பூத்திருக்கும் விழியெடுத்து – 4 | முகில் தினகரன்
அத்தியாயம் – 4
இரவு நீண்ட நேரம் கண் விழித்து, மூளையைக் கசக்கிப் பிழிந்தும் அசோக்கிற்கு நடன நிகழ்ச்சிக்கான தெளிவான கான்ஸெப்ட் கிடைக்கவில்லை. “ப்ச்… என்ன இது?… இன்னிக்கு என் மூளை ரொம்பவே மந்தமாயிருக்கு?…”
மொபைலை எடுத்து நேரம் பார்த்தான். மணி ஒண்ணே முக்கால்.
“சரி… இதுக்கு மேலே யோசிச்சா இருக்கற மூளையும் கரைஞ்சு போகும்… காலைல பார்த்துக்கலாம்”
படுக்கையில் படுத்தவன் எங்கிருந்தோ பேச்சுக் குரல் கேட்க, எழுந்து போய் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தான். கீழ்ப் போர்ஷனில் குடியிருக்கும் ஹவுஸ் ஓனர் விஸ்வேஸ்ரனும், அவர் மனைவியும் அந்த அகால நேரத்தில் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். “என்ன இது?.. கொஞ்சம் கூட நாகரீகமில்லாமல்… அக்கம் பக்கத்துல குடியிருக்கறவங்களைப் பத்தி துளிக்கூட கவலைப்படாமல் இப்படி உரக்கக் கத்தி சண்டை போட்டுக்கறாங்களே… என்னாச்சு இவங்களுக்கு?’
கீழே இறங்கிப் போய் விசாரிக்கலாமா? என்று யோசித்தவன், “சேச்சே…அவங்க குடும்ப விஷயத்துல நாம போய்த் தலையிடறது… அவங்க செய்யுற இந்தக் காரியத்தை விட அநாகரீமான செயல்…” என்று தனக்குத் தானே கட்டுப்பாடு விதித்துக் கொண்டு, மறுபடியும் போய் கட்டிலில் படுத்தான். ஆனால், காது மட்டும் கீழே நடக்கும் அந்த கணவன் மனைவிக்கிடையிலான ஆக்ரோஷ சம்பாஷனையை கூர்ந்து கேட்டது.
“இங்க பாருங்க… மீனா கல்யாணத்துக்கு நிக்கற பொண்ணு.. இந்த நேரத்துல அவள் கராத்தே கிளாஸ் அதுஇதுன்னு போறது எனக்கு சுத்தமா பிடிக்கலை… அவ்வளவுதான் நான் சொல்லுவேன்” விஸ்வேஸ்வரனின் மனைவி தன்னுடைய முத்தாய்ப்புக் கருத்தாய் அதைக் கூற,
“ஏய்… ஏண்டி இன்னும் பத்தாம்பசலியாவே இருக்கே?… இந்த மாடர்ன் யுகத்துல மனுஷங்க மனசும் மாசு படிஞ்சு போய்க் கிடக்குதுடி!… எவன் நல்லவன்?…எவன் கெட்டவன்?னு மொகரையைப் பார்த்துக் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு நடிக்கக் கத்துக்கிட்டான் மனுஷன்!… “நல்லவனைப் போல சில கள்ளரும் இருப்பாங்க…நம்பி வரும் பாதையிலே கொள்ளையும் அடிப்பாங்க”ன்னு அந்தக் காலத்துல ஒரு பாட்டு வரும்… அது நூத்துக்கு நூறு இந்தக் காலத்துக்குப் பொருந்தும்டி!”
“சரி… இவ கராத்தே கத்துக்கிட்டு என்ன பண்ணப் போறா?… ரோட்டுல போற வர்ற ரவுடிப் பசங்களையெல்லாம் அடிக்கப் போறாளா?…” விஸ்வேஸ்வரன் மனைவி கேட்டாள்.
“ரோட்டுல போற… வர்றவங்களை அடிக்க மாட்டா… அவளைச் சீண்டுறவங்களை அடிப்பா!… இங்க பாரு கோமதி… இப்பக் காலம் ரொம்பக் கெட்டுக் கிடக்குடி… பெண்களுக்கு பள்ளிக் கூடத்திலும் பாதுகாப்பு இல்லை… காலேஜிலேயும் பாதுகாப்பு இல்லை… வேலைக்குப் போற இடத்திலேயும் பாதுகாப்பு இல்லை… அவங்க தற்காப்புக்கலையைக் கத்து வெச்சுக்கறது காலத்தின் கட்டாயம்!…” விஸ்வேஸ்வரன் ஆணித்தரமாய்ச் சொன்னார்.
