டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் சந்தித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் | சதீஸ்
டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்தார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ என்ற பெயரில் கூட்டணி அமைத்து உள்ளன. இந்த கூட்டணி தலைவர்கள் ஏற்கனவே 3 முறை சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளனர். இந்த கூட்டணியின் 4-வது கூட்டம் டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இன்று நடக்கிறது.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக கூட்டணி தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டு உள்ளனர். அந்த வகையில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், ஐக்கிய ஜனதாதளம் தலைவரும் பீகார் முதலமைச்சருமான நிதிஷ்குமார், சிவசேனா (உத்தவ்) தலைவர் உத்தவ் தாக்கரே, திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்குவங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் ஏற்கனவே டெல்லி சென்றுள்ளனர்.
இந்தியா கூட்டணி தலைவர்களின் இன்றைய கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் வியூகம் மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேசி முடிவு செய்யப்படும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்தார். இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறும் நிலையில் இரு மாநில முதல்வர்களின் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.