2-வது நாளாக மீட்பு பணியில் கனிமொழி எம்பி..! | சதீஸ்

 2-வது நாளாக மீட்பு பணியில் கனிமொழி எம்பி..! | சதீஸ்

கனமழை பாதிப்பு காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் தூத்துக்குடியில் 2-வது நாளாக மீட்பு பணியில் கனிமொழி எம்பி ஈடுபட்டுள்ளார்.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் திருநெல்வேலி,  தூத்துக்குடி,  தென்காசி,  கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

மழைநீர் தேக்கம் மற்றும் அதிகனமழை காரணமாக நெல்லையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.  பல்வேறு பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து செல்லும் பகல் நேர ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

திருநெல்வேலியில் பேருந்து நிலையத்தில் இருந்து சிந்துபூந்துறை செல்லும் சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதிகள், ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதால் மாவட்டம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்திலும் கடுமையான மழை பெய்ததால் பல இடங்களில் வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.  கனமழை மீட்பு நடவடிக்கைகளுக்காக எம்.பி. கனிமொழி டெல்லியில் இருந்து நேற்றே தூத்துக்குடி வந்தடைந்தார்.  தூத்துக்குடி – மதுரை நெடுஞ்சாலையில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகளை அவர் ஆய்வு செய்தார்.  தொடர்ந்து,  பேருந்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அவருடன் அமைச்சர் கீதா ஜீவனும் ஆய்வு செய்தார்.

இந்த நிலையில் 2-ம் நாளாக இன்றும் கனிமொழி எம்பி வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நேரில் சென்று பொதுமக்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.  தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில்,  கனிமொழி எம்பி,  நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு,  தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன்,  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி,  தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி,  தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் உள்ளிட்ட பலர் நிவாரண பணிகள், மீட்பு பணிகள் குறித்து இன்று ஆலோசனை மேற்கொண்டனர்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...