“மக்கள் தொண்டே முக்கியம்” மகளிர் உரிமைத் தொகை வழங்கும் விழாவில் முதல்வர் பேச்சு..! | நா.சதீஸ்குமார்
‛மருத்துவர்களின் எச்சரிக்கையையும் மீறி, தொண்டை வலியை காட்டிலும் தொண்டே முக்கியம் என்று இந்த விழாவில் பங்கேற்க வந்துள்ளேன்”, என மகளிர் உரிமை திட்ட விழாவில் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்ட விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
காய்ச்சல் குறைந்தாலும் தொண்டை வலி இருக்கிறது. ஓய்வெடுக்க டாக்டர்கள் கூறினாலும் மக்களை பார்க்காமல் என்னால் இருக்க முடியாது. இதனால், டாக்டர்கள் அறிவுரையை மீறி இந்த விழாவிற்கு வந்துள்ளேன். மருத்துவர்களின் எச்சரிக்கையையும் மீறி, தொண்டை வலியை காட்டிலும் தொண்டே முக்கியம் என்று இந்த விழாவில் பங்கேற்க வந்துள்ளேன். இது ஊர் கூடி இழுத்த தேர்.
சொன்னதை செய்வேன் உதாரணம் மகளிர் உதவித்தொகை திட்டம். தகுதி உள்ளவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என சொன்னதை விமர்சனம் செய்தனர். இந்த திட்டத்தின் நோக்கம் குறிக்கோளை மக்கள் புரிந்து கொண்டதால் 2.24 கோடி குடும்பதாரர்கள் 1.65 கோடி மகளிர் விண்ணப்பத்தினர். இதனால் விமர்சனம் செய்தவர்கள் அமைதியாகி விட்டனர்.
மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பம் தொடர்ந்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. மகளிர் உரிமை திட்ட பயனாளர்களின் எண்ணிக்கை 1.3 கோடியாக அதிகரித்துள்ளது. இன்று மாலைக்குள் பயனாளர்கள் அனைவருக்கும் உரிமைத்தொகை வந்துவிடும். மகளிர் உரிமை திட்டத்தில் இந்தியாவுக்கே தமிழகம் முன்னிணியில் உள்ளது. எந்த புகாரும் இல்லை என்பதே மகளிர் உரிமை திட்டத்தின் வெற்றி. இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த உதயநிதி உழைத்து வருகிறார். அவருக்கு பாராட்டுகள். ஆய்வு கூட்டங்களை நடத்தி வருகிறார். ஆய்வு தொடரும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.