“மீண்டும் இயக்குநர் ஷங்கருடன் இணையும் விஜய்”

 “மீண்டும் இயக்குநர் ஷங்கருடன் இணையும் விஜய்”

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்கப்போகிறார் என்ற அறிவிப்பு வெளிவந்துள்ள நிலையில், தளபதி 69 படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இப்போதே அவரது ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. காரணம், தளபதி விஜய் விரைவில் அரசியலுக்கு வரப்போகிறார் என்பது அவருடைய செயல்கள் மூலம் ஏறக்குறைய அவரது ரசிகர்கள் உறுதி செய்துள்ள சூழலில், அதற்கு ஏற்றார் போன்றதொரு படத்தை தான் அடுத்ததாக விஜய் தேர்வு செய்து நடிப்பார் என அவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் தான் தற்போது விஜய்யின் தளபதி 69 அல்லது தளபதி 70 படத்தை பிரமாண்டத்திற்கு பெயர் போன ஷங்கர் இயக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யிடம் படத்தின் ஒன்லைனை ஷங்கர் கூறியதாகவும், இப்படம் முழுக்க முழுக்க அரசியல் கதைக்களத்தில் உருவாக உள்ளதோடு, விஜய்க்கும் படத்தின் ஒன்லைன் மிகவும் பிடித்துவிட்டதால் ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே விஜய், கடந்த 2012ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் ‘நண்பன்’ படத்தில் நடித்திருந்தார். இதில் விஜய்யுடன் இணைந்து ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா, சத்யராஜ், சத்யன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான இப்படம் விமர்சனரீதியாகவும் வசூல்ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், அது விஜய்க்கான ஷங்கர் படமாக இல்லை என கூறப்பட்டு வந்த நிலையில், கிட்டதட்ட 11 ஆண்டுகளுக்கு பிறகு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக தற்போது இந்த தகவல் வெளியாகியுள்ளது. இப்போது ஷங்கர் ‘இந்தியன் 2’ மற்றும் ‘கேம் சேஞ்சர்’ ஆகிய படங்களில் பணியாற்றி வருவதால், அதன் பிறகு இப்படத்தின் முழு ஸ்க்ரிப்ட் பணிகளை அவர் துவங்குவார் என கூறப்படும் நிலையில், இப்படத்திற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எப்போது வெளியாகும் என தெரியவில்லை.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...