காத்து வாக்குல ரெண்டு காதல் – 9 | மணிபாரதி

 காத்து வாக்குல ரெண்டு காதல் – 9 | மணிபாரதி

                               
அத்தியாயம் – 9

லீலா பேலஸ் ஹோட்டல். பர்த் டே ஹால் களை கட்டியிருந்தது. ராகவ், காரை நிறுத்தி கையில் பொக்கேவுடன் இறங்கி நடந்து வந்தான். அவன் வருவதை கவனித்த பத்மா, அவன் அருகில் ஓடி வந்தாள். “வெல்கம் ராகவ்..“ என்றாள். அவன் அவளது உடையை கவனித்தான். வெள்ளை கவுனில் ஒரு தேவதையைப் போல காணப் பட்டாள். “ரொம்ப அழகா இருக்க பத்மா..“ என்றான்.

“அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.. மனசுக்குள்ள யார் இருக்கா.. நீல்ல இருக்க..“

“அப்படி என்னை பொத்தி பாதுகாக்குறதுக்கு, நான்தான் நன்றி சொல்லனும்..“

“லவ்ல நன்றிங்குற வார்த்தைக்கெல்லாம் இடமே இல்ல..“

“ஏன்..“

“ரெண்டு பேரும் வேற வேற இல்லையே.. ஒண்ணுன்னு ஆனதுக்கப்புறம் தனக்குத்தானே எதுக்கு நன்றி சொல்லிட்டு..“

“செம..“ என்றான் தேவதையின் கையைப்பற்றி. மன்னிக்கவும் அவளது கையைப் பற்றி. (சில சமயம் படைப்பாளியே சறுக்கி விழும் படி ஆகி விடுகிறது)

அவள் அழகாக சிரித்தாள். பற்கள் பூ தொடுத்தது போல் சீராக இருந்தது.

“இப்ப இன்னும் அழகா தெரியுற..“

அப்போது “போதும்.. அக்காவ புகழ்ந்தது“ என்கிற குரல் கேட்டது. இருவரும் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தார்கள். ரம்யா நின்று கொண்டிருந்தாள், இன்னொரு தேவதையாக. ராகவ் “ஹாய் பர்த் டே பேபி..“ என்றான். அவளும் “ஹாய் அங்கிள்..“ என்றாள்.

பின், அவனை ஹாலிற்கு அழைத்து வந்தார்கள். பத்மாவின் அப்பாவும் அம்மாவும் அவனருகில் வந்து அவனை வரவேற்றார்கள். அதன் பின் ரம்யா தனது தோழிகளுக்கு அவனை அறிமுகப்படுத்தினாள். தோழிகள் “சினிமா ஸ்டார் மாதிரி இருக்கார்..“ என புகழாரம் சூட்டினார்கள். பத்மாவிற்கு பெருமையாக இருந்தது. அப்போது வெல்கம் ட்ரிங்ஸ் வந்தது. பத்மா ஒரு கிளாஸை எடுத்து ராகவ்விடம் கொடுத்தாள். அவன் வாங்கி உதட்டில் வைத்து உறிஞ்சி குடித்தான். “உன்னோட ஃபேவரைட்ங்குறதுனாலதான் ஆரஞ்சு ஜூஸ ச்சூஸ் பண்ணேன்..“ என்றாள். ரம்யா “அக்காவோட ஒவ்வொரு மூவ்மென்ட்லயும், அவளுக்கு உங்க மேல இருக்குற காதல் வெளிப்பட்டுகிட்டே இருக்கனும்.. அதனாலதான் இந்த ஆரஞ்சு ஜூஸ் தேர்வு..“ என கிண்டலடித்தாள். பத்மா வெட்கப்பட்டு “ஏய் சும்மா இருடி..“ என அவளை அதட்டினாள். ரம்யா “இதுக்கே கோவிச்சுகிட்டா.. நீ இன்னும் என்னென்ன பண்ணி வச்சுருக்கன்னு அங்கிள்ட்டா சொல்லட்டுமா..“ எனக் கேட்க, ராகவ் குறுக்கிட்டு “அது வேறயா..“ என்றான். பத்மா “இன்னிக்கு நான்தான் அகப்பட்டனா..“ எனக் கேட்டு சமாளித்தாள்.

