“அச்சத்தை அழித்து விடு” | முனைவர் சுடர்க்கொடி கண்ணன்
நம்மில் பலரும் நம் மனதில் இருக்கும் பலதரப்பட்ட அச்சங்களால், எந்த ஒரு செயலையும் எடுத்துச் செய்ய அச்சப்பட்டு விட்டுவிடுகின்றோம். தோற்று விடுவோமோ என்ற அச்சத்தால் பல வெற்றிகளைக் கை நழுவ விடுகின்றோம். இதில் தவறு நம் மீது மட்டுமல்ல, நம் குழந்தைப் பருவத்திலிருந்தே நம்மை அச்சுறுத்தியே வளர்த்து வந்துள்ளார்கள். இதைத்தான் திரு. பட்டிக்கோட்டை கல்யாணசுந்தரம் போன்ற கவிஞர்கள், ‘வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு விளையாடப் போகும்போது சொல்லி வைப்பாங்க – உந்தன் வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க, வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே – நீ, வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பி விடாதே’, என்று தைரியமூட்டினார்கள். சிலர் அஞ்சுவது தவறு என்பார்கள்; பலர் அஞ்சாதது தவறு என்பார்கள். எதை எடுத்துகொள்வது? எதை விடுவது? என்று, மொத்தத்தில் நாம் குழப்பமடைகிறோம்.
“அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்”, என்பார் வள்ளுவர்.
அதாவது, அச்சப்படவேண்டியவற்றுக்கு அச்சப் படாமல் இருப்பது பேதமை என்கிறார் தெய்வப் புலவர். மற்றவர்களுக்குத் தீமை விளைவிக்கும், மனசாட்சியற்ற செயல்களைச் செய்வதற்கு அஞ்சி, அதை செய்யாமல் இருப்பவர்கள் அறிவுடையவர்கள் ஆவர். ஆனால் அர்த்தமற்ற அச்சம் என்பது மடைமைதானே. எனவே, மனதில் தோன்றும் அச்சம் எத்தகையது என்று நிதானித்து உணர வேண்டும். எப்போதும் நல்ல செயல்களுக்கு மட்டுமே மனதில் இடம் தர வேண்டும். செயலின் நேர்மையே மனதின் துணிவுக்குத் துணை நிற்கும்.
அச்சம் என்பது மடமை என நினைத்து அடாதச் செயல்களைச் செய்தல் கூடாது. உழைக்காமல் பெற்ற செல்வம், மனசாட்சி இல்லாத இன்பம், பண்பு இல்லாத அறிவு, ஒழுக்கம் இல்லாத வணிகம், மனித நேயம் இல்லாத அறிவியல், தியாகம் இல்லாத வழிபாடு, கொள்கைகள் இல்லாத அரசியல் ஆகியவற்றை எப்போதும் செய்யக்கூடாத ஏழு சமூக பாவங்கள் என்கிறார் மகாத்மா காந்தியடிகள். இத்தகைய பாவங்களை மனதாலும் நினையாமல் இருப்பதுதான் “உண்மையான வீரம்”.
அச்சம் தவிர்
வெற்றியைத் தரக்கூடிய நேர்மையான செயல்களை செய்யும்போது, தோல்விகளை நினைத்தோ, தடைகளை நினைத்தோ அச்சம் கொள்ளக் கூடாது. மனதில் உருவாகும் இருள் போன்ற அச்சத்தைப் போக்க துணிவு என்னும் ஒளி வேண்டும். தோல்வி அடைந்து விடுவோமோ என்ற எண்ணமே அச்சமாக மாறி, அதுவே தயக்கமாக மனதில் தேங்கி விடுகிறது. அச்சம் தோன்றும்போது மனதை கூர்ந்து கவனித்து, “கூடுதல் கவனத்தோடு” விழிப்புணர்வுடன் செயல்படுவதே அச்சத்தைப் போக்கும் சரியான வழியாகும். தோல்விகளை சந்திக்க நாம் அச்சப்பட வேண்டியதில்லை. ஏனெனில் தோல்வி என்பது பிரச்சனைகளால் உருவாவதை விட பெரும்பாலும் அந்தப் பிரச்சனைகளைக் கண்டு பயப்படுவதால்தான் உருவாகின்றன. மேலும், அந்தத் தோல்வியை அனுபவமாக எடுத்துக்கொண்டு, சரியான முறையில் உழைத்து, வெற்றி பெறுவதற்கும் துணிவுதான் துணையாக உள்ளது. இதனால்தான் “துணிந்தவனுக்கு துக்கம் இல்லை” என்று பெரியோர்கள் கூறியிருக்கிறார்கள்.
