இந்திய விடுதலை வரலாற்றின் முதல் வீரன்
பூலித்தேவன் = இந்திய விடுதலை வரலாற்றின் முதல் வீரன் பிறந்த நாள் -இன்று செப் -1
பூலித்தேவன் பற்றி புரட்சிப் புயல் வைகோ உரையிலிருந்து சில பகுதிகளை வழங்குபவ்ர் கட்டிங் கண்ணையா!
வானமேசாயினும் மானமே பேணிடும்
அன்னியனுக்கு அடிபணிவனோ?
உயிரே போயினும் உரிமை காப்பேன்
கூற்றமே சீறினும்
இக்கொற்றவன் கலங்கேன்
நெஞ்சுரம் கொண்டோர் உறையும்
நெற்கட்டான் செவல் நிமிர்ந்தே நிற்கும்
என முழங்கிய வீரவேந்தர் பூலித்தேவருக்கு இன்று பிறந்த நாள் விழா.
இந்த நாட்டின் விடுதலை வரலாற்றில் முதன் முதலாக வெள்ளையரின் படைகளைச் சிதறடித்து வாளுயர்த்திய பெருவேந்தன் பூலித்தேவர் என்ற உணர்வோடு, அவர் உலவிய இடத்தில் – அவர் படை நடத்திய இடத்தில் – அவருடைய கட்டளைகள் பிறப்பிக்கப்பட்ட பகுதியில் – அவர் எழுப்பிய கோட்டையில் பாய்ந்த பீரங்கிக் குண்டுகளுக்கு அஞ்சாது வீரமறவர்கள் போராடிய பகுதியில் – இன்றைக்கும் உரையாற்றக்கூடிய ஒருவாய்ப்பைப்பெற்று நிற்கிறேன்.ஒரு நெடியவரலாறு காத்தப்ப பூலித்தேவனுக்கு இருக்கிறது.
பூலித்தேவர் தோற்றம் ஆறடி உயரம் இருக்கும். இரும்புபோன்ற தேகம். ஒளிவீசும் கண்கள். பகைவருக்கு அஞ்சாத உள்ளம். நட்புக்குத் தலைவணங்குகின்ற பண்பாளன். அடக்குமுறைக்கு அஞ்ச மாட்டார்.
குதிரையில்லா விட்டாலும் 40 கல் தொலைவு வேகமாக நடக்கக்கூடிய ஆற்றல் இருந்தது என்றும் வீரர்கள் தொடர்ந்து ஓடித்தான் வரவேண்டும் என்றும் அவரைப்பற்றி நாட்டுப்பாடல் சொல்கிறது. 40 கல் தொலைவும் அயர்வின்றி ஒரு குதிரையின் ஓட்டத்தில் நடக்கக்கூடிய ஆற்றல் மன்னர் பூலிக்கு இருந்தது என்று நாட்டுப்பாடல்கள் தெரிவிக்கின்றன. அப்படிப்பட்ட மன்னனை அதற்குப்பிறகு எவனும் வெல்லமுடியாது என்ற வகையில் அவர் அமைத்தது தான் முதல் கூட்டமைப்பு.
இப்பொழுது தேர்தல்களில் கூட்டணி வருகின்றன. ஒரு பொது எதிரியை வீழ்த்துவதற்கு ஒன்றுசேர வேண்டும் என்ற எண்ணத்தைப் போர்க்களத்தில் இந்தியாவில் முதன் முதலாக ஏற்படுத்தியவரே பூலித்தேவர்தான். இது வரலாறு. அவருடைய உயர்ந்த மதிநுட்பம். ஆகவே தான், அவர் இதை அமைத்தபிறகு இராமநாதபுரம், சிவகங்கை சீமையில் சிவகங்கை மன்னர்கள் பூலித்தேவரை முன்மாதிரியாகக் கொண்டு கூட்டமைப்பை உருவாக்கினார்கள்.
வீரத்தில் சிம்மமான பூலித்தேவர் ஆலய வழிபாட்டில் சிறந்து கோவில் திருப்பணிகள் பலவற்றை செய்தார்.அவர் கட்டிய ஆலயங்கள் பலப்பல. சங்கரன்கோவில் கோவிலுக்கு சபாபதி மண்டபம் கட்டியவர் பூலித்தேவன்தான். அங்கே தெப்பக்குளம் வெட்டியவர் பூலித்தேவன். கரிவலம் வந்த நல்லூர் பால்வண்ணநாதர் ஆலயத்துக்கு முன்மண்டபம் கட்டியவர் பூலித்தேவன். அந்த ஆலயத்துக்குத் திருத்தேர் செய்தவர் பூலித்தேவன். வெள்ளி ஆசனங்களை அமைத்தவர் பூலித்தேவன். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மூலஸ்தானத்து அம்மனுக்கு தங்க நகைகள், வைர அட்டிகைகள் செய்துவைத்தவர் பூலித்தேவன். இங்கே பக்கத்தில் இருக்கக்கூடிய தாருகாபுரத்தில் 16 கால் மண்டபத்தைக் கட்டி அன்னதானம் செய்தவர் பூலித்தேவன். அதுமட்டுமல்ல, சீவலப்பேரி மருகால் தலையில் பூலுடையார் கோவில் மண்டபம் கட்டியவர் பூலித்தேவன். அங்கே நெல்லையில் வாகையம்மன் கோவிலை கட்டிவைத்தவர் பூலித்தேவன்.