அப்போது ரம்யாவின் தோழிகளில் ஒருத்தி அங்கு வந்து “எல்லோரும் வந்தாச்சு.. கேக் கட் பண்ணலாமா..“ எனக் கேட்டாள். ரம்யா “ம்..“ என்று சொல்ல, அனைவரும் கேக் இருக்கும் இடத்திற்கு வந்தார்கள். பத்மா கேக்கின் நடுவே இருந்த ஒற்றை கேண்டிலை தீக்குச்சியால் ஏற்றினாள். ரம்யா அதை ஊதி அணைத்தாள். அனைவரும் கோரஸாக “ஹாப்பி பர்த் டே டூ யூ..“ என பாடினார்கள். தோழிகளில் ஒருத்தி ஸ்னோ ஸ்பிரேயை பிரஸ் பண்ணி அனைவர் மீதும் அடிக்க, அது நுரை மழையாக பொழிந்தது. மற்றொரு தோழி பலூனை வெடித்து தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தினாள். ரம்யா கே்கை கட் பண்ணினாள். முதல் துண்டை தனது அம்மா அப்பாவிற்கு ஊட்டி விட்டாள். அவர்களும் திருப்பி ஊட்டி விட்டார்கள். அவள் அவர்களது காலை தொட்டு ஆசீர்வாதம் வாங்கினாள். அடுத்த துண்டை எடுத்து பத்மாவிற்கு ஊட்டப் போக, அவள் ராகவ்வை நோக்கி கையைக் காட்டினாள். ரம்யா திரும்பி ராகவ்விற்கு ஊட்டினாள். அவனும் அவளுக்கு ஊட்டி விட்டு,  தான் கொண்டு வந்திருந்த பொக்கேவை அவளிடம் கொடுத்து “மெனி மோர் ஹாப்பி ரிட்டன்ஸ் ஆஃப் த டே..“ என்றான். அவள் “தாங்ஸ் அங்கிள்..“ என்றாள். அதன் பின் பத்மாவிற்கு ஊட்டி விட்டாள்.

பின் தோழிகளுக்குள் விளையாட்டு தொடங்கியது.

ராகவ்வும், பத்மாவும் அந்த விளையாட்டில் கலந்து கொள்ளாமல் தனியே வந்து உட்கார்ந்தார்கள். பத்மா “கடவுளுக்குதான் நன்றி சொல்லனும்..“ என்றாள் சந்றே உணர்ச்சி வசப்பட்டவளாக.

“எதுக்கு..“

“உன்னோட துணை கிடைச்சுதுக்கு..“

அவனும் உணர்ச்சி வசப்பட்டவனாக அவளைப் பார்த்தான்.

“நீ நந்தினி பின்னால சுத்திகிட்டு இருக்கும் போதெல்லாம், எனக்கு கோப கோபமா வரும்.. அவதான் பிடி குடுக்க மாட்டன்றாளே.. அதை புரிஞ்சுக்காம இவன் பாட்டுக்கு அவ பின்னாடி திரிஞ்சுகிட்டு இருக்கானேன்னு..“

“லவ்ல வந்துடுச்சுன்னா அப்படிதான்..  முட்டாள் தனமும் தெரியாது.. முரட்டு தனமும் தெரியாது.. நாம அவளை அடையனும்ங்குற குறிக்கோள் மட்டும்தான் தெரியும்..“

“அவ இஷ்டம் இல்லன்னு சொன்னப்ப உனக்கு எப்படி இருந்தது..“

“முதல்ல கஷ்டமா இருந்துது.. அப்புறம் பிராக்டிக்கலா யோசிச்சு பார்த்தா, அவளோட நியாயம் புரிஞ்சுது.. சரி, இனிமே நம்ம ஜோலிய பாப்போம்ன்னு நினைச்சப்ப, அந்த நேரம் பாத்து நீ உள்ள வந்த.. இல்லன்னா ரொம்பதான் தடுமாறி இருப்பேன்..“

“நானும், என்னோட ஆங்கிள்ள பிராக்ட்டிக்கலா யோசிச்சு பார்த்துதான், என்னோட விருப்பத்த சொன்னேன்.. நீயும் அதை கரெக்ட்டா புரிஞ்சுகிட்டு அக்சப்ட் பண்ணிகிட்ட.. அதுக்குதான் இப்ப கடவுளுக்கு நன்றி சொன்னேன்..“

அவன் அவளை ஒரு தடவை ஆழமாக பார்த்தான்.

