பூத்திருக்கும் விழியெடுத்து – 17 | முகில் தினகரன்

 பூத்திருக்கும் விழியெடுத்து – 17 | முகில் தினகரன்

அத்தியாயம் –17

இரவு எட்டரை மணி.

கோவை செல்லும் பஸ்ஸில் தான் அழைத்து வந்த மாணவ, மாணவிகளுடன் அமர்ந்திருந்தான் அசோக்.

நிதானமாய் பஸ்ஸிற்குள் நுழைந்த ரூபா, நேரே அசோக்கின் அருகில் வந்து,  அவனருகில் அமர்ந்திருந்த மாணவியை எழுப்பி, “காவ்யா… நீ போய் சீட் நெம்பர் இருபதில் உட்காரு… நான் சார் கிட்டக் கொஞ்சம் பேசணும்” என்றாள்.

“ஓ.கே. மேடம்” உடனே எழுந்து சென்றாள் அம்மாணவி.

சில நிமிடங்களிலேயே பஸ் புறப்பட்டது.

“என்ன அசோக்.. வைசாலியை மீட் பண்ணிப் பேசுனீங்களா?… என்னாச்சு?” ரூபா கேட்க,

 “ம்… பேசினேன்!…”

 “என்ன பேசி முடிச்சீங்க?” ஆர்வமாய்க் கேட்டாள் ரூபா.

 “எல்லாத்தையுமே முடிச்சிட்டோம்!… இருபத்தியஞ்சு வருஷமா நீ யாரோ… நான் யாரோ…ன்னு வாழ்ந்திட்டோம்… இனிமேலும் அதே மாதிரி வாழ்ந்துக்குவோம்!ன்னு சொல்லிட்டேன்”

அவனுடைய அந்த வார்த்தைகள் ரூபாவின் மனத்தில் தேன்மாரியைப் பொழிய, அந்த ஆனந்தத்தை மறைத்துக் கொண்டு, “எப்படி… உங்களுக்காகவே இத்தனை வருஷமா காத்திட்டிருந்தவ உடனே நீங்க சொன்னதை ஏத்துக்கிட்டாளா?” கேட்டாள்.

 “ஏத்துக்கலை… என்னை நம்பலையா?… என் மேல் நம்பிக்கை இல்லையா?ன்னு கேட்டா… அவளை ஆஃப் செய்யும் விதமாய் ஒரு கண்டிஷன் போட்டேன் அப்படியே அமைதியாயிட்டா….”

பஸ் வேகம் மட்டுப்பட்டு சாலையின் இடப்புறம் நிற்க, அந்த நிறுத்தத்தில் ஒரு பயணி மட்டும் ஏறினார்.

பஸ் மீண்டும் புறப்பட்டதும், “அப்படியென்ன கண்டிஷன் போட்டீங்க அசோக்?” ரூபா விடாமல் கேட்டாள்.

“ஒரு இளைஞனோட உயிர் உன்னால் போயிருக்கு… அது விபத்தாய் இருந்தாலும்… அவனுக்கு போதை மருந்தைக் கொடுத்து அந்த விபத்தை உருவாக்கிய நீ ஒரு கொலைகாரிதான்.. அதனால் அந்தக் கொலைக் குற்றத்தை ஒப்புக்கிட்டு… அதுக்கான தண்டனையை அனுபவிச்சிட்டு வா.. அப்புறமா உன்னை ஏத்துக்கறேன்”ன்னு சொன்னேன்…அவ்வளவுதான் அப்படியே ஆஃப் ஆயிட்டா”

ரூபா சந்தோஷத்தின் உச்சிக்கே சென்றாள்.

பத்து நிமிட அமைதிப் பயணத்திற்குப் பின், ரூபா கேட்டாள். “காலேஜுக்கு நாளைக்கே போய் டியூட்டில ஜாயின் பண்ணணுமா நீங்க?”

 “ஆமாம்… அதிலென்ன சந்தேகம்?”

 “இல்லை… கேட்டேன்” என்றாள்.

 “ம்ம்ம்… நான் மட்டுமல்ல மேடம்… நீங்களும்தான்”

 “இல்லை… நான் காலேஜுக்கு வர வேண்டிய அவசியமில்லை” கரகரத்த குரலில் சொன்னாள் ரூபா.

 “ஏன்?… லீவு போட்டிருக்கீங்களா?” தலையைத் திருப்பி அவளைப் பார்த்துக் கேட்டான்.

 “லீவு போடலை… ரிஸைன் பண்ணிட்டேன்” என்றாள் ரூபா.

 “வாட்… ரிஸைன் பண்ணிட்டீங்களா?… ஏன் மேடம்.. எதனால்?” பதட்டமாய்க் கேட்டான்.