மேலும், Comfort Zone என்று சொல்லக்கூடிய (ஏற்கனவே இருக்கும்) பாதுகாப்பு சூழ்நிலையில் உள்ள பிடிப்பே அடுத்து வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்துவதற்கு பலருக்குத் தயக்கத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. இந்த Comfort Zone ஐ உதறி விட்டுத் துணிச்சலாக வெளியே வருபவர்களே வாழ்க்கையில் வெற்றி அடைகிறார்கள். உதாரணத்திற்கு, நன்றாக கதைகள் எழுதக் கூடிய திறமை இருந்தும் ஹாரி பாட்டர் புத்தகங்களை எழுதிய ஜே.கே.ரோலிங் ஆரம்பத்தில் சுலபமாக Comfort Zone ல் வாழ விரும்பி, ஆசிரியையாகி சம்பாதிக்கலாம் என்று நினைத்தார். ஆனால், மண வாழ்க்கை சரியில்லாததால், கணவரை விட்டுப் பிரிந்து, ஒற்றைத் தாயாக பல கஷ்டங்களைச் சந்திக்கிறார். தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார். பின்னர் சிறிது சிறிதாக அந்த எண்ணங்களில் இருந்து வெளியேறி, கதைகள் எழுதத் தொடங்குகிறார். அவருடைய பல கதைகள் முதலில் நிராகரிக்கப்படுகின்றன. பின்னர் ஒரு சிறு பிரசுர நிறுவனம் அவருடைய படைப்பை ஏற்றுக் கொண்டது. 1997 ல் ஜே.கே.ரோலிங்கின் நெட்வொர்த் பூஜ்ஜியம். ஆனால், 2015 ல் அவருடைய நெட்வொர்த் ஒரு பில்லியன் டாலர்களாக இருந்தது. எனவே, வெற்றி பெற வேண்டும் என்றால், முதலில், ‘Comfort Zone’ ஐ விட்டு வெளியேறி, திட்டங்களைத் தீட்ட வேண்டும். ’ரிஸ்க் எடுப்பதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுவது மாதிரி’, என்ற எண்ணத்தைக் கொள்ள வேண்டும். உலகப் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி அவர்கள் ஒரு பேட்டியில், ‘வாழ்வில் வெற்றி பெற ‘Comfort Zone’ ஐ விட்டு வெளியே வருவது அவசியம் என்று தெரிவித்திருந்தார். ஆக நீங்களும் வெற்றியாளர்களாக மாறுவதற்கு உங்கள் அச்சத்தை விடுத்து, வாய்ப்புகளைப் பயன்படுத்தக் கற்றுக் கொள்ளுங்கள்.
“இழப்பதற்கு வேறொன்றுமில்லை அச்சத்தைத் தவிர” என்று நினைப்பவர்கள் தான் துணிந்து முன்னேறி செயல்பட முடியும். மனதில் துணிவு கொண்டவர்களே, எதிர்த்து நின்று போராடும் வல்லமையைப் பெறுகின்றனர். எண்ணியதை எண்ணியவாறு திறம்பட செய்து முடிக்கின்றனர். ‘வழியஞ்சி பயணம் மறந்தோர் பழியஞ்சி செயல் இழந்தார்’ என்பார்கள் நம் முன்னோர். அதாவது, வழிக்கு அஞ்சினால் பயணம் செய்ய முடியாது. பழிக்கு அஞ்சினால் செயல் செய்ய முடியாது. ஆகவே, அச்சம் தவிர்த்து, கருமமே கண்ணாகி, துணிவின் துணை கொண்டு வெற்றி இலக்கை நோக்கிச் செல்லுங்கள். அந்த வானமும் உங்களுக்கு வசப்படும்.
-(முனைவர் சுடர்க்கொடி கண்ணன்)