சுந்தரி கண்ணால் ஒரு சேதி’
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
நேற்றிரவு ’சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ பாடலை ‘சூரியன் எஃப்.எம்’இல் கேட்டேன். என் வாழ்நாளில் இப்பாடலைக் குறைந்தது பத்தாயிரம் முறையாவது கேட்டிருப்பேன். ரஜினியை முற்றிலும் புதிய தோற்றத்தில் காட்டிய படம். மணிரத்னம் இயக்கியது. 1991இல் வெளியானது. அந்நேரம் எனக்கு 13 வயது. விருத்தாசலம் ‘சந்தோஷ்குமார் பேலஸில்’ பார்த்தது. இது தென்னாற்காடு மாவட்டத்திலேயே மிகப்பெரிய திரையரங்கம் எனப் பேசப்பட்டது.
டிக்கெட் எடுத்து திரையரங்கத்திற்குள் நான் உள்ளே போகும்போது மழைக் காட்சியில் ரஜினி சண்டை போட்டுக்கொண்டு இருந்தார். எப்போதும் டைல்ட்டில் கார்டிலிருந்து படம் பார்த்தால்தான் என் மனம் நிறையும். அதற்கு இடமில்லாமல் போனதால் படம் விட்டு வெளியே வந்து, வீட்டுக்குப் போகாமல் அடுத்த காட்சிக்கு டிக்கெட் எடுத்து மீண்டும் ஒருமுறை முழுமையாகப் பார்த்தேன்.
நான் முதன்முதலாகப் பார்த்த ரஜினியின் படம் ‘மனிதன்’. இது 1987இல் வெளியானது. என் பாட்டியின் ஊரான செட்டிக்குப்பம் டூரிங்டாக்கீசில் பார்த் தேன். இது பாண்டிச்சேரி அடுத்துள்ள சின்ன கிராமம். என் பாட்டி ரஜினி ரசிகை. ரஜினி தன் ஸ்டைல் வயதைக் கடந்து ஈர்த்திருந்த ரசிகையாக அவர் வலம்வந்தார்.
அந்நாளில் எனக்கு 9 வயசு. அன்று முதல் நானும் ரஜினி ரசிகன். ’மனிதனி’ல் வரும் ‘வானத்தைப் பார்த்தேன் பூமியைப் பார்த்தேன்’ பாடலை பள்ளிக்கூடம் முதல் குளியலறை வரை பாடிக்கொண்டு திரிந்தது நினைவில் உள்ளது.
கரடு முரடான தோற்றத்தில் பார்த்துப் பழக்கப்பட்ட ரஜினியை ‘தளபதி’யில் வேறுமாதிரி காட்டியிருந்தார் மணிரத்னம். மூன்று கோடி பட்ஜெட்டில் எடுக்கப் பட்ட படம். அந்தக் காலத்தில் இது மிகப்பெரிய தொகை. மம்மூட்டிக்கு இது 3வது தமிழ்ப்படம்.
முதல் படம் படுதோல்வியைச் சந்தித்தது. இரண்டாவது பாலசந்தரின் ’அழகன்’. பரவாயில்லாமல் ஓடியது. ஆக்ஷன் ஹீரோ ரஜினியுடன் மலையாள நடிகர் திலகம் இணைய இருப்பதால் ‘தளபதி’க்கு பலத்த எதிர்பார்ப்பு நிலவியது.
’தளபதி’க்கு இளையராஜாதான் இசை. இது ஊரறிந்த செய்தி. ஆனால், அதில் பலரும் அறியாத செய்திகள் உண்டு. அந்த வருடத் தீபாவளிக்கு 12 படங்கள் வெளியாகின. அதில் 9 படங்களுக்கு ராஜாதான் இசை. மூன்று படங்கள் மட்டுமே அவரது பட்டியலில் சேராதிருந்தது.
நான்கு மாநிலங்களில் சேர்த்து ’தளபதி’யின் உரிமை 4 கோடிக்கு விலைபோனது. படமே 3 கோடி பட்ஜெட்தான். 4 கோடிக்கு விற்ற செய்தி பத்திரிகைகளுக்குத் தேவையான தீனியைப் போட்டிருந்தது. ரிலீசுக்கு முன்பே ’தளபதி’ வெற்றி உறுதியானது.
அதன் தயாரிப்பாளர் ஜிவி உற்சாகமானார். பல வழிகளில் ‘தளபதி’ புரமோஷனை கொடிகட்டிப் பறக்கச் செய்தார். மார்கெட் சூடு பிடித்து. ‘தளபதி’ என பிரத்தியேக டி ஷர்ட்டுகள் வெளியாகின. சந்தைக்கு வேகத்திலேயே 1 லட்சம் ஷர்ட்டுகள் விற்றுத் தீர்ந்தன.
