நவரச திலகம் என அழைக்கப்பட்ட மூத்த நடிகர் ஆர்.முத்துராமனின் நினைவு நாள்

 நவரச திலகம் என அழைக்கப்பட்ட மூத்த நடிகர் ஆர்.முத்துராமனின் நினைவு நாள்

நவரச திலகம் என அழைக்கப்பட்ட மூத்த நடிகர் ஆர்.முத்துராமனின் நினைவு நாள் இன்று. இவர் நவரச நாயகன் கார்த்திக்கின் அப்பாவாக்கும் . எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் ஆகிய முன்னணி நடிகர்களின் படங்களிலும், ஶ்ரீதர், கே.பாலச்சந்தர் போன்ற முன்னணி இயக்குநர்களின் படங்களிலும் நடித்தவர் ஆர்.முத்துராமன். ஷூட்டிங்குக்காக ஊட்டிக்குச் சென்றிக்கும்போது மூச்சுத் திணறி இறந்துபோன ஆர்.முத்துராமன் பற்றி அப்போது அவருடன் நடித்த சிவகுமார் பகிர்ந்த சேதி இது:🫶

1981 – அக்டோபர் – 16ம் தேதி – காலை 6.30 மணி இடம் : ஊட்டி – கால்ப் காட்டேஜ்… ‘ஆயிரம் முத்தங்கள்’ படத்திற்கு ஒப்பனை செய்து கொண்டிருந்தேன். உதவியாளர் ஓடிவந்து ‘சார்,முத்துராமன் சார் ரோட்ல மயக்கமா கிடக்கறார் சார்’ என்றான். ஓடிச்சென்று காரில் ஏற்றி ஊட்டி டாக்டரிடம் காட்ட, உயிர்போய் அரைமணி ஆகிவிட்டது என்றார். மீண்டும் காட்டேஜ்… காரிலிருந்து உடம்பை நிமிர்த்தி இறக்கும்போது அவர் மூச்சுக்காற்று குபுக்கென என்மேல் பட, அய்யோ உயிரோட இருக்கறவரை செத்துப்போயிட்டார்னு டாக்டர் சொல்லிட்டாரே’ அண்ணா, அண்ணா எழுந்திருங்கண்ணா’ என்று நானும் நடிகை ராதா, அவரது அம்மா, மூவரும் யூகலிப்டஸ் ஆயிலை அவர் உடம்பு முழுக்க பூசி தேய்த்தவாறு கதறினோம். அவர் பேசவில்லை. போய்விட்டார்.

ரத்த அழுத்த நோய் பல ஆண்டுகளாக அவருக்கு இருந்தது. படத்தில் ராதாவுக்கு அப்பாவாக நடிக்க வந்தவர் நான் அதற்கு முந்தைய நாள் காலை ஓடியதைப் பார்த்து ஆர்வத்தில் ஓடியிருக்கிறார். ஊட்டியில், 7000 அடி உயரத்தில் அதிகாலையில், பனிமூட்டம் அதிகம் இருக்கும்போது, ஆக்சிஜன் மிகவும் குறைவாக இருக்கும். அதனால் ஓடியவர் மூச்சுத்திணறி விழுந்து விட்டார்.

வங்காள நடிகரைப் போல் கம்பீரத்தோற்றம், காந்தக் கண்கள், கணீரென்ற குரல், கனிவான உள்ளம், எவரையும் குறை சொல்லாத, எல்லோரையும் நேசித்த, சகோதரக் கலைஞன் இதோ நம்மை விட்டு அவசரமாகப் புறப்பட்டுப் போய்விட்டார். தாங்க முடியாத சோகத்துடன் இந்தச்செய்தியை சென்னையிலுள்ள அவர் வீட்டுக்குத் தெரிவித்தோம்.

‘தாயே உனக்காக’, ‘காவல் தெய்வம்’, ‘ராஜ ராஜ சோழன்’, ‘காரைக்கால் அம்மையார்’, ‘திருமாங்கல்யம்’, ‘தீர்க்க சுமங்கலி’ என அவரும் நானும் 15 படங்களுக்கு மேல் சேர்ந்து நடித்தோம். ஒரு மூத்த சகோதரனாக என் மீது அன்பைப் பொழிவார். அதிமுக அமைச்சராக அன்று இருந்த ஆர். எம். வீரப்பன் அவர்கள் மூலம் அரசு போக்குவரத்து மினி பஸ் ஒன்றை ஏற்பாடு செய்து, டி.ஜி.பி. ஆக இருந்த பரமகுரு அவர்கள் அனுமதியுடன், வழியில் பரிசோதனைத் தடைகள் தவிர்த்து காலையிலிருந்து எதுவும் சாப்பிடாமல் மாலை 4 மணிக்கு ஊட்டியிலிருந்து புறப்பட்டு மறுநாள் விடியற்காலை 5.00 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தோம்.

சிவாஜி அண்ணனும் திரளாக, திரை உலகத்தினரும் காத்திருந்தனர். சென்ற வாரம் சிரித்துக்கொண்டு ஊட்டி போனவர், சடலமாய்த் திரும்பிய கோரக்காட்சியைக் கண்டதும், மயங்கிச் சரிந்துவிட்டார் திருமதி. சுலோசனா. ‘டேய் தம்பி ! அந்தக் காலத்தில் முருகன் வேஷத்தில, நாடக மேடையில நடிச்சிட்டு இருக்கும்போது, விஸ்வநாத தாஸ் உயிரை விட்டமாதிரி, முத்துராமன், படப்பிடிப்புக்குப் போய் ‘ஜாக்கிங்’ பண்ணும்போது உயிரை விட்டிருக்கான். நல்ல சாவு. யாரும் வருத்தப்படாதீங்க’ என்று சிவாஜி கூறியது, அதிர்ந்து இருண்டு போயிருந்த எங்களுக்குச் சற்று ஆறுதலாக இருந்தது. – அப்படீன்னார்

from The Desk of கட்டிங் கண்ணையா!

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...