அமெரிக்காவின் ஹவாய் தீவில் கடும் காட்டுத் தீ!
அமெரிக்காவின் ஹவாய் தீவு அருகே உள்ள மவுய் தீவு பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை தற்போது 67 ஆக அதிகரித்து உள்ளது.
அமெரிக்காவின் ஹவாய் தீவு அருகே கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெரும் காட்டுத்தீ ஏற்பட்டு அதிக பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது.
இந்த தீ நகருக்குள் பரவியதால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதம் அடைந்தன. பலர் உயிருக்கு பயந்து கடலில் குதித்தனர். இந்த காட்டுத்தீயில் சிக்கி உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை தற்போது 67 ஆக அதிகரித்து உள்ளது.
பலர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீ ஓரளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும் எங்கு பார்த்தாலும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.
தீ விபத்து ஏற்பட்டதும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி விட்டனர். தற்போது தீ அணைக்கபட்டதால் பொதுமக்கள் ஊருக்கு திரும்பினார்கள்.
அவர்கள் வீடுகள் தீயில் எரிந்து எலும்புகூடாக காட்சி அளிப்பதை பார்த்து கண்ணீர் விட்டு கதறினார்கள். இந்த தீ விபத்து காரணமாக வீடுகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்து விட்டதால் அவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
பல நூற்றுக்கணக்கானோர் மாயமானதாக அறிவிக்கப்பட்டு, அவர்களை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க ஏராளமான தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தீ எரிந்து வரும் நிலையில், டோரா புயலின் காரணமாக வீசிய சூறாவளிக் காற்று தீ மேலும் பரவக் காரணமாக இருந்தது.
இதுகுறித்துப் பேசிய ஆளுனர் ஜோஷ் கிரீன், “ஹவாய் வரலாற்றிலேயே இது மிகவும் மோசமான இயற்கைப் பேரழிவாக இருக்கிறது,” என்றார்.
மேலும், வரலாற்றுச் சிறப்புமிக்க லஹைனா கடற்கரையில் 80 சதவீத பகுதிகள் தீக்கு இரையாகிவிட்டன என்றும் கூறினார்.
தீ வேகமாகப் பரவியதால் லஹைனா கடற்கரையில் குழுமியிருந்த சுற்றுலாப் பயணிகள் கடலுக்குள் குதித்து மிகுந்த சிரமங்களுக்கு இடையே பல மணிநேரம் நடந்து தப்பிச் சென்றனர்.