ஆத்மாநாம் என்றொரு சாதனைக் கலைஞன்

ஆத்மாநாம் என்றொரு சாதனைக் கலைஞன்!

சென்னையில் 18.01.1951-ல் பிறந்த எஸ்.கே.மதுசூதன் என்கிற ஆத்மாநாம், 34 வயதுகூட முடியாமல் இளம் வயதிலேயே 06.07.1984-ல் பெங்களூரில் இறந்து போனார். நவீனத் தமிழ்க் கவிதைக்குப் பெரும் பங்களிப்பு செய்த ஆத்மாநாமின் தாய்மொழி கன்னடம். அம்பத்தூர் சர் ராமசாமி முதலியார் உயர்நிலைப் பள்ளியிலும் அரும்பாக்கம் து.கோ.வைணவக் கல்லூரியிலும் (பிகாம்) பயின்றார். சதர்ன் சுவிட்ச் கியர்ஸ், கோரமண்டல் கார்மென்ட்ஸ், ரெங்கா அப்பாரெல்ஸ் ஆகிய கம்பெனிகளில் வேலை செய்தார். டாப் டென் (1978) என்ற ரெடிமேட் ஆடை உற்பத்தி நிறுவனத்தைப் பெருங்கனவுகளுடன் தொடங்கினார். ஆனால், இதில் அவர் வெற்றிபெறவில்லை. கைகூடுவதுபோல் தோன்றிச் சட்டென்று நழுவிவிட்ட ஒரு காதலும் சேர்ந்து உறுத்தியதால், அவர் வாழ்வு முற்றிலும் நிலைகுலைந்தது. இதற்கிடையில், நவீனக் கவிதைக்காக, ‘ழ’ என்ற ஒரு முன்னோடி இதழைத் தொடங்கி, 24 இதழ்களைக் கொண்டுவந்தார்.

அகச்சிக்கலாலும் புறநெருக்கடிகளாலும் தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்ட ஆத்மாநாம், அஃபெக்ட்டிவ் டிஸார்டர் என்ற மனமுறிவு நோய்க்குள்ளாகி, கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். இன்றுவரை ஆத்மாநாம் எழுதியவையாக, நமக்கு 156 கவிதைகள் கிடைத்துள்ளன. இவற்றைத் தொகுப்பாக்கித் தமிழ் வாசகர்களிடம் ஆத்மாநாமை நிலைநிறுத்தியதில் கவிஞர் பிரம்மராஜனுக்குத் தலையாய பங்குண்டு.

தற்கொலை செய்துகொண்டவராயினும், ஆத்மாநாமின் கவிதைகளில் சோர்வையும் விரக்தியையும் கழிவிரக்கத்தையும் கசப்பையும் காண முடியாது. குழப்பத்துக்கிடையில் தெளிவையும், பரபரப்புக்கிடையில் நிதானத்தையும் நுனிப்புல் மேய்ச்சலுக்கிடையில் ஆழ்ந்தகன்ற தீவிரத்தையும், நிரூபணங்களுக்கிடையில் சும்மாயிருத்தலையும் வலியுறுத்தியவரான ஆத்மாநாமுக்குச் சமூகக் கோபமுண்டு. இக்கோபத்தைப் பதிவுசெய்வதால் படைப்பு தீட்டுப்பட்டுவிடாது என்ற கூர்மையும் உண்டு. இந்திரா காந்தியின் நெருக்கடி நிலையை எதிர்த்துத் தமிழில் மட்டுமல்லாது, இந்திய அளவிலும் அரசியல் தெளிவுடன் கவிதையாக்கத்தில் ஈடுபட்ட வெகுசிலருள் ஆத்மாநாமும் ஒருவர்.

அகத்தில் புறத்தையும் புறத்தில் அகத்தையும் ஒருங்கிணைத்துக் கவிதையின் நிர்ணய எல்லைகளை அகண்டமாக்கினார். வடிவத்தையும் உத்தியையும்விட உண்மையின் உரத்த குரலையே கவிதையாகக் கண்டெழுதினார். கவித்துவமான சொற்களில் அசாதாரண அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். இலக்கியத்தில் அரசியலுக்கு இடமில்லை என்ற குரலைக் கடைசி வரை புறக்கணித்தார். வெகுமானங்களையும் கொண்டாட்டங்களையும் எளிதாகக் கடந்தார். வெகுமக்கள் கூட்டத்தில் ஒருவராக, மேட்டிமை உணர்வின்றித் தம்மைச் சமநிலையில் பொருத்திக்கொண்டார். சாதாரண மனிதனாகவும், சமூகப் பொறுப்பைத் தட்டிக்கழிக்காத கவிஞனாகவும் இயங்கினார். கவிதைகளும் வாழ்வியக்கத்தின் துடிப்பான பகுதிகளே என்ற முழுநோக்கைத் துணிந்து முன்னெடுத்தார். அன்பைத் தேடிக் கூச்சத்துடனும் பதற்றத்துடனும் அலைந்தலைந்து அவதிப்பட்டார். சாரத்தை இப்படிச் சுருக்கலாம்: நம் காலக் கவிதையின் ஆகப் பெரும் சாதனைக் கலைஞர்களுள் ஒருவர்தான் ஆத்மாநாம்.

– கல்யாணராமன், ‘கனல் வட்டம்’ நூலின் ஆசிரியர்.

தொடர்புக்கு: sirisharam73@gmail.com

ஜூலை 6: ஆத்மாநாம் நினைவுநாள்

நன்றி: இந்து தமிழ் திசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!