“அப்படி யாராவது வந்து இவளைச் சீண்டினா…. நீங்க இல்லையா?… நீங்க போய்க் கேட்க மாட்டீங்களா?…”
“அது செரி… நான் என்ன இருபத்து நாலு மணி நேரமும் அவ கூடவேயா திரியறேன்!… ”.
“அப்பா… அம்மாவுக்குப் பிடிக்கலேன்னா… நான் கராத்தே கிளாஸுக்குப் போகலைப்பா…” மகள் சுகந்தா சொல்ல,
“அட நீ ஏம்மா… மனசு மாறுறே?… உன்னோட கோரிக்கைல உறுதியா இரு… “கண்டிப்பா கராத்தே கிளாஸுக்குப் போயே தீருவேன்”ன்னு சொல்லு… அதுக்கான ஃபீஸை நான் கட்டுறேன்” விஸ்வேஸ்வரன் மகளுக்கு பெருத்த ஆதரவைத் தந்தார்.
“அப்பனும் மகளும் ஒண்ணு சேர்ந்துக்கிட்டு என்னை அடக்கறீங்களா?… இதுக்கு மேலே நான் பேச மாட்டேன்!… எக்கேடோ கெட்டுப் போடி” சொல்லி விட்டு விஸ்வேஸ்வரனின் மனைவி வீட்டிற்குள் சென்று விட,
“ஹ..சூப்பர்…சூப்பர் கான்ஸெப்ட் கிடைச்சுது!… பெண்கள் தற்காப்புக் கலையைக் கத்துக்கிட்டா அது அவங்களுக்கு எத்தனை பலமா… பாதுகாப்பா இருக்கும்கறதைச் சொல்லுற மாதிரியான ஒரு ஸ்கிரிப்டை உடனே தயார் பண்ணனும்” அது இரவு இரண்டரை மணி என்பதைப் பற்றிக் கூட கவலைப்படாமல் பேப்பரையும் பேனாவையும் எடுத்து வைத்துக் கொண்டு எழுத ஆரம்பித்தான் அசோக். கீழே, தான் கண்ட அந்தக் காட்சியை அப்படியே ஸ்கிரிப்ட் செய்தான். நடன அசைவுகளின் மூலம் காட்சியின் வசனங்களை உணர்த்தினான். கராத்தே என்னும் கடுமையான போர்க்கலையையும், மென்மையான நடன அசைவுகளையும் இணைத்து புதுவிதமான மூவ்மெண்டுகளைக் கண்டுபிடித்தான்.
அந்த நாட்டியக் காட்சியைக் காணும் அனைவரும், அன்றே தங்கள் வீட்டுப் பெண் குழந்தைகளை கராத்தே வகுப்பில் சேர்த்து விட்டுத்தான் மறு வேலை பார்ப்பார்கள், என்கிற விதத்தில் கனமானதொரு கருத்தினை நாட்டியத்தின் இறுதியில் நாட்டினான்.
மறுநாள் நடைபெற்ற முதல் செலக்ஷன் போட்டியில், முப்பது ஸ்டூடண்ட்ஸ் என்பது, பதினேழு ஸ்டூடண்ட்ஸ் எனச் சுருக்கியது.
இரண்டாம் நாள் நடைபெற்ற இரண்டாவது சுற்று போட்டியில் பதினேழு…பதிமூன்றானது.
மூன்றாம் நாள் நடைபெற்ற கடுமையான இறுதிப் போட்டியில் பதிமூன்று ஒன்பதானது.
தேர்வான அந்த ஒன்பது பேரில் இரண்டே இரண்டு பெண்கள், மீதி ஏழு பேரும் ஆண்கள்.
தன்னுடைய ஸ்கிரிப்டை அந்த மாணவ மாணவிகள் கையில் கொடுக்கும் முன், அவர்களுக்கு கான்ஸெப்டைப் புரிய வைத்தான். பின் முக பாவங்கள் மூலம் வசனங்களை உணர்த்தி விடும் வித்தையைச் சொல்லிக் கொடுத்தான். புதுமையான அசைவுகளை எளிதாக்கிக் காட்டினான். பின்னர் அவர்கள் கையில் அந்த நடன ஸ்கிரிப்டைக் கொடுத்து வாசிக்கச் செய்தான்.
“சார் ஃபண்டாஸ்டிக் சார்”
“நிச்சயமாய் இதை மிஞ்சி யாருமே புரோக்ராம் பண்ண முடியாது சார்”
“சார் ஒரு ஆங்கில புரபஸரான நீங்க ஒரு கோரியோகிராபர் ஆனது மட்டுமில்லாம… எங்களுக்கு டான்ஸ் மாஸ்டராகவும் இருப்பது… உண்மையிலேயே நாங்க செஞ்ச பாக்கியம் சார்”
“புகழ்ந்தது போதும்.. இன்னையிலிருந்தே பிராக்டீஸை ஸ்டார்ட் பண்ணுவோம்!… சில மூவ்மெண்ட்ஸ் ரொம்பவே கஷ்டமாயிருக்கும்!… அதை இஷ்டப்பட்டு செஞ்சீங்கன்னா… வெற்றிக் கோப்பை நம் கையில்!…அவ்வளவுதான்!… ஓ.கே.?”
