலாசார சின்னங்கள்!
சீனாவில் உள்ள தமிழ் கலாசார சின்னங்கள்!
இந்தியா வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் மோடி சந்திப்பதற்கு டில்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் போன்ற பெரு நகரங்கள் தேர்வு செய்யப்படாமல், தமிழகத்தில் உள்ள கடற்கரை நகரமான மாமல்லபுரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம் என்ற கேள்வி பலரின் மனதிலும் எழுந்துள்ளது.
மோடி-ஜின்பிங் சந்திப்பிற்கு மாமல்லபுரம் தேர்வு செய்யப்பட்டதன் பின்னணியில் இருப்பது, தமிழகம் மற்றும் சீனாவிற்கு இடையே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்து வரும் கலாச்சார, வர்த்தக, கட்டடக்கலை தொடர்புகள் தான். இரண்டாம் நூற்றாண்டு முதல் நான்காம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் இருந்து சென்ற பல்லவ மற்றும் சோழ மன்னர்கள் கடல்கடந்து, சீனா வரை தங்களின் கலாச்சார வேரை பரப்பி இருந்ததுள்ளனர்
சீனாவின் கிழக்கு பகுதியான குவான்ஷூ (Quanzhou) நகரில் இப்போதும் அதற்கான ஏராளமான சான்றுகள் உள்ளன. சீனாவின் பல்வேறு பகுதிகளில் தமிழ் கலாச்சாரம் பரவி இருந்தாலும், குவான்ஷூ நகரில் உள்ள பல கோயில்கள் தமிழகம் மற்றும் சீனாவிற்கு இடையேயான சுமார் 1700 ஆண்டு உறவுக்கு சான்றாக உள்ளன.தமிழகத்தில் இருப்பது போன்று குவான்ஷூ நகரில் உள்ள கட்டடக்கலை, கோயில் தூண்கள், அவற்றில் உள்ள சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன.
பல்லவ கட்டட கலைக்கு பெரிய அடையாளமாக விளங்கும் மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் உள்ளது போன்ற மகாலட்சுமி, நரசிம்மர், சிவலிங்கம், மகாவிஷ்ணு சிற்பங்கள் குவான்ஷூ நகரிலும் உள்ளன. நடராஜர், நர்த்தன கிருஷ்ணர், கஜேந்திர மோட்சம், கிருஷ்ண லீலை காட்சிகள் போன்றவை உள்ளன.மேலும் தாமரை, சிங்க வடிவங்களும் இடம்பெற்றுள்ளதை சீன தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
சங்கு, சக்கரத்துடன் 4 கரங்களுடன் நின்ற கோலத்தில் காட்சி தரும் மகாவிஷ்ணு சிலை இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டு, அங்குள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. குவான்ஷூ நகர் மட்டுமின்றி சீனா முழுவதிலும் இதுவரை ஏறக்குறைய 500 க்கும் அதிகமான நந்தி சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மகாலட்சுமி, சிவலிங்கம் ஆகிய சிலைகள் இப்போதும் அங்குள்ள கோயில்களில் வழிபாட்டிற்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றை ஏராளமானோர் வழிபட்டு செல்கின்றனர்.இது தவிர சீனாவில் உள்ள புராதான தலங்களில் உள்ள பல கல்வெட்டுக்களில் தமிழ் மற்றும் சீன எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இவை தமிழகம் மற்றும் சீனா இடையேயான வர்த்தக, கலாச்சார, மத உறவையும், சோழ வம்சத்தின் பெருமையையும் காட்டுவதாக உள்ளன.
சீனா – தமிழகம், குறிப்பாக சோழ மற்றும் பல்லவ வம்சத்தினரிடையே பல ஆயிரம் ஆண்டுகளாக உள்ள பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாகவே இருநாட்டு தலைவர்கள் சந்திக்கும் வரலாற்று நிகழ்விற்காக மாமல்லபுரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.