காசி தியேட்டரில் ரசிகர்களுடன் படம் பார்க்க வந்த நடிகர் கார்த்தி..! | நா.சதீஸ்குமார்
ஜப்பான் திரைப்படம் இன்று வெளியான நிலையில், காசி தியேட்டரில் ரசிகர்களுடன் படம் பார்க்க வந்த நடிகர் கார்த்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
குக்கூ படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குநர் ராஜு முருகன். அந்த படத்தைத் தொடர்ந்து குருசோமசுந்தரம், ரம்யா பாண்டியன் நடித்த ஜோக்கர் படத்தின் மூலம் தனது அரசியல் கருத்துக்களை தெளிவாக வெளிப்படுத்தினார். ஜீவாவின் ஜிப்ஸி திரைப்படம் சென்சாரில் சிக்கி சின்னாபின்னமான நிலையில், முழு படத்தையும் ரசிகர்கள் என்ஜாய் பண்ண முடியவில்லை.
பாலாவை தமிழ் சினிமாவுக்கு கொண்டு வந்த நடிகர் சிவகுமார் இயக்குநர் ராஜு முருகன் பாலாவை விட திறமையானவர் என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அந்தளவுக்கு சினிமா அறிவு மற்றும் அரசியல் அறிவு அதிகம் உள்ள ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி உள்ள ஜப்பான் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
பருத்தி வீரன் படத்தில் அறிமுகமான நடிகர் சிவகுமாரின் இளைய மகன் கார்த்தி தொடர்ந்து பல நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து தற்போது ஜப்பான் படத்தை தனது 25வது படமாக ரிலீஸ் செய்துள்ளார். கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் வந்தியத்தேவனாக ரசிகர்கள் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட கார்த்தி தற்போது ஜப்பானாக உண்மையிலேயே கொள்ளைக்காரனாக நடித்துள்ளார்.
ஜப்பான் படம் காசி தியேட்டரில் காலை 9 மணி காட்சி வெளியான நிலையில், நடிகர் கார்த்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. காரில் இருந்து கார்த்தியை இறங்கவே விடாத அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் ஜப்பான் ஜப்பான் என கார்த்தியை கொண்டாடி உள்ளனர்.
விஜய்யின் பிகிலுடன் மோதிய கைதி படம் அதிக ரசிகர்களை மட்டுமின்றி பாலிவுட் பிரபலங்களையே பாராட்ட வைத்தது. கடந்த ஆண்டு சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தை பீட் செய்து சர்தார் சல்யூட் அடிக்க வைத்தது. இந்நிலையில், இந்த தீபாவளிக்கு ஜிகர்தண்டாவை ஜப்பான் குடிக்குமா? என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.