இந்தப் பூலித்தேவனின் வழியில்தான் ஈழத்தின் விடுதலைப்புலிகளைப் பார்க்கிறேன். இதைச் சொல்லக்காரணம், மானஉணர்ச்சியும், வீரஉணர்ச்சியும் படைகண்டு அஞ்சாது படை பெருக்கத்தைக் கண்டு அஞ்சாது உயிரைப்பற்றிக் கவலைப்படாது நாட்டின் விடுதலைக்கு முதலாவது அடிமை விலங்கை உடைப்பதற்கு சம்மட்டி ஏந்திய முதல் மன்னன் இந்தியாவிலேயே 1857 ஆம் ஆண்டு சிப்பாய்க் கலகம் என்றும் முதல் சுதந்திரப்போர் என்றும் அழைக்கப்படுவதற்கு நூறு ஆண்டுக்கு முன்னரே போர்புரிந்து வெற்றிகளைக் குவித்தவன்தான் பூலித்தேவர்.
அதன்பின்னர் கொடுமையிலும் கொடுமை என்னவென்று தெரியுமா? மீண்டும் அங்கே ஒரு புதுக்கோட்டை கட்டப்பட்டது. ஒரு கோட்டை அழிந்தபோது பூலித்தேவன் மன்னர் இன்னொரு கோட்டை எழுப்பினார். அதற்குப்பெயர் புதுக்கோட்டை. அந்த புதுக்கோட்டையும் தகர்க்கப்பட்டபோது மன்னர் பூலித்தேவனின் மனைவி கயற்கண்ணி அம்மையாரும், அவரது மூத்தமகள் கோமதிமுத்து தலைவச்சியும், ஆண் பிள்ளைகளில் மூத்தவனாகிய சித்திரகுப்த தேவனும், இரண்டாவது பிள்ளையாகிய சிவஞான பாண்டியனும், பாதுகாப்பாக இருக்கட்டும் என்று மறவர் மக்கள் பனையூருக்குப் பக்கத்தில் காட்டுக்குள் பாதுகாப்பாக வைத்திருந்தார்கள்.
துரோகிகள் அடையாளம் காட்டி அவர்கள் இருந்த பகுதிக்கு தீ வைத்தார்கள். மன்னர் பூலித்தேவனின் மனைவி கயற்கண்ணி அம்மையார் தீயில் கருகி இறந்தாள். அந்த இடத்தில் அவர்களைப் பாதுகாத்த கொத்தாளித் தேவரும், இன்னொருவரும் பாய்ந்து சென்று இவர்களைப் பாதுகாக்க முனைந்தார்கள். புதுக்கோட்டை சண்டையைப்பற்றிய நாட்டுப்புறப் பாடல் இருக்கிறது. நான் படித்து இருக்கிறேன். அந்த நாட்டுப்புறப்பாடலில் ஒரு செய்தி.
இந்தச் சம்பவம் நடந்த உடன் சின்னப்பிள்ளையாக இருந்த சித்திரகுப்தத் தேவனை வெள்ளைக்காரன் அழித்துவிடுவான் என்று பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று பாஞ்சாலங்குறிச்சி அரண்மனைக்குக் கொண்டு சென்று வீரபாண்டிய கட்டபொம்மனின் தந்தை ஜெகவீரபாண்டிய கட்டபொம்மு துரை அவன் அரண்மனையில் வைத்து பாதுகாத்து வளர்த்ததாக புதுக்கோட்டை நாட்டுப்புறப்பாடல் செய்தி சொல்கிறது. ஆகவேதான், மன்னர் பூலித்தேவன் போர்க்களம் அமைத்து அந்த வீரப்போர்கள் நடந்த அதற்குப்பிறகு ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்குப்பிறகு பாஞ்சாலங்குறிச்சி போர் நிகழ்கிறது.
இந்த மண் வீரம் நிறைந்த மண். மானம் நிறைந்த மண். இந்த மன்னனின் புகழைப் பாடுவது அப்படிப்பட்ட மன்னருக்குப் புகழ் நிலைநாட்டப்பட வேண்டும். சமூகஒற்றுமையை நிலைநாட்டுவோம்.
மதநல்லிணக்கத்தை பாதுகாத்தவர் பூலித்தேவர்.