“மரியான்’ 10ம் ஆண்டு நிறைவு நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட படக்குழுவினர்..”
தனுஷ் – யாரும் எதிர்பார்க்காத ஒரு வளர்ச்சி. இவரெல்லாம் எங்க சினிமாவில் சாதிக்க போகிறார் என்று ஆரம்பத்தில் ஏகப்பட்ட விமர்சனங்களுக்கு ஆளானவர். இதெல்லாம் ஒரு மூஞ்சியா? என்றும் வாய்க்கு வந்தப் படி பேசிக் கொண்டிருக்க எல்லாவற்றையும் தலையில் ஏற்றிக் கொள்ளாமல் யார் எப்படி வேண்டுமானாலும் பேசட்டும் என தன் நினைத்திருந்த இலக்கை நோக்கி பயணப்பட்டார். ஏராளமான வெற்றி தோல்விகளை கடந்து இன்று ஒரு நடிகராக, தயாரிப்பாளராக, பாடகராக, பாடலாசிரியராக என பன்முகத்திறமைகள் வாய்க்கபெற்றவராக வளர்ந்து நிற்கிறார் தனுஷ்.
யாரும் எதையும் ஈஸியாக எடுத்துக் கொள்ள முடியாதுதான். ஆனால் அதையே ஒரு உத்வேகமாக எடுத்துக் கொண்டால் விரைவில் லட்சியத்தை அடைய முடியும். அதற்கு ஒரு சிறந்த உதாரணமாக இருப்பவர் நடிகர் தனுஷ். இன்று உலக சினிமாவில் ஒரு முக்கிய நடிகராகவும் திகழ்ந்திருக்கிறார். கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என எல்லா பக்கமும் சுற்றிக் கொண்டு வரும் ஒரு உன்னத கலைஞனாக வலம் வரும் தனுஷ் தன்னுடைய 50 வது படத்தை நெருங்கியிருக்கிறார். அந்தப் படத்தை அவரே இயக்கி நடிக்கவும் செய்கிறார்.
இந்நிலையில் 2013ம் ஆண்டு வெளியான ‘மரியான்’, திரைக்கு வந்து 10 வருடங்களாகிவிட்டது. ரசிகர்கள் இதனை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். அவ்வகையில் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் பரத் பாலா, தனுஷ், பார்வதி மற்றும் பின்னணி பாடகர் விஜய் பிரகாஷ் ஆகியோர் இன்ஸ்டாகிராம் லைவ்வில் இணைந்து ‘மரியான்’ படம் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். பாடல்கள் உருவான விதம், வாலியின் வரிகள், தனுஷ்-பார்வதியின் நடிப்பு, ரஹ்மானின் இசை எனப் பல சுவாரஸ்யமான விசயங்களைப் பற்றி பேசியிருந்தனர். அவை என்னென்ன என்பதை இங்கு அசைப் போட்டுப் பார்க்கலாம்.
இயக்குநர் பரத் பாலா, தனுஷிடம் “தனுஷ் நடிக்கும் படங்களைப் பார்த்து வருகிறேன். முன்பைவிட இப்போது சிறப்பாக நடிக்கிறார். அவர், மீண்டும் ‘மரியான்’ போன்ற காதல் படத்தில் நடிக்க வேண்டும்” என்று தனது ஆசையை வெளிப்படுத்தினார். அதற்கு, தனுஷ், “இப்போ எனக்கு வயசு 40 ஆகிவிட்டது. காதல் எல்லாம் மாற்றிவிட்டது. அம்மா, குழந்தைகள் மீதுதான் என் காதல். எதிர்காலத்தில் வாய்ப்பிருந்தால் பார்ப்போம்” என்றார். வாலி சார், வெறும் ஒரு மணி நேரத்தில் பாடல்களை எழுதிக் கொடுத்தார். காலத்துக்கும் நிற்கும் அற்புதமான காதல் பாடல்கள் அவை. நல்ல மனிதர் அவர். படத்தின் எல்லாப் பாடல்களையும் இன்றும் மொழி கடந்து மக்கள் கொண்டாடுகிறார்கள். ஆனால், படம் திரைக்கு வருதற்கு முன் அவர் காலமானது மிகவும் வருத்தமானது.
