
ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று வர்ணிக்கப்படும் பத்திரிகை, சுதந்திரமாகச் செயல்படுகிறதா? எந்த அளவிற்கு ஊடக சுதந்திரம் இருக்கிறது என்று எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இந்தியவில் பத்திரிகை சுதந்திரம் வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
ஒரு பத்திரிகையின் வெற்றி என்பது அதன் எதிர்ப்புச் சக்தியால்தான் என்பது பத்திரிகைத் துறையில் நீண்ட நெடுங்காலமாக வலம்வரும் ஆசிரியர்களுக்கும் நிர்வாகத்தினருக்கும் செய்தியாளர்களுக்கும் மிகவும் நன்றாகத் தெரிந்திருக்கும். அல்லது தெரிய வேண்டும்,

வெறுமனே நானும் பத்திரிகையாளன் தான் என்று சொல்லிக்கொண்டு ஆளும் வர்க்கத்திற்கும் அரசியல் கட்சிகளுக்கும் ஜால்ரா அடிப்பதும், விலை போவதும் அல்ல. பத்திரிகைத் துறை என்பதை பத்திரிகையாளர்கள் ஒவ்வொருவரும் தெரிந்திருக்க வேண்டும், அறிந்திருக்க வேண்டும்
சட்டமன்றத்தில் இடம்பெறாத எதிர்க்கட்சியாக பத்திரிகைகள் இருக்க வேண்டும் என்பது சென்ற நூற்றாண்டிலேயே ஏற்கப்பட்ட ஒன்று. அதுதான் பத்திரிகைச் சுதந்திரம்.
பொறுப்புகளும் கட்டுப்பாடுகளும் இல்லாத எதிர்க்கட்சிகள் எதை வேண்டுமானாலும் பேசலாம், பேச முடியும்.
ஆளும் கட்சிகளுக்குப் பொறுப்புகள் அதிகம். பலம் வாய்ந்த அதிகார வர்க்கத்தின் ஆலோசனைகளை அது மதித்தாக வேண்டும். சில பல சங்கடங்களைச் சந்தித்துதான் ஆக வேண்டும்.

நல்ல ஆலோசனைகளைக் கேட்டு நடந்தால் அது நல்லாட்சியாக நடைபெறும். ஆனால் அதே சமயம் தவறான ஆலோசனைகளுக்கு அடிபணிந்தால், அதனால் அரசுக்கும் கெட்ட பெயர் ஆளும் கட்சிக்கும் கெட்ட பெயர்தான்.
உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டில் இந்தியா 150வது இடத்திற்குத் தள்ளப்பட்டது. எல்லைகளற்ற நிருபர்கள் என்ற அமைப்பு பத்திரிகை சுதந்திரம் பற்றி 180 நாடுகள் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.
உலக பத்திரிகை சுதந்திரத்திற்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியா 150ஆவது இடத்தைப் பெற்றுள்ளதாக எல்லைகளற்ற பத்திரிகையாளர்கள் அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள், இணையதள கருத்துச் சுதந்திரம் பறிப்பு, கருத்துகளுக்குத் தணிக்கை உள்ளிட்ட பல காரணிகள் இந்தியாவில் அதிகரித்துள்ளதாம்.

பத்திரிக்கை சுதந்திர தரவரிசையில் முறையே முதல் 5 இடங்களில் நார்வே, டென்மார்க், ஸ்வீடன், இஸ்தானியா, ஃபின்லாந்து ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும்’ என்பது போல ஆளும் வர்க்கம் நடந்துகொண்டால் அது அவர்கள் தங்களுக்குத் தாங்களே வெட்டிக்கொள்ளும் சவக்குழி. எனவே ஆளும் கட்சியின் தவறுகளுக்குத் துணை போகாமல் தட்டிக் கேட்கும் எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும் ஒவ்வொரு பத்திரிகையும் பத்திரிகையாளரும்.
ஆனால் இங்கு கடை விரிக்கும் கார்பரேட்டுகளுக்குத் துணைபோகும் பல பத்திரிகையாளர்களைக் கண்டால் ‘நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்’ என்ற பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.
ஆளுங்கட்சியாக இருந்தால் என்ன, எதிர்க்கட்சியாக இருந்தால் என்ன, யார் தவறு செய்தாலும் தவறு தவறு தானே. சுட்டிக்காட்டுவதும் குட்டிக் காட்டுவதும் நமது கடமை அல்லவா!
நல்லவைகளைச் சுட்டிக்காட்டுவோம், அல்லவைகளைக் குட்டி காட்டுவோம்.
வாழட்டும் இந்திய ஜனநாயகம், மலரட்டும் பத்திரிகை சுதந்திரம்.
