பெண்மை ஒரு வரம் – புத்தக விமர்சனம்

 பெண்மை ஒரு வரம் – புத்தக விமர்சனம்
பெண்மை ஒரு வரம் – புத்தக விமர்சனம்
             – கமலகண்ணன்
அன்பை அள்ளித் தரும் அன்னையாய்
பாசமூட்டும் நெறிகளாக பாட்டியாய்
சரித்திர நேசமுடன் சகோதரியாய்
அப்பாவின் பெண்பாலாக அத்தையாய்
பெரிதுவக்கும் பெரியம்மாவாய்
சிலாகிக்கும் செயல்களில் சித்தியாய்
அன்னைக்கு அடுத்தாக அண்ணியாய்
மனதை புரிந்து கொள்ளும் மச்சினியாய்
மனமுருக வைத்திடும் மகளாய் 
மகிழ வைத்திடும் மருமகளாய் 
இவை அனைத்திற்கும் மேலாக
கஷ்டமாய் இருக்கும் போது இஷ்டமாய் 
தோள் கொடுக்கும் தோழியாக 
உள்ளத்தில் மட்டுமல்ல 
உணர்வில் மட்டுமல்ல
உடைகளில் மட்டுமல்ல
உணவில் மட்டுமல்ல
உயிரிலும் கலந்திருப்பது
நீங்கள் தான் 
சரித்திரம் படைத்த பல பதுமைகளுக்கும்
புதிய சரித்திரம் 
படைக்கப் போகும் புதுமைகளுக்கும்
சிரம் தாழ்ந்த வந்தனங்கள் பல
தோல்விகள் பல உங்களை மிக 
எளிதாக கடந்து போகலாம்
துவண்டு விடாதீர்கள் 
உங்களை தங்கமாய் புடம் போட வந்த
படிக்கட்டுகள் காத்திருங்கள் நாளைய 
ஊடகங்கள் உங்களை மட்டுமே
சிலாகிக்கப் போகிறது
புதிய யுகம் உங்களால் மட்டுமே
மார்ச் 8
மறக்க முடியாத இமயம் தொட்டு…

    என்ற வரிகளில், வருடம் 365 நாட்களும் மார்ச் 8 தான் என்பதை மறுக்க முடியாது.. 

