என். டி ராமராவ் பள்ளி மாணவிகளிடம் மன்னிப்பு
கர்ணன் திரைப்படம்
இந்த படத்தில் நடித்த என். டி ராமராவ் பள்ளி மாணவிகளிடம் மன்னிப்பு கேட்டார்.
தமிழ்த்திரையின் வரலாறு படைத்த மாபெரும் காவியமான நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வள்ளல் “கர்ணனா”க பாத்திரமேற்று நடித்த பிரமாண்ட படைப்பான “கர்ணன்” திரைப்படம் வெள்ளித் திரைக்கு வந்து வசூலை அள்ளித் தந்து 58ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. (14.1.1964)
1964இல் 40லட்சம் ரூபா செலவில் தயாரிக்கப்பட்டது.
இப்போது இதன் மதிப்பு 500கோடி.
பத்மினி பிக்ஸர்ஸ் சார்பில் பி.ஆர்.பந்துலு அவர்களின் தயாரிப்பு இயக்கத்தில் வெளியான படம் “கர்ணன் “.
மகாபாரத காவியத்தில் மிக முக்கிய கதாபாத்திரமான கர்ணனை, அதுவரை ஹிந்தி,தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் எவரும் தயாரிக்கவோ அப்பாத்திரத்தில் துணிந்து எந்த நடிகரும் நடிக்கவோ தயங்கிய நிலையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அசாத்திய துணிவுடன் நடித்தார்.
பாண்டவர்களுக்கு அநீதி இழைக்கும் கௌரவர்களின் தலைவனான துரியோதனனுக்கு உயிர் நண்பனாக கர்ணன் பாத்திரம் அமைந்தமையினால் அக்காலத்தில் தைரியமாக இப்பாத்திரத்தில் எந்த முன்னணி நடிகரும் நடிக்க முன் வராத தருணத்தில் இப்பாத்திரத்தின் இயல்பான தன்மையை நன்கு உள்வாங்கிக் கொண்ட நடிப்பின் இமயம் சிவாஜி கணேசன் துணிந்து நடித்து இப்படத்தில் கர்ணனாகவே வாழ்ந்து காட்டினார்.
இந்திய சினிமா வரலாற்றை “கர்ணன்”திரைப்படத்தை தவிர்த்து எழுத முடியாது.
இப்படத்தில் ஆரம்பத்தில் கிருஷ்ணராக நடிக்க தேர்வானவர் ஜெமினி கணேசனே.
சிவாஜி கணேசனின் வேண்டுகோளுக்கிணங்க ஜெமினி கணேசன் ஒதுங்கவே அப்பாத்திரத்தில் ராமர், கிருஷ்ணர் வேடத்திற்கென்றே பிறந்தவராகக் கருதப்படுகின்ற என்.டி.ராமராவ் நடித்தார். இவரை பிடிவாதமாக தேர்வு செய்தவர் சிவாஜி கணேசனே.
தெலுங்கு திரையுலகில் வேலைப்பளு மிகவும் அதிகமாக இருந்ததனால் என்.டி.ராமராவ் ஆரம்பத்தில் நடிக்க மறுத்தார்.
பின் சிவாஜி கணேசனின் விடாப்பிடியால் “கர்ணன்” படத்தில் கிருஷ்ணர் வேடத்தில் நடிக்க காலத்தை ஒதுக்கிக் கொடுத்தார் என்.டி.ராமராவ்.
சிவாஜிக்கு இணையாக என்.டி.ராமராவிற்கு இப்படத்தில் முக்கியத்துவம் வழங்கப்பட்டது. படத்தில் என்.டி.ராமராவ் வரும் கட்டத்திலிருந்து உச்சக்காட்சி வரை சிவாஜிக்கு இணையாக இவர் பயன் படுத்தப்பட்டு உரிய கௌரவம் ஆற்றினார் சிவாஜி
1964களில் இன்றைய காலங்களில் இருக்கும் கணிணி தொழில் நுட்பங்கள் போல் நவீன வசதிகள் அற்ற அக்காலகட்டத்தில் “கர்ணன்”போன்ற புராண இதிகாச சரித்திர படங்களை எவ்வளவு கடின உழைப்பிற்கு மத்தியில் உருவாக்கியிருப்பர் என்பதை தற்காலத்தவர்கள் உணரந்து பார்ப்பது அவசியமாகிறது.
“பாகுபலி”போன்ற படங்கள் எடுக்கப்பட்ட வசதிகள் அக்காலத்தில் இருந்திருப்பின்”கர்ணன்”திரைப்படம் “பென்ஹர்”, “டென் கமன்ட்மென்ட்ஸ்” போன்ற ஹொலிவுட் படங்களின் சிறப்புக்கு மேலாக சர்வதேச அளவில் பேசப்பட்டிருக்கும்.
சிவாஜி கணேசனின் மகள் தேன்மொழியும்,
என்.டி.ராமராவின் மகள் புரந்தரேஷ்வரியும் சென்னையில் ஒரே பள்ளித்தோழிகள். “கர்ணன்” படத்தில் புரந்தரேஷ்வரியின் அப்பா என்.டி.ராமராவ் கர்ணனைக் கொன்று விட்டார் என வருந்திய பள்ளி மாணவிகள் புரந்தரேஷ்வரியுடன் பேசுவதை நிறுத்தி விட்டார்களாம்.
விடயத்தை புரந்தரேஷ்வரி என்.டி.ராமராவிடம் கூற மறுநாளே பள்ளிக்கு வந்த என்.டி. ராமராவ் நடிப்பிற்காகவே அவ்வாறு செய்ததாக கூறி மன்னிப்புக் கேட்டு மாணவிகளை சமாதானப்படுத்தினார்.
டிஜிட்டல் வடிவில் “கர்ணன்” புதுப்பொழிவுடன் வெளியாகி அமோக வெற்றி பெற்று சாதனை படைத்தது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு
நாள் இன்று
மொத்தத்தில் தமிழ் சினிமாவில் “கர்ணன்”படம் ஓர் வரலாறு போற்றும் சரித்திரம்
இப்படத்தில் யாரும் சிவாஜி கணேசனைக் காணவில்லை
கர்ணனைத் தான் கண்டனர்.
இணையத்தில் படித்தது