மதுரை, திண்டுக்கல் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு., நிரம்பி வழியும் வைகை அணை..! | நா.சதீஸ்குமார்
தொடர் கனமழையால் வைகை அணை முழுக்கொள்ளவை எட்டியுள்ளது.வைகை அணை நிரம்பியதை மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக பெரியார் பிரதான கால்வாயில் இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது.
தேனி மாவட்டத்திலுள்ள வைகை அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் விவசாய தேவையையும் மதுரை, தேனி மாவட்டங்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் இருபோக நிலங்களின் முதல் போக சாகுபடிக்காக வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.
தென்மேற்கு பருவமழை சரியான அளவில் பெய்யவில்லை. முல்லை பெரியாறு அணை மற்றும் வைகை அணையின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் போதிய அளவு நீர் வரத்து இல்லாதலும், பருவ மழை பொய்த்ததினாலும் தண்ணீர் திறக்கப்படவில்லை. வடகிழக்குப் பருவமழை கடந்த சில வாரங்களாக பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து வெகுவாய் அதிகரித்து 70 அடியாக உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து இறுதிக்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மதுரை மாவட்டம் மேலூர், பேரணை, கள்ளந்திரி பகுதி பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. விநாடிக்கு 900 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அமைச்சர் ஐ. பெரியசாமி, அமைச்சர் மூர்த்தி ஆகியோர் வைகை அணையை திறந்து வைத்து பாய்ந்தோடிய நீரில் மலர்களை தூவினர்.
வைகை அணையைப் பொறுத்தளவில் 6 ஆயிரத்து 91 மில்லியன் கனஅடி நீரை தேக்க முடியும். தற்போது 5 ஆயிரத்து 890 மில்லியன் கனஅடி நீர் தேங்கி உள்ளது. இதனால் 15 சதுர கி.மீ. அளவுக்கு கடல்போல் பரந்து விரிந்து தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது.
இதன் காரணமாக இன்று வைகை அணையில் இருந்து திண்டுக்கல் மதுரை மாவட்டங்களிலுள்ள இரு போக சாகுபடி நிலங்களின் முதல் போக பாசனத் தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்று திறந்து விடப்பட்ட நீரின் மூலம் மதுரை மாவட்டம் வடக்கு வட்டத்திலுள்ள 26792 ஏக்கர் மற்றும் வாடிபட்டி வட்டத்திலுள்ள 16452 ஏக்கரும், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 1797 ஏக்கர் நிலங்களும் என மொத்திம் 45041 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
வைகை அணையில் இருந்து இன்று முதல் 45 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 900 கன அடி வீதம் திறக்கப்படும், அதன் பிறகு 75 நாட்களுக்கு முறை பாசனம் என மொத்தம் 120 நாள்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் நீர் நிலைகள் நிரம்பி விவசாயம் செழிப்படையும் என மதுரை,திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.