உலக மனிதநேய தினமின்று

 உலக மனிதநேய தினமின்று

உலக மனிதநேய தினமின்று.🥰

இருகரம் கூப்பி வணங்குவதைவிட ஒரு கரம் நீட்டி உதவி செய்வது உன்னதமானது என்பார்கள். இந்த உயர்ந்த நோக்கத்தை வலியுறுத்தத் தோன்றியது தான் உலக மனிதநேய தினம். உலகளாவிய ரீதியில் யுத்தம், இயற்கைப்பேரிடர், நோய், போதிய சத்துணவின்மை போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மக்களை நினைவு கூரும் வகையிலும், இவர்களைப் பாதுகாக்க பாடுபட்ட சேவையாளர்களை நினைவு கூரும் வகையிலும் மனிதநேய நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. 2008-ம் ஆண்டு டிசம்பர் 11-ந்தேதி ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் தீர்மானத்தின்படி இந்த நாள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

2003-ம் ஆண்டு, ஆகஸ்ட் 19. ஈராக்கில் ஒரு வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கே செயல்படும் ஐ.நா உதவி தூதுக்குழுவைக் குறிவைத்து இந்தத் தாக்குதலை நடத்தியது அல்கொய்தா அமைப்பு. கேனல் ஹோட்டல் என்ற இடத்தில் நடந்த அந்தத் தாக்குதலில், ஐ.நா-வின் சிறப்புப் பிரதிநிதியான செர்ஜியோ வியரா டெ மெல்லோ (Sergio Vieira de Mello) கொல்லப்பட்டார். 22 பேர் உயிரிழந்தார்கள். 100 பேர் படுகாயம் அடைந்தார்கள். செர்ஜியோ, ஐ.நா-வுக்காக 34 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றியவர். அவர் நினைவாக, அவர் இறந்த ஆகஸ்ட் 19-ஐ, �`உலக மனித நேய தினமாக�’ அனுசரிக்க வேண்டும் என ஐ.நா சபை முடிவெடுத்தது. 2009-ம் ஆண்டிலிருந்து இந்த தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

முதலாவது உலக மனிதநேய தினம் 2009-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 19-ந்தேதி நடத்தப்பட்டது. இந்த மனித நேயச் சிந்தனை தமிழனுக்குப் புதிதல்ல. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” எல்லா ஊர்களும் நமதே! எல்லோரும் நமது உறவினர்களே! என்று சங்ககாலப் புலவன் கணியன் பூங்குன்றனின் கூற்று உயர்ந்து ஓங்கி ஒலிக்கிறது. “உண்டால் அம்ம இவ்வுலகம்” என்ற புறநானூற்றுப் பாடலில் கூறியபடி, இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்தும், தமக்கென வாழாப் பிறர்க்குரிய சான்றோர்களில் சிலர் மனித நேயத்துடன் உலகில் வாழ்கின்ற காரணத்தால்தான், உலகம் என்பது இருக்கிறது. இன – மத – தேச வேறுபாடுகளைக் கடந்து, மனிதனை மனிதனாக மதிக்கும் மனித நேயம் மனித குலத்துக்கு நம்பிக்கையைத் தருகிறது

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...