`பெண்மை ஒரு வரம்’ என்ற நூலை எழுதியுள்ள திருமதி ஜோதி நிர்மலாசாமி, ஐ.ஏ.எஸ். அவர்கள் தன்னுடைய அனுபவத்தில் நிகழ்ந்த சம்பவங்களையும் கண்டு களித்த சரித்திரங்களையும் வியந்த சாதனைகளையும் வரிசையிட்டுப் பெண்மை ஒரு வரம் மட்டுமல்ல தவம் என்று புரிய வைத்திருக்கிறார். 
பெண்களைக் கடவுள்தான் என்று மரியாதையாக நடத்தும் ஜப்பான் ஆண்களைப் பற்றி எழுதும் போது சற்றே பொறாமைபடத் தோன்றுகிறது. அதிகார தோரணையுடன் உள்ள பெண்கள் ஆணவத்தால் நிறைய இழக்கிறார்கள் என்ற உண்மையையும் பதிவு செய்திருக்கிறார். 
அம்மாவாகத் திட்டும் போதுகூட நாசமற்று போறவனே என்று திட்டும் உயர்ந்த எண்ணம் உடையவர்கள் என்பதையும், பல உணர்வுகளால் ஆட்பட்டவர்கள்தான் பெண்கள் அதைத் தாண்டி வந்து சாதித்தவர்கள், மலாலா, கேரளா ஷிவானி, வேளச்சேரி ஐஸ்வர்யா, ஜெசி, குன்றத்தூர் சுபஸ்ரீ ஆகிய அனைவரும் பெண்மையின் காவலர்கள்தான் என்பதையும் பதிவு செய்திருக்கிறார். 
மருத்துவம் மகளிர் மகத்துவம் மகாசக்தி என்பதைப் பல மனப்போரட்டத்திற்கு இடையே நிறுபித்திருப்பதையும், மனித நேயத்துடன் உதவி செய்வது பெண்மையின் இன்னொரு பரிமாணம் என்பதையும், பதவியும், திறமையான பேச்சும், பெண்களுக்குத் தேவை என்பதை மிக ஆழமாகப் பதிவு செய்திருக்கிறார். 
எனது அண்ணியின் மகள் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். ஊருக்கு கிளம்பும் போது, ‘ஏன் சித்தப்பா டி.வி. போடவே இல்லை?’ என்று கேட்க, ‘உங்களை விட டி.வி. முக்கியமா?’ என்றேன் நான். அதற்கு ‘எதுவுமே பேச முடியாத அளவிற்குக் கேள்வி கேட்;டா எப்படி?’ என்றார் அந்தப் பாசமகள். அதுபோல அனைவரையும் மதிக்கும் குணம் வேண்டியதை வலியுருத்திருக்கிறார். 
அதிகாரியாக இருக்கும் பெண்கள் அனைவருடன் நிற்பது கண்காணிக்க மட்டுமல்ல, ஊக்கப்படுத்தவும் தான் என்பதைக் கடந்த வசந்தகால நினைவுகளுடன் பகிர்ந்திருப்பது அழகு. 
பெண்கள் அன்னையாக அன்பானவர்கள், பொறாமை அவர்கள் குணமல்ல என்பதையும், ஓர் அசிரிய-ஆசிரியை என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று உதாரணத்துடன் சிறப்பாக விளக்கியிருக்கிறார். 
அழகு என்பது புறத் தோற்றத்தில் இல்லை அகத் தோற்றத்தில்தான் இருக்கிறது, அகம் என்பது அறிவுடன் கூடிய செயல்கள் என்பதை மிகத் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறார் இந்நூ}லின் ஆசிரியர். 
எதிர்பாலினம் ரசிக்கும் பதுமைகளாய் மட்டும் பெண்ணியம் நிச்சயம் படைக்கபடவில்லை என்று மிக அழுத்தமாகச் சொல்லி இருக்கிறார். 
உதவியாளர்கள் நம் பத்து விரல்கள் போன்றவர்கள். என்னதான் மூளை கட்டளையிட்டாலும் விரல்கள் செய்யவில்லை என்றால் மூளை கட்டளையிட்டு பயன் இல்லை. அதைப் புரிந்த உதவியாளர்கள் இந்த நூல் ஆசிரியருக்குக் கிடைத்திருப்பது அவருக்குக் கிடைத்த பொக்கிஷம். அவர்களை உரிய அங்கீகாரத்துடன் மதிப்பாக நடத்தி பெருமை கொள்ள வைத்த பெருமை ஆசிரியரையே சாரும். 
வேலைக்குச் செல்லும் பெண்களின் வருமானத்தைக் கணவர்களின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் நிகழும் இன்னல்களான நிகழ்வுகளைச் சம்பவங்களோடு விரித்திருக்கிறார். 
அலுவலகத்தில் பாலியல் தொல்லையில் பாதுகாப்புடன் எச்சரிக்கையுடன் இருக்க ஒரு சகோதரியாய் ஆலோசனை தந்திருக்கிறார். 
பெண்களின் ஆடையில் கண்ணியம் வேண்டும் என்பதையும் நவநாகரீகம் என்ற பெயரில் உடுத்தும் உடைகளையும், இரவு உடையோடு வெளியே வருவதையும் சாடியிருப்பது பெண்மைக்கே அழகு. 
பெண்ணே பொன்தான் தங்கத்திற்குத் தலை வணங்க வேண்டாம் என்று நடந்த நிகழ்வுகளை நெகிழ்வாய் சொல்லி கட்டளையாக இல்லாமல் வேண்டுகோளாக முன் வைத்திருக்கிறார். 
மாமியார் அல்ல மறுதாயார் என்பதை மறக்க முடியாத நினைவுகளைச் சற்றே நாணத்துடன் சொல்லி, எப்படி இருக்க வேண்டும் என்று விவரித்து, மாமியாரும் அல்ல மறுதாயாரும் அல்ல கடவுள் என்று முடித்திருக்கிறார். 
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று தந்தை சொன்னதைப் பிறன்பற்றிக் கோள் வினைகளை வேல் வினைகளாக மாற்றி வெற்றிகமான மாவட்ட ஆட்சியராக வளம் வருவதை விரித்திருக்கிறார். 
மொத்தத்தில் பெண்மை ஓர் உண்மை என வரிக்குவரி அழகுற சொல்லியிருப்பது மிளிர்ச்சி. ஒவ்வொரு தலைப்பிறக்கும் கொடுத்திருக்கும் தலைப்பு மிகப் பொருத்தமான அழகு. வரிகளில் தமிழ் கொஞ்சி விளையாடுவது மிக அழகு. 
ஒரு பெண் வெற்றிகரமாக வளம் வருவதற்கு நம்மைச் சுற்றியிருக்கும் சமுதாயம் என்பதையும் எவ்வாறு அதை வளர்க்க வேண்டும் என்பதை மிக எளிமையான நிகழ்வுகளின் வர்ணனைகளுடன் விளக்கியிருக்கிறார். 
பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் படிக்க வேண்டிய பொக்கிஷம்..

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...