உத்தரகாண்ட் சுரங்கப் பாதை விபத்து..! | நா.சதீஸ்குமார்

 உத்தரகாண்ட் சுரங்கப் பாதை விபத்து..! | நா.சதீஸ்குமார்

உத்தரகாசியில் அமைக்கப்பட்டு வந்த சுரங்கப் பாதை இடிந்த விபத்தைத் தொடா்ந்து அங்கு பணியில் ஈடுபட்டிருந்த 40 தொழிலாளா்களும் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவா்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசியில் பிரம்மகால்-யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா, தண்டல்கான் பகுதிகளுக்கு இடையே சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணியில் 40 தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா். இந்நிலையில், இந்தச் சுரங்கப் பாதையின் ஒரு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை மண் சரிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் தொழிலாளா்கள் சிக்கிக் கொண்டனா்.

அவா்களை மீட்கும் பணியில் மத்திய அரசும், உத்தரகண்ட் மாநில அரசும் ஈடுபட்டன. சுரங்கப் பாதையில் இருந்து தொழிலாளா்களை பாதுகாப்பாக வெளியே கொண்டுவருவதற்கு ஒரு வழியை ஏற்படுத்தும் முயற்சியாக, பெரிய குழாயைச் செலுத்தும் பணியில் மீட்புக் குழு இறங்கியது.

தொழிலாளா்களுக்கு அந்தக் குழாய் வழியாக உணவு, குடிநீா் ஆகியவை வழங்கப்பட்டன. சுரங்கப் பாதையில் 30 மணி நேரத்துக்கும் மேலாக தொழிலாளா்கள் சிக்கியுள்ளனா். அவா்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் சிக்கியவா்களில் 15 போ் ஜாா்க்கண்டையும், 8 போ் உத்தர பிரதேசத்தையும், 5 போ் ஒடிஸாவையும், 4 போ் பிகாரையும், 3 போ் மேற்கு வங்கத்தையும் சோ்ந்தவா்கள். உத்தரகண்ட், அஸ்ஸாமைச் சோ்ந்த தலா 2 போ், ஹிமாசல பிரதேசத்தைச் சோ்ந்த ஒருவா் ஆகியோரும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

சுரங்கப் பாதை விபத்து ஏற்பட்ட பகுதிக்குச் சென்று மீட்புப் பணிகளை உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமி திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். அதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சுரங்க இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட தொழிலாளா்களை பாதுகாப்பாக மீட்பதற்கு அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன. மீட்புப் பணியில் மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து ஈடுபட்டுள்ளன.

மீட்பு நடவடிக்கை தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோா் கேட்டறிந்து, அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனா் என்றாா்.

தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு வளா்ச்சிக் கழகத்தின் இயக்குநா் அன்ஷு மனீஷ் கால்கோ கூறுகையில், ‘சுரங்கப் பாதையில் அவ்வப்போது இடிந்து விழும் இடிபாடுகள் மீட்புப் பணிகளைப் பாதிக்கின்றன. சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள அனைத்து தொழிலாளா்களும் நலமாக உள்ளனா். வாக்கி- டாக்கி மூலம் அவா்களுடன் தொடா்பு கொண்டு பேசியுள்ளோம். அவா்களுக்கு உணவுப் பொருள்களும் குடிநீரும் அளிக்கப்பட்டு வருகின்றன’ என்றாா்.

மீட்புப் பணிகளை ஆராயவும் தொழிலாளா்களைக் காப்பாற்றுவதற்கான உத்தி குறித்து விவாதிக்கவும் உத்தரகண்ட் மாவட்ட ஆட்சியா் அபிஷேக் ருஹேலா, சுரங்கப் பாதையின் உள்ளே சென்று வந்தாா்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...