“எப்படா நமக்கு கல்யாணம் நடக்கும்ன்னு இருக்கு.. பர்த் டே பார்ட்டி முடிஞ்சதும் அப்பா அதுபத்தி உன்கிட்ட பேசுவார்..“

“ம்..“

“ஹணிமூன் எல்லாம் எங்க பிளான் பண்ணி இருக்க..“

“இவ்வளவு ஃபாஸ்ட்டா..  நா இன்னும் அதுபத்தி எல்லாம் யோசிக்கல..“

“குளு மணாலி போகலாம்.. மைனஸ் நையன் டிகிரி டெம்பரேச்சர்.. குளிர் ஊசி மாதிரி குத்தும்..  அதை சாக்கா வச்சுகிட்டு, ரெண்டு பேரும் கட்டிப் புடிச்சுகிட்டே திரியலாம்..“

“அந்த ஊர்ல இருக்குறவங்க எல்லாம் வேலை வெட்டிக்கே போறது இல்லையா..“

“அவங்க எல்லாம் போய்கிட்டுதான் இருக்காங்க.. இங்கேருந்து போறவங்கதான் அதே வேலையா இருக்காங்க..“

அவன் அவளை ஆச்சரியமாக பார்த்தான்.

“என்ன பாக்குற..“

“நீ இந்த மாதிரியெல்லாம் கூட பேசுவியா..“

“அப்புறம் எதுக்காகதான் லவ் பண்ணுவாங்களாம்.. ரொமான்ஸ் கூட இல்லாம..“

“அது சரி..“

அப்போது ரம்யா அவர்களது அருகில் வந்தாள். “சாப்பிடலாமா..“ எனக்கேட்டாள். அவர்கள் சாப்பாடு வரிசை கட்டி நிற்கும்  ஹாலுக்கு வந்தார்கள். சாப்பாட்டு வகைகளை அவன் ஒவ்வொன்றாக பார்த்தான். பத்மா “என்ன எல்லாம் உனக்கு புடிச்ச ஐட்டமா இருக்கேன்னு பாக்குறியா..“ எனக்கேட்டாள்.

அவன் தலையாட்டினான்.

“ஃபுட் மெனு ஆர்டர் பண்ணும் போதே ரம்யாகிட்ட சொல்லிட்டேன்.. ராகவ் அங்கிளுக்கு என்ன புடிக்குமா அதைதான் ஆர்டர் பண்ணனும்ன்னு..“

“தாங்ஸ் பத்மா உன்னோட அன்புக்கு..“

“இது மாத்திரமா.. இன்னும் எவ்வளவோ இருக்கே.. கால்யாணம் முடியட்டும்.. பத்மா எப்படி சந்தோஷத்த குடுக்குறான்னு பாரு..“

“பெரிய பிளானோடதான் இருக்குற போலருக்கு..“

“பின்ன..“ என்று கூறி ஒரு பிளேட்டை எடுத்து அவனிடம் கொடுத்தாள். அவன் தனக்கு தேவையான சாப்பாட்டை எடுத்துக் கொண்டான். பத்மா அவனை சாப்பிட சொல்லி விட்டு மற்றவர்களை கவனிக்க போனாள்.

அனைவரும் சாப்பிட்டு முடித்ததும், பத்மாவின் அப்பா ராகவ்வை தனியே அழைத்து ஓரிடத்தில் உட்கார வைத்தார். பத்மா ஐஸ்கிரீம் எடுத்து வந்து தந்தாள். பின் அவர் “அப்பா அம்மாகிட்ட பேசி எப்ப பொண்ணு வீடு பாக்க வராங்கன்னு கேட்டு சொல்லுங்க..“ என்றார். அவன் சற்று தடுமாறி போனான். ஆனாலும் சமாளித்துக் கொண்டு “சரி அங்கிள்..“ என்றான்.

காற்று வீசும்

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...