“வெனிஸ்ல இருக்குற ஃபீல் ஆகுது” – சந்தோஷ் நாராயணன் ஆதங்கம்! | நா.சதீஸ்குமார்
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் இரு தினங்களாக கன மழை கொட்டித் தீர்த்தது. இதுகுறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடந்த 4ம் தேதி கனமழை பெய்தது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டன. தொடர்ச்சியாக 28 மணி நேரங்களுக்கும் அதிகமாக மழை பெய்ததால், சென்னை முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்தது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.
மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், பால் விநியோகம், ஏடிஎம் சேவைகள் உட்பட அனைத்துவிதமான அத்தியாவசியமான தேவைகள் அனைத்தும் தடை பட்டன. அதேபோல் பொது போக்குவரத்து, ரயில் சேவை உட்பட விமான சேவைகளும் பாதிக்கப்பட்டன. சென்னை முழுவதும் கடந்த 3 நாட்களாகவே மழையின் தாக்கம் தொடர்கிறது. இதுகுறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ட்வீட் செய்துள்ளார்.
அதில், அலட்சியம், தவறான நிர்வாகம், பேரசை ஆகியவையே மழை நீரும், கால்வாய் நீரும் ஒரே கால்வாயில் கொட்டுவதற்கு வழிவகுத்துவிட்டது. அதனாலயே ஒவ்வொரு முறையும் எங்கள் கொளப்பாக்கம் பகுதி குடியிருப்புகளை ஆறு போல் பாய்ந்து மழை நீர் தாக்குகிறது. இந்த நேரத்தில் யாராவது நோய்வாய்ப்படுவது அல்லது மருத்துவ எமர்ஜென்ஸியில் இருப்பது போன்றவை ஏற்பட்டு மரணத்தை கொண்டு வருகிறது.
மீட்புப் பணிகளுக்காக என்னிடம் ஒரு படகும் சில பம்புகளும் நிரந்தரமாக உள்ளன. மக்களைத் தொடர்புகொள்ளவும் அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்யவும் என்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார். சந்தோஷ் நாராயணனின் இந்த டிவிட்டர் பதிவு சமூக வலைத்தளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது. மேலும் அவரது கருத்து சரியானது என நெட்டிசன்களும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், மழை விட்டு இரண்டு நாட்கள் ஆகியும் சென்னை இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக அமீர்கான், விஷ்ணு விஷால் இருவரையும் மழை வெள்ளத்தில் இருந்து அஜித் மீட்க உதவிய செய்திகள் வைரலாகி வந்தன.