சென்னையில் மசூதிகளை திறந்து உணவு வழங்கும் முஸ்லிம் சகோதரர்கள்..! | நா.சதீஸ்குமார்
மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டு உள்ள அனைத்து சமுதாய மக்களையும் மசூதியில் தங்க வைத்து இஸ்லாமியர்கள் உணவு வழங்கி வருகிறார்கள். வங்கக்கடலில் நிலைகொண்டு இருக்கும் மிக்ஜாம் புயலின் தாக்கம் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் சூழந்து மக்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறார்கள். வீடுகள், கட்டிடங்களுக்குள் வெள்ளம் சூழ்ந்து உள்ளது. போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளையும், மீட்புப் பணிகளையும் செய்து வருகிறார்கள்.
தேசிய பேரிடர் மீட்புக் குழு மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து துரிதமாக மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பலத்த காற்று வீசியதால் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்து இருக்கின்றன. முன்னெச்சரிக்கையாக மாநகரின் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத அளவுக்கு பல இடங்களில் மழை பாதிப்பு கடுமையாக உள்ளது.
சென்னையில் இன்று அதிகாலை வரை 340 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. சென்னையில் 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின்போது 340 மில்லி மீட்டர் என்ற அளவில் மழை பெய்தது. அதைவிட இன்று அதிக மழை பெய்து இருப்பதாக கூறப்படுகிறது. பெரு மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் செல்போன் சார்ஜ் இன்றி அவசர உதவி கூட கோர முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. கடைகள், உணவகங்கள் மூடப்பட்டு உள்ளதால் விடுதிகளில் தங்கி இருப்பவர்கள் உணவின்றி தவித்து வருகிறார்கள்.
வீடுகளின் தரைத்தளங்களில் தண்ணீர் புகுந்த காரணத்தால் பலர் படகுகள், பரிசல்கள் மூலமாக மீட்கப்பட்டு வருகின்றனர். மழை வெள்ள பாதிப்பு காரணமாக சென்னை மற்றும் புறநகர் மக்கள் பெரும் துயரில் இருப்பதை வீடியோக்களின் மூலமாக உணர முடிகிறது. ஒரு பக்கம் அரசு முழு வீச்சில் மீட்புப் பணிகள் மற்றும் உதவிகளை செய்து வருகிறது. மறுபக்கம் தன்னார்வலர்களும், பொதுமக்களும் தங்களால் இயன்ற மனிதாபிமான உதவிகளை செய்து வருகிறார்கள்.
அந்த வகையில்தான் சென்னையில் வெள்ள நீர் வீட்டுக்கள் புகுந்து தவித்து வரும் மக்களுக்கும் உதவும் வகையில் மசூதி நிர்வாகங்கள் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளன. சென்னை பூவிருந்தவல்லி பெரிய மசூதி வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில், “அஸ்ஸலாமு அலைக்கும் நமது பூவிருந்தவல்லி பெரிய பள்ளிவாசல் சுன்னத் வல் ஜமாஅத் பள்ளியில் இன்று மக்ஜீம் புயலால் மழை அதிகமாக பெய்து வருவதால் பூவிருந்தவல்லி பகுதியில் வசிக்கும் அனைத்து சமுதாய மக்களும் பள்ளியில் தண்ணீர் பிடிக்கலாம் மொபைல் மற்றும் சார்ஜ் லைட் போன்ற சாதனங்களுக்கு சார்ஜ் செய்து கொள்ளலாம்.
மழை அதிகமாக இருப்பதால் வீட்டிற்குள் மழைநீர் வந்தவர்கள் பள்ளியில் தங்கலாம். பள்ளியில் இன்று அனைத்து சமுதாய மக்களுக்கும் உணவு ஏற்பாடு நடைபெறுகிறது. பள்ளிவாசல் தொழுகைக்கு மட்டும் அல்ல அனைத்து சமுதாய மக்களுக்கும் ஆபத்து நேரத்திலும் பயன்படுத்தப்படும். பள்ளி தொழுகைக்கு மட்டும் அல்ல.” என்று குறிப்பிட்டு உள்ளது. இந்த அறிவிப்பு வெளியான உடனே அனைத்து மதங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் மசூதியில் திரண்டனர். அவர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதேபோல் சென்னை பாலவாக்கம் மசூதியிலும் அனைத்து சமுதாய மக்கள் தங்க வரலாம் என அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.