தேசிய நூலகர் தினமும் எஸ்.ஆர். ரங்கநாதனும்
கல்வி அறிவைப் பெறுவது அனைவருக்கும் முக்கியம். அது பள்ளியில் கிடைத்தாலும் பொது அறிவு பெறுவதற்கு நூலகம் தேவைப்படுகிறது. நூலகம் பல சாதாரண மக்களையும் சாமானிய மக்களாக மாற்றியிருக்கிறது. ஒருவரின் கல்வி வளர்ச்சிக்கும் அறிவை மேம்படுத்துவதற்கும் பெரிதும் உதவியாக இருப்பது நூலகம்தான். ஏழை, பணக்காரன் என்று எவ்விதப் பாகுபாட்டையும் பாராமல் அனைவரும் ஒன்றாகப் படிக்கக்கூடிய இடமாக நூலகம் விளங்குகிறது. அந்த நூலகத்தை செம்மைப்படுத்துவதற்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் எஸ்.ஆர்.ரங்கநாதன். அதனால்தான் இந்திய நூலகத்தின் தந்தை எஸ்.ஆர். ரங்கநாதன் எனப் போற்றப்படுகிறார். ஒவ்வொரு ஆண்டும் தேசிய நூலகர் தினம் ஆகஸ்டு 12 அன்று கொண்டாடப்படுகிறது. இவர் தமிழ்நாட்டில் சீர்காழி அருகே உள்ள வேதாந்தபுரம் என்னும் கிராமத்தில்1892 ஆம் ஆண்டு ஆகஸ்டு 12ஆம் தேதி பிறந்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியைத் தொடங்கினார். பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் முதல் நூலகர் ஆனார்.
இங்கிலாந்து சென்று நூலக அறிவியலில் புதுமையைக் கற்றார். புத்தகங்களைப் பொருள் அர்த்தம் வாரியாக அடுக்குவதற்காக கோலன் பகுப்பு முறை என்னும் பகுப்பு முறையைக் கண்டுபிடித்தார். இவர் ஆராய்ந்து கண்டுபிடித்த இந்த முறை நூலகங்களில் பின்பற்றப்பட்டது. இந்தப் பகுப்பு முறையானது நூல்களை எளிதில் அடுக்கவும், கண்டுபிடித்து எடுக்கவும் எளிமையானதாக இருந்தது. நூலகத் துறைக்கு முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட ரங்கநாதனின் பிறந்த தினம் இன்று.
புத்தகங்கள்தான் மனிதனின் குணநலன்களை மாற்றியுள்ளது என்பதை அறிந்த ரங்கநாதன் ஐந்து விதிகளை அறிமுகம் செய்தார்.
1. புத்தகங்கள் பயன்படுத்தும் முறை
2. வாசகரின் நேரத்தைப் பாதுகாத்தல்,
3. நூலகம் ஒரு வளரும் அமைப்பு,
4. ஒவ்வொரு வாசகருக்கும் புத்தகம்,
5. ஒவ்வொரு புத்தகத்திற்கும் வாசகர்
போன்ற பல நல்ல செயல்களைச் செயல்படுத்தியதால் இவருக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியது.
நூலகத் துறைக்குப் பல செயல்களைச் செய்த ரங்கநாதன் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி 1972ஆம் ஆண்டு மறைந்தார்.