ஒரு பத்திரிகை ‘தளபதி’யின் 12 ஸ்டில்சுகளை வைத்து காலண்டர் ஒன்றை வெளியிட்டது. 1992 புதுவருட டைரி ஒன்றும் சந்தைக்கு வந்தது. ஆளுயர ப்ளோ அப், கதை வசனப் போட்டி எனப் பத்திரிகைகள் இன்னொரு பக்கம் ‘தளபதி’யை வைத்து பணம் பார்க்கத் தொடங்கின.
இன்றைக்கு யூடியூப்பில் லிரிக் வீடியோ, ஃபர்ஸ்ட் ஜிங்கில் எனப் பாடல்களை வெளியிடுவதைப்போல இல்லை. ஆடியோ கேசட்டுகள்தான். அன்றைய சந்தை அமர்க்களமாக இருந்தது. வெளியாவதற்கு முன்னதாக ஒரு நாளைக்கு 4 ஆயிரம் கேசட்டுகளை விற்றார் தயாரிப்பாளர் ஜி.வெங்கடேசன்.
அந்தக்காலகட்டத்தில் ரஜினி ஹிந்தி படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். மணிரத்னம் படப்பிடிப்புக்கு பாம்பேயிலிருந்து நேராக மைசூரில் நடந்துவந்த படப்பிடிப்புக்கு இரவு 12 மணிக்கு வந்தார்.
விடிந்ததும் முதல் நாள் ஷூட்டிங். மேக் அப் மேன் எங்கே என்றார் ரஜினி. அவருக்குப் படத்தில் மேக் அப்பே இல்லை என்று சொல்லிவிட்டார்கள். சும்மா ஃபவுண்டேஷன் ஆவது போடுங்கள் என்றார். உடன் மம்மூட்டியும் நடிக்கிறார்.
அவர் பார்க்க ஆப்பிள் மாதிரி வெள்ளையாக இருப்பார். அவருடன் கேமிராவில் தானும் நின்றால், கேமிராவில் பவுர்ணமியும், அமாவாசையும் போலத் தெரியும் என்று ரஜினி அஞ்சினார். ஆகவே, லேசான மேக் அப் தேவை என வாதிட்டார்.
அதுக்குப் பிறகு காஸ்டியூம் வந்தது. லூஸ் பேண்ட், லூஸ் சட்டை. தொளதொள வென்று இருந்தது. அதை டைட் பண்ணிக் கொண்டுவா என்றார் ரஜினி. போட்டுக் கொள்ள 2 செருப்புக்கள் வந்தன. அதுவும் சாதாரண செருப்பு.
கடுப்பான ரஜினி, ‘ நான் யார்? தளபதி. போய் ஷு கொண்டுவா’ எனக் கட்டளைப் போட்டார். நடைப்பயிற்சிக்கு உதவும் ஷூதான் கிடைத்தது. அதைப் போட்டுக் கொண்டு ஸ்பாட்டுக்குப் போனார். இவரைப் பார்த்த மணிரத்னம், ‘சார், காஸ்டியூம் சேஞ்ச் பண்ணிக்கிட்டு வரலாமே?’ என்றார். ரஜினி முன்கதை எதையும் சொல்லவில்லை. ‘இதான் சார் காஸ்டியூம்’ என்றார்.
உடனே ரஜினி தன் நிலையைவிட்டு இறங்கி வருவாரா எனப் படக்குழு கூடி விவாதித்தது. சுஹாசினி, மணி, தோட்டா தரணி எனப் படக்குழுவே கூடிப் பேசிக் கொள்வதைக் கவனித்த ரஜினி, யோசித்தார்.
அன்று அவருக்கு ஷாட் வைக்கவே இல்லை. ஷோபனா வந்து ‘என்ன பேசிக் கொள்கிறார்கள்?’ என ரஜினியைச் சீண்டினார். அவர் முகத்தில் எந்த ரியாக்ஷனும் இல்லை. ‘‘உங்களைத் தூக்கிவிட்டு கமல்ஹாசனைப் போட வேண் டும்’ என்று பேசிக் கொள்கிறார்களோ?’ என்று ஜோக் அடித்தார் ஷோபனா. ரஜினிக்குள் பதற்றம்.
பேண்ட், ஷர்ட், ஷூ உடன் வந்த ரஜினியைத் திருப்பி அனுப்பாமல், ஒரு காட்சியை எடுக்க முடிவுசெய்தார் மணி. ஷுட்டி நடந்தது. ஷோபனா உடன் குளத்தில் பேசும் காட்சி.
