சென்னையில் இன்று ஹெலிகாஃப்டர் மூலம் உணவு விநியோகம்..! | நா.சதீஸ்குமார்
மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக சென்னையில் பல இடங்களில் இன்னும் வெள்ளம் வடியவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் சென்னையில் இன்று இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் உணவு பொட்டலங்கள் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்த புயலால் தொடர்ந்து கனமழை பெய்தது.
குறிப்பாக கடந்த 3ம் தேதி நள்ளிரவில் பெய்ய தொடங்கிய மழை நேற்று முன்தினம் வரை தொடர்ந்து வெளுத்து வாங்கியது. இதனால் இந்த 4 மாவட்டங்களில் மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
சாலைகள், குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினர். நேற்று புயல் ஆந்திராவில் கரையை கடந்தது. இந்நிலையில் தான் சென்னையில் நேற்று முதல் மழை பெய்யவில்லை. இதையடுத்து குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இருப்பினும் அதிகளவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் தண்ணீரை வெளியேற்றுவது அவ்வளவு சுலபமானதாக இல்லை. இன்று காலையிலும் கூட பல இடங்களில் வெள்ளம் என்பது வடியவில்லை. இதனால் தொடர்ந்து அங்கு மீட்பு பணி மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கும் பணிகள் நடந்து வருகின்றன. பல இடங்களில் பொதுமக்கள் தரைதளத்தை காலி செய்துவிட்டு மேல்தளம் மற்றும் மொட்டை மாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
அதோடு ஏராளமான மக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். மீட்கப்பட்ட மக்களுக்கு நிவாரண முகாம்களில் உணவு வழங்கப்பட்டு வரும் நிலையில் வீடுகளில் சிக்கிய மக்களுக்கு உணவு என்பது கிடைக்காத சூழல் உள்ளது. இந்நிலையில் தான் தமிழக அரசு சார்பில் இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு வினியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக நேற்று பேரிடர் மீட்புத்துறை அமைச்சரான கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கூறினார்.
அதன்படி இன்று சென்னையில் ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட உள்ளது. அடையாறு, துறைமுகம், வேளச்சேரி உள்பட வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் இன்று ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு வழங்கப்பட உள்ளது. இது உணவு இன்றி தவிக்கும் மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.