செப்டம்பர் 1-ஆம் தேதி கடிதம் எழுதும் தினம்
ஒவ்வொரு வருஷமும் இந்த செப்டம்பர் 1-ஆம் தேதி கடிதம் எழுதும் தினமாக உலக அளவில் கொண்டாடப்படுது.
அதாவது உலக கடித தினம் என்றும் அழைக்கப்படும் இந்த நாள் கையால் கடிதம் எழுதும் முறையை பாராட்டும் விதமாக கொண்டாடப்படுது. முன்னொரு காலத்தில் ஓலைச்சுவடிகளில் எழுத்தாணி கொண்டு எழுதப்பட்ட திருக்குறள்தான் இன்று உலகப் பொதுமறையாக விளங்குகிறது. அதுபோல சில எழுத்தாளர்கள் மற்றும் தலைவர்கள் தங்கள் கைப்பட எழுதிய கடிதங்கள், புத்தகங்களாக வடிவம் பெற்று இருக்குது. ஆனால் தற்போதைய காலக்கட்டத்தில் கையால் எழுதப்படும் கடிதங்கள் ரொமப குறைவு என்பது வேதனைக்குரியது.
அதிலும் இன்றைய கணிப்பொறி உலகில் இந்த நாளைக் கூட டைப் அடித்து கொண்டாட்டும் சூழலில் யாராவது ஒருவர் கையால் எழுதப்பட்ட கடிதம் ஒன்று நமக்கு வந்து இதை ஒரு பெரிய பரிசாக எண்ணிக் கொண்டாடப்பட வேண்டிய விஷயமாகும்.
கிட்டத்தட்ட பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை கடிதமே மக்கள் தொடர்பு கொள்ளும் சாதனமாக இருந்தது என்பது நம்மால் நம்ப முடியாத ஒன்றாகவுள்ளது. நம் வீட்டு வாசலில், ‘சார் போஸ்ட்’ என்ற குரல் கேட்டால் வீடே பரபரப்பாகிவிடும். உறவினர் அல்லது நண்பர்கள் அனுப்பிய அந்தக் கடிதத்தை ஆளாளுக்கு வாங்கிப் படிப்பார்கள். பின்னர் ஒரு கடிதத்தைப் பதிலாக எழுதித் தபாலில் சேர்ப்பார்கள். பிற்பாடு கூரியர் எனப்படும் தனியார் தபால் சேவையும், கம்ப்யூட்டர் உதவியால் இமெயிலில் தகவல் தொடர்பு என அடுத்தடுத்த நிலைகளுக்குச் சென்றது. இன்றோ வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மூலம் தகவலைப் பரிமாறிக்கொள்கிறோம் அல்லவா?
இருந்தாலும் கைப்பட ஒருவரின் கையெழுத்தில் நலம் விசாரித்து, தகவல்களைத் தெரிவிக்கும் கடிதங்களுக்குத் தனி மதிப்பு உண்டு. பாரம்பரியமான இந்தக் கடிதம் எழுதும் பண்பு என்பது வாழ்க்கையில் அவசியமான ஒன்று. ஆனால் அது குறித்து இப்போது பாடப் புத்தகங்களில் மட்டுமே படித்து வரும் சூழல் நிலவுகிறது. (தகவல் உதவி: கட்டிங் கண்ணையா)
இத்தனைக்கும் தனிப்பட்ட வகையில் எழுதப்படும் கடிதங்கள், அலுவலக மற்றும் வணிக நோக்கங்களுக்காக எழுதப்படுபவை, அரசியல்ரீதியானவை எனக் கடிதங்கள் பல வகைப்படும். புகழ் பெற்ற தலைவர், எழுத்தாளர்களின் கடிதங்கள் அவற்றின் ஆழமான கருத்துகளுக்காகப் புத்தக வடிவில் வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, சுதந்திரப் போராட்டக் காலத்தில் சிறையில் அடைபட்டிருந்தபோது மகள் இந்திராவிற்கு எழுதிய ‘மகளுக்குக் கடிதம்’ இந்த வகையில் புகழ் பெற்றவை.
உலக கடித தினம் என்பது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகைப்படக்கலைஞர் ரிச்சர்ட் சிம்ப்கின் என்பவரால் 2014-ஆம் ஆண்டு கொண்டு வரபட்ட ஒரு விஷயமாகும். கையால் கடிதம் எழுதும் முறையின் காதலரான அவர், ஒரு கடிதம் என்பது இன்றைய மின்னஞ்சல் ஆகியவற்றை விட ஒரு தனிப்பட்ட அனுபவமாக அமையும் என்று கருதுபவர். அதனால்தான் அதனை கொண்டாடும் விதமாக இந்த தினத்தை அனுசரிக்கிறார். அதனால் இன்றைய தினத்தில் நமது டிஜிட்டல் தகவல் தொடர்பு முறைகளை கைவிட்டு, நமக்கு பிடித்த ஒருவருக்கு ஒரு கடிதம் எழுதுவதே சிறப்பான கொண்டாட்டமாக இருக்கும்.
மொத்தத்தில் கடிதங்கள் காலத்தின் பொக்கிஷம் என்பதை எதிர்கால தலைமுறைகள் அறிந்துகொள்ள வேண்டும். அதனால் நமக்கு பிடித்தவர்களுக்கு இந்த தினத்தையொட்டியாவது ஒரேயொரு கடிதம் எழுதத் துவங்குவோமே!