’ஏன் அழுவுற? பிடிக்கலையா’ என்பார் ரஜினி. அதற்கு ‘பிடிச்சிருக்கு’ என்பார் ஷோபனா. உடனே ‘அதுக்கு ஏன் அழுவுற?’ என்பார் ரஜினி. ‘தெரியல’ என்பார் ஷோபனா. மிக விநோதமான காதல் காட்சி. ஷாட் ஓகே.
அடுத்து இரண்டாம் நாள் படப்பிடிப்பு. ரஜினிக்கு மேக் அப் இல்லை. அதே லூஸ் பேண்ட், லூஸ் சட்டை, சாதா செருப்பு. இப்படியே தொடர்ந்து மூன்று நாள் ஷூட்டிங். ரஜினிக்கு நடிக்கவே கஷ்டமாக இருந்தது. எந்த எக்ஸ்பிரஷன் கொடுத்தாலும் மணிரத்னம் வேறொன்றைக் கேட்கிறார்.
ரஜினி கைவசமிருந்த சகல அஸ்திரங்களையும் இறங்கி வைத்தும் பலன் இல்லை. ஒரு ஷாட் 12 டேக் வரை நீண்டது. பொறுக்க முடியாமல் கமல்ஹாசனுக்கு போன் செய்து உதவிக் கேட்கிறார் ரஜினி.
அவர், ‘மணிரத்னம் எப்படி நடித்துக் காட்டுகிறாரோ, அப்படியே திருப்பி செய்யுங்கள். டேக் ஓகே ஆகிடும்’ என்கிறார். அவர் யோசனை ரஜினிக்கு கை கொடுத்தது.
’தளபதி’ படப்பிடிப்பில் தனக்குக் கிடைத்த அனுபவங்களை 30 வருடங்கள் கழித்து ’பொன்னியின் செல்வன்’ இசை வெளியீட்டுவிழாவில் சபையில் போட்டு உடைத்தார் ரஜினி. அவர் போட்டு உடைக்காத சில தகவல்களும் உள்ளன. 1991இல் ரஜினியின் மனநிலை உணர்த்தும் உண்மைகள் அவை.
’தளபதி’ வெளியாவதற்கு முன் அவர் அளித்த பேட்டியில், ‘இந்தப் பணம், புகழ், அதிகாரம் இவை எல்லாம் மாயை. நடிப்பு என் தொழில் மட்டுமே. ஆன்மிகம்தான் என் வாழ்க்கை. ஆக்ஷன் ரோல் இல்லையெனில் நடிப்பில் வித்தியாசம் காட்ட விரும்புகிறேன். அதற்குத்தான் இந்தத் ‘தளபதி’.
எனக்கும் வயதாகிறது. வருங்காலத்தில் நடிக்கவில்லை என்றால் படங்களை இயக்குவேன். இல்லையேல் கேரக்டர் ரோலில் நடிப்பேன். அதன்பிறகு சந்நியாசியாக மாறி இமயமலைக்குப் போவேன்’ என்று சொல்லியிருந்தார். அவர் சொன்னதைப் போலவே இப்போது இமயமலைக்குப் போகிறார். ஆனால், சந்நியாசியாக அல்ல; சௌகரியமான கிரஹஸ்தனாக.
‘தளபதி’ திரைக்கு வந்தபோது ரஜினிக்கு 41 வயது. ஆனால், படத்தில் போலீஸ் விசாரணையின்போது ஒரு காட்சியில் தனக்கு 32 வயது என்பார் ரஜினி. தன் வயதைவிட 10 ஆண்டுகள் இளைமையான தோற்றத்தில் அவர் நடித்திருந்தார்.
அன்றைக்குத் தமிழ்நாட்டில் ரஜினிக்கு 5 லட்சம் ரசிகர்கள் இருந்தார்கள். 10 ஆயிரம் ரசிகர் மன்றக் கிளைகள் இருந்தன. தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரசிகர் மன்றம் அவருடையதுதான்.
இதில் விநோதம் என்னவென்றால், ரசிகர் மன்றங்களுக்கு மம்மூட்டி பரம எதிரி. ‘ரசிகர் மன்றங்களின் நோக்கம் பிரயோஜனமாக இல்லை’ என்று அவர் பேசி வந்தார்.