“ஓ.கே.சார்” ஒட்டு மொத்தமாய் ஸ்டூடண்ட்ஸ் அனைவரும் ஒரே குரலில் சொல்ல,
“இங்க பாருங்கப்பா… இந்த கான்ஸெப்டை நாம ஃபைனல்ஸ் போட்டிக்கு மட்டும்தான் பயன்படுத்தப் போறோம்!… ஃபைனல்ஸுக்கு முன்னாடி நடக்கப் போற லீக் ஆட்டங்களிலும், கால் இறுதி… அரை இறுதி ஆட்டங்களிலும் நாம வேற லைட்டான கான்ஸெப்டைப் பயன்படுத்துவோம்… ஓ.கே?”
தன் பயிற்சியினைத் துவங்கினான் அசோக்.
பொதுவாகவே அசோக் பின்பற்றும் நடைமுறை என்னவென்றால், டான்ஸ் ஆடுபவர்களுக்கு கடும் பயிற்சியைக் கொடுப்பதை விட, அவர்கள் மனத்தில் பெரும் நம்பிக்கையையும், கடும் வெறியையும் ஏற்படுத்தி விட்டால், அவர்கள் வெற்றிக் குழந்தையை எளிதாய்ப் பெற்று, மகிழ்வாய்த் தாலாட்டுவார்கள் என்பதுதான்.
“ஓ.கே… வைசாலி… உனக்காக… நம்ம காதலுக்காக… நான் இந்த வருஷம் டான்ஸ் போட்டில கலந்துக்கலை…. அப்படி நான் கலந்துக்கலேன்னா… எங்க வகுப்பிலிருந்து வேற யாராவது கலந்துக்குவாங்க!… “
“நோ ப்ராப்ளம் அசோக்”
“ஆனா… அந்த வேற யாராவதுக்கு நான் பிராக்டீஸ் குடுக்கணும்ன்னு என்னை வற்புறுத்தினாங்கன்னா… நான் என்ன பண்றது?”
“முடியாதுன்னு ஓப்பனா சொல்லிடு அசோக்”
“அதெப்படி வைசாலி… என் கிளாஸ் மேட்ஸ் என்னை விடுவாங்களா?… நான் டான்ஸ் போட்டில கலந்துக்க மாட்டேன்னு சொன்னா உடனே கண்டுபிடிச்சிடுவாங்க… அது உனக்காகத்தான்!னு… அதுக்கப்புறமும் நான் எங்க கிளாஸ் ஸ்டூடண்டுக்கு பிராக்டீஸ் குடுக்க மாட்டேன்னு சொன்னா… “ஓ… நம்ம வகுப்பை விட… எங்க ஃப்ரண்ட்ஷிப்பை விட உனக்கு உன்னோட காதலி பெரிசாய்ப் போயிட்டாளா?”ன்னு என்னை ஒட்டு மொத்தமா எல்லோருமே அவாய்ட் பண்ணிடுவானுக”
“பண்ணட்டுமே அசோக்!… அவங்க அத்தனை பேர் ஃப்ரண்ட்ஷிப்புக்கு ஈடா என் ஒருத்தியோட காதல் கிடைக்குதல்ல உனக்கு?”
“ம்ம்ம்.. நீ சொல்றதும் சரிதான் வைசாலி!… ஆனா அத்தனை பேரையும் எதிரிகள் ஆக்கிக்கிட்டு அதே வகுப்புல என்னால எப்படிடா உட்கார முடியும்?”
“ம்… என்னை நினைச்சுக்கோ!…. உன்னால உட்கார முடியும்”
“இல்லை வைசாலி…. நாம செய்யற இந்த விஷயம் ஏதாவதொரு விபரீதத்துல போய் முடிஞ்சிடுமோ?ன்னு பயமாயிருக்கு வைசாலி”
“ம்ம்… நீ டான்ஸ் ஆடி…நான் தோத்தா அது மிகப் பெரிய விபரீதத்துல முடியும்… அது பரவாயில்லையா?”
“அதான் நான் ஆட மாட்டேன்!னு சொல்லிடேனல்ல?”
“அங்க ஆடற எவனுக்கும் பிராக்டீஸும் குடுக்கக் கூடாது”
“ம்”
தனக்குள் தோன்றி மறைந்த அந்த ப்ளாஷ்பேக் காட்சியை வேதனையுடன் மென்று விழுங்கினான் அசோக்.
-( மலரும்… )