படத்தில் தனுஷ் பாலவன நடுவில் சிறுத்தைகளுடன் இருக்கும் காட்சிகள் உண்மையாக எடுக்கப்பட்டது. இது பற்றிக் கூறிய தனுஷ், “நல்ல வேளை சிறுத்தைகள் என்னை ஒன்றும் செய்யவில்லை. ஒளிப்பதிவாளர் மார்க் கோனிக்ஸைவிட நீங்கள்தான் (பரத் பாலா) என்னை ரொம்ப கஷ்ட்டப்படுத்தினீர்கள். அதனால்தான் படம் நல்லா வந்தது. அதற்கு நன்றிகள்”. அதற்கு பரத் பாலா, “தனுஷிடம் நான் சிறுத்தைகளைப் பார்த்து நல்ல பயப்படுவதுபோல் நடிக்க வேண்டும் என்று கூறினேன். அதற்கு அவர், ‘உண்மையிலேயே ரொம்ப பயமாத்தான் இருக்கு நடிக்கவே வேண்டியதில்லை’ என்று என்னிடம் சொன்னார்” என்று சிரித்தார்.
பரத் பாலா: ரஹ்மானிடம் பாட்டு வாங்குவதற்கே ஒரு வருடமாகிவிடும் என்று என்னை எல்லோரும் பயமுறுத்தினார்கள். ஆனால், அவர் 40 நாட்களில் அனைத்துப் பாடல்கள் முடித்துக் கொடுத்தார்
பரத் பாலா: தனுஷ்-பார்வதி இருவரின் நடிப்பும் பிரமாதமாக இருந்தது. குறிப்பாக, அந்தப் பாறையில் இருவரும் அமர்ந்திருக்கும் ஒரு காட்சியே படத்தின் மொத்தக் கதையைச் சொல்லிவிடும். அந்த டெலிபோன் காட்சி மிகவும் அற்புதம். அந்தக் காட்சியும் இருவரின் நடிப்பும் இன்றும் வியப்பை ஏற்படுத்துகிறது. இருவரும் இப்படத்திற்கு அமைந்ததும் ரஹ்மான் அமைந்ததும் எனக்குக் கிடைத்த ஆசீர்வாதம் என்று நினைக்கிறேன்.
ரஹ்மான்; ‘நெஞ்சே எழு..’ பாடல் படத்திற்கு மட்டுமல்ல, பாடும்போது என் மனதிற்கே எழுச்சியாக இருந்தது. அதனால் பாடலும் நல்ல வந்தது. உண்மையில், அப்பாடல் படத்தில் மிகவும் அற்புதமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அதை நான்கு நாட்களில் காட்சியப்படுத்தியதாகக் கேள்விப்பட்டு அசந்துபோனேன்.
தனுஷ்; ‘கடல் ராசா’ பாட்டு சிறப்பாக இருந்தது. பாடல் வெளியான பிறகு அதை நான்தான் எழுதினேன் என எல்லோரிடமும் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.
பின்னணி பாடகர் விஜய் பிரகாஷ்; “‘மரியான்’ பாடலை நான் இன்னும் பாடிக்கொண்டே இருப்பேன். ‘இன்னும் கொஞ்சம் நேரம்..’, ‘நேற்று அவள் இருந்தால்’ இரண்டும் அற்புதமானப் பாடல்கள். ரஹ்மான் சார் ஒவ்வோரு வரிகளின் உணர்வையும் சொல்லிக்கொடுத்து என்னைப் பாட வைத்தார்” என்று கூறி இரண்டு பாடல்களின் சிறு துளிகளைப் பாடி மகிழ்ந்தார்.