காத்து வாக்குல ரெண்டு காதல் – 12 | மணிபாரதி
அத்தியாயம் – 12
“கொஞ்ச நாளைக்கு முன்னால ராகவ் உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறதா சொன்னானாம்மா..“ பாஸ்கரன் நந்தினியிடம் கேட்டார்.
நந்தினி திடுக்கிட்டு அவரை பார்த்தாள்.
“உங்களுக்கு எப்படிப்பா அந்த விஷயம்..“
“ எப்படியோ தெரிஞ்சுது.. நா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு..“
“ஆமாம்ப்பா..“
“அதுக்கு நீ என்ன பதில் சொன்ன..“
“எனக்கு ஐடியா இல்லன்னு சொல்லிட்டேன்..“
“ஏன்..“
“அம்மா இறந்ததுக்கப்புறம் என்னை வளர்க்குறதுக்காக நீங்க ரொம்ப கஷ்டப்பட்டிங்க.. எனக்காக இன்னொரு கல்யாணம் கூட பண்ணிக்கல.. அது ரொம்ப பெரிய தியாகம்ப்பா.. அப்படி இருக்கும் போது, நா பண்ணிக்குற கல்யாணத்துனால, நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல எதாவது இடையூறு வந்துதுன்னு வைங்க.. சத்தியமா என்னால அதை தாங்கிக்க முடியாது..“
“அப்ப சுயநலமாதான் யோசிச்சுருக்க..“
அவள், அப்பா மேலும் என்ன சொல்லி தொடரப் போகிறார் என்பதன் அர்த்தம் புரியாமல் பார்த்தாள்.
“நீ சுயநலமா யோசிக்கும் போது, ராகவ் சுயநலமா யோசிச்சதுல என்னம்மா தப்பு இருக்கு..“
அவள் அமைதியாக பார்த்தாள். அந்த கேள்விக்கு அவளிடம் பதில் இல்லை.
“நீ இல்லன்னதும், அவன் பத்மாவ காதலிக்க ஆரம்பிச்சுட்டான்..“
அவள் “அப்பா..“ என்றாள் அதிர்ச்சியுடன்.
“ஆமாம்மா.. பத்மா வீட்டுல ராகவ்வ எல்லாருக்கும் புடிச்சு போச்சு.. அவங்க கல்யாணத்துக்கு ரெடியாயிட்டு இருக்காங்க..“
அவள் மேலும் அதிர்ச்சியுடன் பார்த்தாள்.
“இவ்வளவு நடந்துருக்கு.. இது தெரியாம, நா ஒரு பேக்கு மாதிரி, வெங்கடச்சலத்துகிட்ட போய் ராகவ்வுக்கும் உனக்கும் கல்யாணம் பண்ணனும்ன்னு பேசிகிட்டு வரேன்..“
அவள் கவலையுடன் பார்த்தாள்.
“எல்லாத்துக்கும் ஆரம்பம் நீதான்.. ராகவ் புரப்போஸ் பண்ணப்ப, உடனே உன் பதில சொல்லாம, ஒரு வாரத்துல யோசிச்சு சொல்றேன்னு சொல்லிட்டு, அவன் யாரு, அவன் பின்னணி என்னன்னு தெரிஞ்சுகிட்டு பதில் சொல்லி இருக்கனும்.. கல்யாணம் பண்ணிக்கப் போற மாப்பிள்ளை நல்லவனா இருப்பானான்னு யோசிக்க ஆரம்பிச்சா, எந்த பொண்ணுக்கும் கல்யாணம் ஆகாது.. எல்லாம் விசாரிச்சு, சொல்ற சீர் வரிசையெல்லாம் செஞ்சு குடுக்குற கல்யாணத்துலயே தப்பு நடக்குது.. கல்யாணத்துக்கப்புறம் அவங்களோட சுயரூபத்த காட்ட ஆரம்பிச்சுடுறாங்க.. அப்படி இருக்கும் போது, நீ அவசரப்பட்டு ஒரு நல்ல பையன மிஸ் பண்ணிட்டியேம்மா.. உன்னை நா பாவம்ன்னு நினைச்சா, அந்த பத்மாவும் பாவம்தான்.. அவ வாழ்க்கைய கெடுத்து இந்த கல்யாணத்த நடத்தனும்ன்னு நினைச்சா, அந்த பாவம் நம்பள சும்மா விடாது.. கல்யாணம் பண்ணிகிட்டு நீ சந்தோஷமா வாழனும்.. அதுக்கு யாரோட வசையும் சாபமும் உனக்கு இருக்கக் கூடாது..“
“என்னை மன்னிச்சுடுங்கப்பா..“
“ராகவ்வ மறந்துடும்மா.. அதுதான் ரெண்டு குடும்பத்துக்கும் நல்லது..“
“சரிப்பா..“
அவளது கண்ணில் நீர் கசிய ஆரம்பித்தது.
அப்போது வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். காரிலிருந்து ராகவ் இறங்கி உள்ளே வந்து கொண்டிருந்தான். நந்தினி தனது கண்ணீரை துடைத்துக் கொண்டாள். பாஸ்கரன் “வாப்பா..“ என அவனை வரவேற்றார். “உட்காருப்பா..“ என்றார். அவன் உட்கார்ந்து கொண்டான்.
பின், நந்தினியைப்பார்த்து “என்னை மன்னிச்சுடு நந்தினி.. இந்த கல்யாணத்துக்கு நா சம்மதிக்காததுக்கு..“ என்றான்.
“அய்யோ மன்னிப்பெல்லாம் எதுக்கு.. இதுல உன் தப்பு எதுவுமே இல்ல.. தப்பு என்னோடதுதான்.. உலகத்தை புரிஞ்சுக்காம வாழ்ந்துட்டேன்.. எத்தனையோ மருமகனுங்க மாமனார தாங்குறாங்க.. நா பாஸிட்டிவ்வா யோசிச்சுருக்கனும்.. நெகட்டிவ்வா யோசிச்சது என்னோட தப்புதான்..“
“நீ இல்லன்னு ஆனதுக்கப்புறம் நா ரொம்ப மனசு உடைஞ்சு போய்ட்டேன்.. அப்ப பத்மாதான் எனக்கு பெரிய ஆறுதலா இருந்தா.. பள்ளத்தை நோக்கிதான வெள்ளம் பாயும்.. என் மனசு அவ பக்கம் பாஞ்சுடுச்சு.. அவளும் நல்லவதான்.. அவ குடும்பமும் நல்ல குடும்பம்தான்.. அதனாலதான் அவள கல்யாணம் செய்துக்குறதுன்னு டிசைட் பண்ணேன்.. ஆனா, அதனால உனக்கு எந்த வருத்தமும் வந்துடக் கூடாதுன்னுதான், உன்னை சமாதானப்படுத்தி மன்னிப்பு கேட்டுட்டு போகலாம்ன்னு வந்தேன்.“
“பரவாயில்ல ராகவ்.. பத்மா நல்ல பொண்ணுதான்.. நா அவ கூட பழகியிருக்கேன்.. ரொம்ப வெளிப்படையா பேசுவா.. மனசுல எந்த சூதுவாதும் இருக்காது.. எனக்கு நீ கிடைக்கலங்குறது வருத்தம்தான்.. ஆனா அவளுக்கு கிடைக்கிறேயே, ஒரு ஃபிரண்ட்டா எப்படி நா சந்தோஷப்படாம இருக்க முடியும்.. எனக்கு சந்தோஷம்தான்..“
“தாங்ஸ் நந்தினி.. எனக்கு கூட நீ கிடைக்குலங்குற வருத்தம் இருந்துகிட்டுதான் இருக்கு.. ஆனா, பத்மாவோட லவ் ஹன்ட்ரட் பிரசன்ட் பியூர்.. அதுல ஒரு பர்சன்ட் கூட கெட்டது கலந்துடக் கூடாது.. அவ உயிரையே விட்டுடுவா..“
“கவலைப்படாத.. என்னல எந்த கெட்டதும் நடக்காது.. அதுக்கு நா கியாரன்ட்டி..“
“தாங்ஸ் நந்தினி.. கல்யாணத்துக்கு நீ அவசியம் வரனும்.. வந்தின்னாதான் என் மேல உனக்கு கோபமில்லன்னு அர்த்தமாகும்..“
“கண்டிப்பா வரேன்..“
“சரி நா கிளம்புறேன்.. இப்பதான் எனக்கு மனசு நிம்மதியா இருக்கு.. வரேன் அங்கிள்..“
இருவரிடமும் சொல்லிக் கொண்டு புறப்பட்டான்.
பாஸ்கரன் “இப்படி ஒரு புள்ளைய இந்த உலகத்துல பாக்க முடியுமா..“ என்றார் வருத்தம் தோய்ந்த குரலில்.
“நா குடுத்து வச்சது அவ்வளவுதான்ப்பா..“
“மனச தேத்திக்கம்மா.. உங்கம்மாவுக்கு அப்புறமும் நா வாழ்ந்துகிட்டுதான இருக்கேன்.. உனக்கும் கடவுள் எதாவது ஒரு நல்ல வழிய காட்டுவார்..“
“பாக்கலாம்ப்பா..“
–காற்று வீசும்
முந்தையபகுதி – 11 | அடுத்தபகுதி – 13