அமைச்சர் சேகர்பாபுவை முற்றுகையிட்ட வண்ணாரப்பேட்டை மக்கள்! | நா.சதீஸ்குமார்
குழந்தைகளை வைத்துக்கொண்டு கஷ்டப்படுகிறோம் என ஆவேசத்தை வெளிப்படுத்திய சென்னை வண்ணாரப்பேட்டை பகுதி மக்கள் அமைச்சர் சேகர்பாபுவை முற்றுகையிட்டு நிவாரணம் கோரினர்.
மிக் ஜாம் புயலால் சென்னையில் 2 நாட்களாக கொட்டித் தீர்த்த மழையால் வரலாறு காணாத பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மழை ஓய்ந்து 3 நாட்களுக்கு பிறகும் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் வடியவில்லை. இதனால் மக்கள் சொல்லொணாத் துயரில் ஆழ்ந்துள்ளனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மீட்புப் பணிகளும் சீரமைப்பு பணிகளும் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கிட தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அமைச்சர்களும் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் அமைச்சர் சேகர்பாபு சென்னை வண்ணாரப்பேட்டை பகுதி மக்களை சந்தித்து நிவாரண உதவிகள் வழங்கவும், குறைகளை கேட்கவும் சென்றிருந்தார். அப்போது அவரை சூழ்ந்துக்கொண்ட மக்கள், குழந்தைகளை வைத்துக்கொண்டு கஷ்டப்படுகிறோம், உணவு இல்லை பால் இல்லை என ஆவேசமாக கூறி முற்றுகையிட்டனர். எல்லோரும் ஒரே நேரத்தில் பேச முயன்றதால் யார் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது தெரியாமல் தவித்த அமைச்சர் சேகர்பாபு ஒவ்வொருவராக தன்னிடம் குறைகளை கூறுங்கள் என்றார்.
ஆனாலும் எல்லோரும் ஒரே நேரத்தில் குரல் எழுப்பியதால் அந்த இடமே சிறிது நேரம் பரபரப்பானது. இதையடுத்து அமைச்சர் சேகர்பாபு சூழலை பொறுமையாக கையாண்டு அரசு மேற்கொண்டு வரும் பணிகள் பற்றி எடுத்துக் கூறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து மக்கள் பத்திரமாக மீட்க உத்தரவிட்ட அவர், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுத்தார்.