தன் 29 வயதில் நடிப்புத் தொழிலுக்குள் வந்தவர் மம்மூட்டி. அதற்கு முன் அவர் வழக்கறிஞர். கே.ஜி.ஜார்ஜ் மூலம் தனது முதல் வெற்றியைச் சுவைத்தார். முதல் விருதையும் இவரது இயக்கம்தான் மம்மூட்டிக்குப் பெற்றுத் தந்தது. அதன் பின்னர் மம்மூட்டிக்கு உயிர்கொடுத்தவர் ஐ.வி.சசி. கிட்டத்தட்ட 30 படங்களை மம்மூட்டி யை வைத்துத் தயாரித்தார் சசி. இவ்வளவு புகழோடு ‘தளபதி’க்குள் வந்தார் மம்மூட்டி.
’தளபதி’க்கு முன் நான் மணிரத்னம் இயக்கிய‘அஞ்சலி’யால் கவரப்பட்டிருந்தேன். சரியாக, ஓர் ஆண்டு கழித்து ‘தளபதி’ வெளியானது. இதை எங்கள் ஊரிலிருந்த ‘பி.வி.ஜி. தியேட்டரி’ல் பார்த்தேன்.
அஞ்சலியில் ‘எழுந்திரு அஞ்சலி.. எழுந்திரு அஞ்சலி’ என வரும் காட்சியைப் போலவே ‘தளபதி’யிலும் ‘எழுந்திரு தேவா.. எழுந்திரு.. எழுந்திரு’ என்று ரஜினி கத்துவார். இந்த ஒப்புமைகள் இப்போது எழுதும்போது நினைவுக்கு வருகின்றன.
‘அஞ்சலி’யில் 40 குழந்தைகளுடன் வேலை செய்தேன். ‘தளபதி’யில் 2 குழந்தைகளுடன் வேலை செய்திருக்கிறேன்’ என்று ஒரு பேட்டியில் பேசியிருந்தார் மணி.
சூரியா , தேவா கூட்டணியை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டனர். படம் மாபெரும் வெற்றி. படத்தைப் பார்த்துவிட்டு, பலர் பாராட்டினர். சிலர் விமர்சித்தனர். குறிப்பாக இளையராஜாவின் ‘ராக்கம்மா கையைத் தட்டு’ பாடலை வைத்து விமர்சனம் எழுந்தது. இந்த மாதிரியான ‘ஐட்டம் டான்ஸ்’ தேவையா எனக் கேள்வி எழுந்தது.
தனிநபர்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ளலாமா? சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற காவல்துறை இருக்கிறது. ரவுடிகள் கையில் எடுத்துக்கொள்ள அனுமதிக்கிறது இந்தப் படம் எனப் பேசினார்கள்.
படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் முத்துராமனும் மகேந்திரனும் கூடி விவாதித்தனர். அது பத்திரிகையில் வெளியானது. ‘அது ரவுடிகளுக்கு இடையே நடக்கும் மோதல் அல்ல; தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையே நடக்கும் போர். அப்படித்தான் பார்க்கவேண்டும்’ என்று இவர்கள் விளக்கம் அளித்தனர்.
’தளபதி’யில் ரஜினியின் தாய் ஸ்ரீவித்யா. அவரது இளம்வயது தோற்றத்தில் வேறு பெண் ஒருவரைப் போட்டிருந்தார் மணிரத்னம். வழக்கமாக முதிய தோற்றத்தில் வருபவரைத்தான் இளம் தோற்றத்திலும் பயன்படுத்துவார்கள். அதை உடைத்திருந்தார் மணிரத்னம்.
அது ஒரு புதிய பாணி. இதை இயக்குநர் மகேந்திரன் சுட்டிக்காட்டியிருந்தார். அதைப்போலவே ஜெய்சங்கர் கதாபாத்திரம். அவர் ‘கவ் பாய்’ படங்களின் நடிகர். அதன் சாயல் துளியும் இல்லாமல் அடக்கி வாசித்திருப்பார். அவரது நடிப்பு மிகவும் பேசப்பட்டது.
‘தளபதி’யில் ஒரு காட்சி. உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பார் மம்மூட்டி. மருத்துவமனைக்கு உள்ளே போய் பார்த்த ரஜினி, அவரது மனைவியிடம் வந்து சொல்வார்: ‘தேவா சாகமாட்டான்” . ‘டாக்டர் சொன்னாரா?’ என்பார் கீதா. ‘இல்லை, தேவாவே சொன்னான்’ என்பார் ரஜினி.
அந்த டயலாக் பிற்காலத்தில் காமெடியாக மாறியது. ஆனால், இன்று திரும்பிப் பார்க்கும் போது தமிழ் சினிமாவில் தேவாவும் சூரியாவும் சாகவில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது.