காத்து வாக்குல ரெண்டு காதல் – 11 | மணிபாரதி

 காத்து வாக்குல ரெண்டு காதல் – 11 | மணிபாரதி

அத்தியாயம் – 11

பிஸ் முடிந்து, ராகவ் கார் பார்க்கிங்கிற்கு வந்து தனது காரை வெளியில் எடுத்தான். எப்பவாவது அவன் காரில் வருவது உண்டு. அப்போது குறுக்கே பத்மா நடந்து வந்து கொண்டிருந்தாள். அவளைப்பார்த்ததும் அவன் காரை நிறுத்தினான். அவள் அருகில் வந்தாள். “நீ போயிருப்பியோன்னு நினைச்சேன்..“ என்றாள்.

“அது எப்படி அதுக்குள்ள போக முடியும்..“

“என்னை கொஞ்சம் வீட்டுல ட்ராப் பண்ணிட்டு போறியா.. இன்னிக்கு நா ஓலோவுலதான் வந்தேன்..“

“ஓ எஸ்..“

அவள் முன் கதவை திறந்து ஏறி உட்கார்ந்தாள். கார் ஆபிஸ் காம்பவுண்டை விட்டு வெளியே வந்தது. இருவரும் சிறிது நேரம் அமைதியாக பயணித்தார்கள்.

“என்ன அமைதியா இருக்க..“ பத்மா கேட்டாள்.

சற்று முன் நந்தினி சொன்னதை அவளிடம் சொன்னான்.

“ஏன் அப்படி சொன்னா..“

“அதுதான் எனக்கும் புரியல..“

“ஒரு வேளை நாம எதிர்பார்த்த மாதிரி உங்க வீட்டுல எதுவும் பேசி இருப்பாங்களா..“

“இருக்கலாம்ன்னுதான் நினைக்குறேன்..“

“அது எப்படி சம்பந்தப்பட்ட உன்கிட்ட கேக்க வேண்டாமா..“

“கேப்பாங்க.. ஆனா எங்கப்பா அம்மாவுக்கு நா அவங்க பேச்சை மீற மாட்டேன்னு ஒரு எண்ணம்..“

“எப்படி சமாளிக்கப் போற..“

“நீ ஒண்ணும் கவலைப்படாத பத்மா.. அவங்களுக்கு நா பேசி புரிய வைப்பேன்..“

“ஒத்துக்கலன்னா..“

“அந்த பேச்சுக்கே இடமில்ல..“

“நீ குடுக்கற நம்பிக்கைலதான் நா தைரியமா இருக்கேன்..“

அப்போது அவளது வீடு வந்தது. அவன் காரை நிறுத்தினான். கதவை திறந்து இறங்கியவள் “வீட்டுக்கு போனதும் என்ன நடந்துச்சுன்னு கால் பண்ணி சொல்லு.. உன் போனை நா எதிர்பார்த்து காத்துகிட்டு இருப்பேன்..“ என்று கூறி உள்ளே சென்றாள்.

அவன் காரை ஸ்டார் பண்ணி ஓட்ட ஆரம்பித்தான்.

னது நிலமை இப்படி ஆகி விட்டதே என்பதை நினைத்து வருந்தினான். நந்தினி, அவன் முதல் தடவை காதலை சென்ன போது, ஒத்துக் கொண்டிருந்தாள் என்றால், அவன் ஏன் பத்மாவின் காதலை ஏற்றுக் கொண்டிருக்கப் போகிறான். எல்லாம் அவளால் வந்ததுதான். தப்பு அவளுடையதுதான். அதற்கான தண்டைனையை அவள்தான் அனுபவிக்க வேண்டுமே தவிர பத்மா எதற்காக அனுபவிக்க வேண்டும்?

வீடு வந்தது. காரை பார்க் பண்ணினான். இறங்கி உள்ளே வந்தான். மாலதி “ஏன்ப்பா லேட்..“ எனக்கேட்டாள். வழக்கமாக அப்படி கேட்கிறவள் இல்லை அவள்.

“ட்ராஃபிக்ம்மா..“

“சரி கை கால அலம்பிட்டு வா.. நா காபி போட்டு எடுத்துட்டு வரேன்..“

அவன் முகம் துடைத்து ஹாலில் வந்து உட்கார்ந்தான். மாலதி காபி கொண்டு வந்து கொடுத்தாள். “சூடு சரியா இருக்கா பாரு..“ எனக்கேட்டாள். இது கூட வழக்கமாக கேட்கிற கேள்வி இல்லை. எதேற்கோ துவானம் போடுகிறாள்.

“சரியா இருக்கு..“

அப்போது வெங்கடாச்சலம் அங்கு வந்தார். “வா ராகவ்.. எப்ப வந்த..“ எனக்கேட்டார். இதுவும் வழக்கமான விசாரணை இல்லை.

“இப்பதான்ப்பா வந்தேன்..“

ஒரு நிமிடம் அமைதி.

மாலதி “ராகவ், நானும் அப்பாவும் உன் கல்யாணத்தைப் பத்தி ஒரு முடிவு பண்ணிருக்கோம்..“

விஷயத்திற்கு வந்து விட்டார்கள். அவனும் எதிர் கொள்வதற்கு தன்னை தயார்படுத்திக் கொண்டான்.

“என்ன முடிவு பண்ணி இருக்கிங்க..“

“நம்ம நந்தினி இல்ல, அவளை உனக்கு கல்யாணம் பண்ணிக் குடுக்குறதா முடிவு பண்ணி இருக்கோம்..“

“இப்ப என்னம்மா என் கல்யாணத்துக்கு அவசரம்..“ நிதானமாக பேசினான்.

“உனக்கும் கல்யாண வயசு ஆயிடுச்சே..“

“சரிம்மா..  ஆனா, ஒரு தப்பு நடந்து போச்சு..“ என்று கூறி, ஆரம்பத்திலிருந்து நடந்த அத்தனை விஷயங்களையும் அவர்கள் இருவரிடமும் எடுத்து கூறினான். அதைக் கேட்டு அவர்கள் இருவரும் திடுக்கிட்டுப் போனார்கள்.

“என்னப்பா சொல்ற..“

“ஆமாம்ப்பா.. நந்தினி மேலதான் தப்பு இருக்கு..“

“அதை எப்படி தப்புன்னு சொல்ல முடியும்.. அப்பா மேல இருக்குற கரிசனத்துனால, அவ உன் புரப்போஸல ஏத்துக்கல.. இப்ப ரெண்டு குடும்பமும் ஒண்ணாயிடுச்சுன்னதும் கல்யாணம் பண்ணிக்குறதுல தப்பு இல்லன்னு நினைக்குறா..“

“அப்ப பத்மாவுக்கு நா என்னப்பா பதில் சொல்றது..“

இருவரும் வாயடைத்துப் போனார்கள்.

“சொல்லுங்கப்பா..“

“இல்லப்பா.. எங்ககிட்ட பதில் இல்ல..“

“பத்மாவும் நல்ல பொண்ணுதான்ப்பா.. அவளை வேணா வர சொல்றேன்.. பேசி பாருங்க.. நிச்சயமா அவளையும் உங்களுக்கு புடிக்கும்..“

“என்ன மாலதி இவன் நம்பள தர்மசங்கடத்துல ஆழ்த்துறான்..“

“தர்ம சங்கடமெல்லாம் ஒண்ணுமில்லப்பா.. எது சரின்னு பார்க்கனும்.. அப்படி பார்த்தா நா பத்மாவ கல்யாணம் பண்ணிக்குறதுதான் நியாயம்..“

இருவரும் அதிர்ச்சியுடன் பார்த்தார்கள்.

“ரெண்டு பேரும் நல்லா யோசிங்க.. காலம்பற உங்க முடிவ சொல்லுங்க..“

அவன் படியேறி மாடியிலிருக்கும் அவனது ரூமிற்கு வந்தான்.

அவர்கள் குழப்பத்துடன் பார்த்தார்கள்.

ராகவ் பத்மாவிற்கு போன் பண்ணி நடந்த நிகழ்வை ஒரு வரி மாறாமல் அப்படியே அவளிடம் சொன்னான். அதைக்கேட்டு முதலில் திடுக்கிட்ட அவள், பின், நிம்மதியடைந்தாள்.

(-காற்று வீசும்..)

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...