“ஓப்பன்ஹெய்மரும்.., பகவத் கீதையும்..!”
கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ‘ஓப்பன்ஹெய்மர்’ திரைப்படம் இந்தியாவில் வெளியான 24 மணி நேரத்திற்குள்ளாகவே சர்ச்சையில் சிக்கியுள்ளது. அந்த திரைப்படத்தில் இடம் பெறும் அந்தரங்க காட்சி ஒன்றில், நாயகனும், நாயகியும் சமஸ்கிருத சொற்றொடரை வாசிக்கின்றனர். அந்த காட்சி இந்தியாவில் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்துக்கள் புனிதமாக கருதும் பகவத் கீதையில் இடம் பெறும் வரிகள் அவை என்று படத்தைப் பார்த்தவர்கள் கூறியதாக பி.டி.ஐ. செய்தி முகமை தெரிவிக்கிறது. அந்தக் காட்சியை நீக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர். இந்த 180 நிமிட திரைப்படம் உலகின் முதல் அணுகுண்டை உருவாக்கிய ஆய்வாளர் ராபர்ட் ஓப்பன்ஹெய்மரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது.
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இந்த திரைப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்தியாவில் அந்த திரைப்படம் முதல் 2 நாட்களில் 30 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக திரையுலகினர் கூறுகின்றனர். அந்த சர்ச்சைக்குரிய காட்சியில், நாயகன் ஓப்பன்ஹெய்மராக வரும் நடிகர் சிலியன் மர்பி, மனநல ஆலோசகர் ஜீன் டாட்லருடன் தனிமையில் இருக்கிறார். அந்த அந்தரங்க காட்சியில், ஜீன் ஒரு புத்தகத்தை எடுத்துக் காட்டி அது எந்த மொழியில் எழுதப்பட்டுள்ளது என்று ஓப்பன்ஹெய்மரிடம் கேட்கிறார். அந்த புத்தகத்தில் இருந்து ஒரு பக்கத்தை வாசிக்குமாறும் அவர் கூறுகிறார். அவரது வேண்டுகோளுக்கு இணங்க, ‘உலகங்களை அழிக்கும் காலன் நான்’ என்ற வரிகளை ஓப்பன்ஹெய்மர் வாசிக்கிறார். அந்தக் காட்சியில், ஜீன் கையில் எடுக்கும் புத்தகத்தின் பெயர் தெரியும் வகையில் இருக்காது. ஆனால், அந்த பக்கம் சமஸ்கிருதத்தைப் போல தோன்றும்.
சமூக வலைதளங்களில் இந்த படத்தை விமர்சிக்கும் சிலர், அந்த வரிகள் பகவத் கீதையில் இருந்து எடுக்கப்பட்டவை என்று கூறுகின்றனர். இந்திய அரசின் தகவல் ஆணையர் உதய் மஹூர்கர் தனது ஆட்சேபனையை பகிரங்க கடிதம் வாயிலாக ஓபன்ஹெய்மர் படத்தின் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனுக்கு தெரியப்படுத்தியுள்ளார். அவர் ‘கலாசாரத்தை பாதுகாப்போம் இந்தியா பவுண்டேஷனை பாதுகாப்போம்’ என்ற அமைப்பின் நிறுவனரும் கூட. ஓப்பன்ஹெய்மர் படத்தில் இடம்பெற்றுள்ள அந்த சர்ச்சைக்குரிய காட்சி ‘இந்துத்வா மீதான தாக்குதல்’, அந்த காட்சியை நோலன் நீக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். “புனித நூலின் கண்ணியத்தை பாதுகாக்க வேண்டும், உலகம் முழுவதும் திரையிடப்படும் இந்த படத்தில் அந்த சர்ச்சைக்குரிய காட்சியை நீக்க வேண்டும் என்று லட்சக்கணக்கான இந்துக்கள் சார்பாக வேண்டுகோள் விடுக்கிறேன். இந்த வேண்டுகோளை அலட்சியம் செய்வது இந்திய நாகரிகத்தை வேண்டுமென்றே விமர்சித்ததாக கருத இடம் கொடுத்துவிடும். நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதை எதிர்பார்த்திருக்கிறோம்” என்று அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அணுகுண்டின் தந்தை என்று வர்ணிக்கப்படும் ஓப்பன்ஹெய்மர் சமஸ்கிருதம் கற்றவர், பகவத் கீதையால் ஈர்க்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. 1945, ஜூலை 16-ம் தேதி அணுகுண்டு வெடிப்பை முதன் முறையாக பார்த்ததும், செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஓப்பன்ஹெய்மர்,”இந்து புராண புத்தகமான பகவத் கீதையின் சில வரிகள் என் நினைவுக்கு வந்தன” என்று குறிப்பிட்டார். “அர்ஜூனனுக்கு உபதேசித்த கிருஷ்ணர் நீ உன் கடமையை தொடர்ந்து செய் என்று கூறினார். அர்ஜூனனுக்கு விஸ்வரூப தரிசனம் காட்டி, நான் இப்போது உலகங்களை அழிக்கும் காலன்” என்று கூறினார். பகவத் கீதையில் 11வது பாகம் 32-வது பாடலில் அந்த வரிகள் வருகின்றன. ஓப்பன்ஹெய்மர் படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் அளித்திருப்பதாக பி.டி.ஐ. செய்தி முகமை தெரிவித்துள்ளது. படத்தின் நீளத்தை குறைக்கவும், இந்தியாவில் 13 வயதுக்கு மேற்பட்ட சிறார் பார்க்க வசதியாக சில காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் இந்தப் படத்திற்கு ‘R’ சான்று அளிக்கப்பட்டுள்ளது. அதாவது ‘வரையறுக்கப்பட்டது’ என்று கூறப்படும் இந்த சான்றிதழின்படி, 17 வயதுக்கும் குறைவான சிறார், தங்களது பெற்றோர் அல்லது பெரியவர்களுடன் சென்று இந்தப் படத்தைப் பார்க்கலாம்.
கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் ‘R’ சான்று பெற்ற முதல் படம் இதுதான்.இந்தியாவில் இந்தப் படத்திற்கு யு/ஏ சான்று கிடைத்திருப்பது குறித்தும் மஹூர்கர் கேள்வி எழுப்பியுள்ளார். “சர்ச்சைக்குரிய அந்த காட்சியுடன் இந்தப் படத்தைத் திரையிட தணிக்கை வாரியம் எப்படி அனுமதித்தது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை” என்று அவர் கூறியுள்ளார். தேசிய திரைப்பட தணிக்கை வாரிய தலைவர் பிரசூன் ஜோஷியோ, அதன் மற்ற உறுப்பினர்களோ இதுகுறித்து இதுவரை ஏதும் கருத்து கூறவில்லை. அதேநேரத்தில், ஓப்பன்ஹெய்மர் படத்தை இந்தியாவில் புறக்கணிப்போம் என்று சிலர் அழைப்பு விடுத்துள்ளனர். “பகவத் கீதையை உள்ளடக்கிய சர்ச்சைக்குரிய காட்சி இந்த படத்தில் இடம் பெற்றிருப்பதாக தெரியவந்தது. அது ஆட்சேபத்திற்குரிய காட்சி. இந்துத்வாவை நேர்மறையாக, சரியான விதத்தில் ஹாலிவுட்டோ, மேற்குலகமோ காட்டும் என்று நம்ப முடியாது” என்று சமூக வலைதளத்தில் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
“ஓப்பன்ஹெய்மர் பகவத் கீதையை குறிப்பிடட்தாக இந்துக்கள் மகிழ்ச்சி கொள்கிறார்கள். அதேநேரத்தில், பகவத் கீதையை பகிரங்கமாக ஹாலிவுட் அவமரியாதை செய்திருப்பது கண்டு அவர்கள் ஆத்திரம் கொண்டுள்ளனர். உடலுறவின் போது புனித வரிகளை ஓதுவது அவமரியாதை மற்றும் இன பாகுபாடு ஆகும். படத்தைப் புறக்கணிக்க வேண்டும்.” என்று மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார். பகவத் கீதை காட்சியை படத்தில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் கிறிஸ்டோபர் நோலன் பயன்படுத்தியிருக்கலாம். அவர் ஏன் இந்த இடத்தில் பயன்படுத்த முடிவு செய்தார் என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். கீதையால் ஓப்பன்ஹெய்மர் ஈர்க்கப்பட்டிருக்கலாம், ஆனால் அதை இந்தக் காட்சியில் காட்ட வேண்டிய அவசியமில்லை என்று சிலர் கூறுகிறார்கள்.
ஓபன்ஹெய்மருக்குப் பதிலாக கன்னட சினிமாவைப் பார்க்க விரும்புகிறேன் என்று இன்னொருவர் பதிவிட்டுள்ளார். “எல்லோரும் ஓப்பன்ஹெய்மர் ஒரு தலைசிறந்த படைப்பு என்று கூறுகிறார்கள், ஆனால் ஒரு பாலியல் காட்சியில் பகவத் கீதை குறிப்பிடப்பட்டுள்ளதை அறிந்த பிறகு, நான் கன்னட படத்தைப் பார்க்கவே விரும்புவேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். படத்தின் ஒரு காட்சியில், ஒரு பெண் நிர்வாணமாக இருக்கையில் பகவத் கீதையை கொண்டு வருவதாகவும், உடலுறவின் போது அதில் இருந்து சில வரிகளை ஓப்பன்ஹெய்மர் வாசிப்பதாகவும் ஒருவர் கூறியுள்ளார். இந்தக் காட்சி மிகவும் அவமானகரமானது என்பது அவரது கருத்து.
படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் பேசிய நாயகன் சிலியன் மர்பி, இந்தப் படத்திற்காக தயாராகும் போது தாம் பகவத் கீதையை படித்ததாக கூறினார். இந்நூல் மிகவும் அழகாக எழுதப்பட்டுள்ளது என்றும், ஊக்கமளிக்கும் ஒன்று என்றும் அவர் கூறினார். யுனிவர்சல் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் சிலியன் மர்பி, ஃப்ளோரன்ஸ் பக் தவிர ராபர்ட் டௌனி ஜூனியர், மேட் டெமான், எமிலி பிளண்ட், ஜோஷ் ஹார்ட்நெட், கேசி அஃப்லெக், ராமி மாலிக் மற்றும் கென்னத் பிரானாக் ஆகியோரும் நடித்துள்ளனர்.