“பின்னே?… இந்த மாதிரி மதுரைக்கு நம்ம காலேஜ் ஸ்டூடண்ட்ஸெல்லாம் டான்ஸ் காம்படிஸன் போயிருக்காங்க… நான் போய் அதைப் பார்க்கணும்னு கேட்டேன்!… விட மாட்டேனுட்டாங்க!… சரி லீவாவது குடுங்க”ன்னு கேட்டேன்… அதுக்கு முடியாதுன்னு சொன்னாங்க…. பார்த்தேன்… “போங்கடா… நீங்களுமாச்சு… உங்க வேலையுமாச்சு”ன்னு ரெசிக்னேஷன் லெட்டரைத் தூக்கி மூஞ்சில விட்டெறிஞ்சிட்டு வந்திட்டேன்” சற்றும் கவலையில்லாமல் காஷுவலாய்ச் சொன்னவள் முகத்தையே சில விநாடிகள் வைத்த கண் வாங்காமல் பார்த்த அசோக் கேட்டான்.

 “என்ன மேடம்… உங்க வேலையை விடவா அந்த டான்ஸ் காம்படிஸன் முக்கியம்?”

 “அசோக்… நான் அங்க வந்தது டான்ஸ் காம்படிஸனைப் பார்க்க இல்லை… உங்களைப் பார்க்க!… காம்படிஸனெல்லாம் முடிச்சிட்டு நீங்க திரும்பி வர்றதுக்கு மூணு நாள் ஆகும்!னு சொன்னாங்க!… என்னால் மூணு நாள் உங்களைப் பார்க்காமல் இருக்க முடியாது… அதான் வந்திட்டேன்” சொல்லி விட்டு வெட்கத்தில் தலை குனிந்தாள் அவள்.

மீண்டும் பதினைந்து நிமிட அமைதிப் பயணம்.

“அப்புறம்… வாட் நெக்ஸ்ட்?… வேற காலேஜுக்கு அப்ளிகேஷன் ஏதாவது போடப் போறீங்களா?” அசோக் கேட்க,

 “யெஸ்… ஒரு காலேஜ்ல வேக்கன்ஸி இருக்குன்னு இப்பத்தான் தெரிஞ்சுது… அப்ளிகேஷன் போடலாம்னு இருக்கேன்” என்றாள் ரூபா.

 “எந்த காலேஜ்?”

 “அசோக் ஹோம்” காலேஜ்ல…. “ஹவுஸ் வைஃப்” போஸ்ட் காலியாயிருக்கு… அங்க அப்ளிகேஷன் போடப் போறேன்”

 “அது ரொம்ப பழைய காலேஜ் மேடம்… கிட்டத்தட்ட நாப்பது.. நாப்பத்திரெண்டு வருஷமாச்சு மேடம்.. அந்தக் காலேஜுக்கு… நீங்கெல்லாம் யங் கேண்டிடேட்… உங்களுக்கு எப்படி அந்தப் போஸ்ட் சூட்டாகும்?”

 “காலேஜ் பழைய காலேஜ் ஆனாலும்… பண்பான காலேஜ்… பண்பட்ட காலேஜ்… அதான் அது எனக்குப் பிடிச்சிருக்கு” என்றாள் ரூபா.

சில நிமிட யோசிப்பிற்குப் பின், “வேண்டாம் மேடம் நீங்க அப்ளிகேஷன் போட வேண்டாம்” என்றான் அசோக் சீரியஸ் முகத்துடன்.

“ஏன்?…ஏன்?”

“நீங்க….” அன்று அசோக் சொல்லும் போது,

குறுக்கே சென்ற இரு சக்கர வாகன ஓட்டிக்காக பஸ் டிரைவர் ஹார்னை வெறி கொண்டு அழுத்த,

அசோக் சொன்ன வார்த்தைகள் எதுவுமே ரூபாவின் காதுகளில் விழவில்லை.

“ம்ஹும்… நீங்க சொன்னது எதுவுமே கேட்கலை” என்றாள்.

“நீங்க ஆல்ரெடி….”

“க்ரீச்ச்ச்ச்ச்ச்ச்”

“யோவ்…ஒண்ணு லெப்ட்ல போ… இல்லை ரைட்ல போ… நீ பாட்டுக்கு இதுக்கும் அதுக்கும் மாறி மாறிப் போய்ட்டே இருக்கே…” கார்க்காரனைத் திட்டித் தீர்த்தார் பஸ் டிரைவர்.

அசோக் ரூபாவைப் பார்த்து சிரிக்க,

“இப்பச் சொல்லுங்க சார்” என்றாள் ரூபா.

“உங்களை அந்தக் காலேஜ் ஓனர் ஆல்ரெடி அந்தப் போஸ்ட்டுக்கு செலக்ட் பண்ணிட்டார்… அதனால நீங்க அப்ளிகேஷன் எதுவும் போட வேண்டாம்”

 “விருட்”டென்று தலையைத் தூக்கி அவன் முகத்தை ரூபா ஏறிட்டுப் பார்க்க,

 மேலும் கீழும் தலையாட்டி அதை ஆமோதித்தான் அசோக்.

 “இதோ… இதோ என் பல்லவி… எப்போது கீதமாகுமோ?.. இவன் உந்தன் சரணம் என்றால்.. அப்போது வேதமாகுமோ?” பின் இருக்கையில் யாருடையோ மொபைலிலிருந்தோ ரிங் டோனாக அந்தப் பாடல் ஒலித்தது.

(முற்றும்…)

முந்தையபகுதி – 16

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...