நடிகை வடிவுக்கரசி
நடிகை வடிவுக்கரசி பிறந்தநாளின்று!
‘வடிவுக்கு வளைகாப்பு’ படத்தின் வெளியீட்டு தேதி அன்று பிறந்ததால், அவருக்கு வடிவுக்கரசி என்று பெயர் வைத்தார், வடிவுக்கரசியின் பெரியப்பா ஏ.பி.நாகராஜன். இவர் வடிவுக்கரசியின் அம்மா சந்திராவின் அக்காள் கணவர். ராணிப்பேட்டையைச் சேர்ந்த சண்முகம் – சந்திரா தம்பதியருக்கு மகளாக பிறந்த வடிவுக்கரசி கல்லூரிப் படிப்பைப் தொடர வாலாஜா அறிஞர் அண்ணா பெண்கள் கல்லூரியில் சேர்ந்தார்.
நிறைய படிக்க வேண்டும் என்ற கனவுடன் கல்லூரிக்குள் காலடி எடுத்து வைத்த வடிவுக்கரசியால் பி.யு.சி. க்குப் பிறகு தனது படிப்பைத் தொடர முடியவில்லை. அதற்கு முக்கிய காரணம் சினிமா எடுக்கச் சென்ற இவரது தந்தை சந்தித்த பொருளாதார இழப்புக்கள். குடும்ப கஷ்டத்தில் பங்கெடுப்பதற்காக வேலைக்கு செல்லத் தொடங்கிய இவர் முதலில் ஊர்வசி என்கிற புடவை கடையில் வேலை பார்த்தார். துணிக்கடையில் வேலை செய்தபடியே சென்னை தூரதர்சனில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றிய இவர், சினிமா வாய்ப்பைத் தேடிப் போகவில்லை. இவரைத் தேடி சினிமா வாய்ப்பு வந்தது .
விமான பணிப் பெண் வேலைக்கு செல்ல ஒரு புகைப்படம் எடுத்தார் வடிவுக்கரசி. அந்த புகைப்படம்தான் சினிமாவில் தனக்கு ஒரு இடத்தைப் பெற்றுத் தரப்போகிறது என்று அப்போது வடிவுக்கரசிக்குத் தெரியாது. அந்த போட்டோவை எடுத்த ரமேஷ் என்பவர், அப்போது இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்த இயக்குனர் பாலகுருவிடம் காட்ட, அதைத் தொடர்ந்து அம்மன் கிரியேஷன்ஸ் அலுவலகத்திலிருந்து வடிவுக்கரசிக்கு அழைப்பு வந்தது.
இதை அடுத்து நடந்த வாழ்க்கைக் கதையை அவரே சொல்ல மேட்போமா? (கட்டிங் கண்ணையா!)
“சிவாஜி அப்பாவை வெச்சு நிறைய ஹிட் படங்கள் கொடுத்த இயக்குநர் ஏ.பி.நாகராஜன்தான் என்னோட பெரியப்பா. அதனால சினிமா பத்தின விஷயங்கள் ஓரளவுக்குத் தெரிஞ்சாலும், நடிக்கும் ஆர்வம் எனக்கு இல்லை. நல்லா வசதியா வாழ்ந்த குடும்பம் எங்களுது. திடீர்னு பெரிய வறுமை ஏற்படவே, ஆழ்வார்பேட்டையில துணிக்கடையில கேஷியரா வேலை செஞ்சுட்டிருந்தேன். அதுக்குப் பக்கத்துல இருந்த ஸ்டூடியோவுல என்னோட போட்டோவைப் பார்த்துட்டுத்தான், `கிழக்கே போகும் ரயில்’ படத்துல என்னைத் தேர்வு செஞ்சார் பாரதிராஜா சார். ஆனா, அந்தப் படத்துல நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கல. பிறகு, `சிவப்பு ரோஜாக்கள்’ படத்துல என்னை நடிக்க வெச்சார் அவர். அதுல, மாடர்ன் பொண்ணா, அடாவடி ரோல்ல நடிச்சது நான்தானான்னு அடிக்கடி ஆச்சர்யப்படுவேன்.
குடும்ப கஷ்டத்துக்காக, சினிமாவை என்னோட கரியரா ஏத்துக்கிட்டேன். எனக்கு முக்கியத்துவம் இருக்குற ரோல்லதான் நடிப்பேன், அதிக சம்பளம் வேணும்னு இதுவரைக்கும் நான் கெடுபிடி காட்டினதில்ல. `கன்னிப் பருவத்திலே’ படத்துக்குப் பிறகு தமிழ்லயும் தெலுங்குலயும் ஹீரோயின் வாய்ப்புகள் வந்துச்சு. டான்ஸ், ரொமான்ஸ் நடிப்பெல்லாம் எனக்கு வராது. அதுக்காகவே, சின்ன வயசுலயே கேரக்டர் ரோல்களை மட்டுமே விருப்பப்பட்டு ஏத்துக்கிட்டேன்.
`வா கண்ணா வா’ படத்துல சிவாஜி அப்பாவுக்கு மகள் ஸ்தானத்துல நடிச்ச நிலையில, `முதல் மரியாதை’யில அவருக்கு மனைவி ரோல் எனக்கு. கே.ஆர்.விஜயா அம்மா மாதிரி குடும்பப்பாங்கான ரோல்னு நினைச்சு மூக்குல ரெண்டு பக்கமும் மூக்குத்தி குத்திகிட்டு எதிர்பார்ப்போடு போனா, சிவாஜி அப்பாவைத் திட்டி நடிக்கிற மாதிரி நெகட்டிவ் ரோல் எனக்கு கொடுத்தாங்க. சங்கடத்துடன் நடிச்சாலும், என்னை ரொம்பவே ஊக்கப்படுத்தினார் சிவாஜி அப்பா. பிறகு, பல படங்கள்ல அவருடன் சேர்ந்து நடிச்சேன். `அருணாச்சலம்’ படத்துல ரஜினி சாரைத் திட்டி நடிச்சதால, அவரோட ரசிகர்களால சில சிக்கல்களை எதிர்கொண்டேன். ஆனா, என்னோட ஒவ்வொரு ஷாட் நடிப்பையும் ரசிச்சு ஊக்கப்படுத்தினார் அவர்.
என்மேல பெரிய அன்பு கொண்ட ரஜினி சாருக்கு அம்மாவா `சிவாஜி’ படத்துல நடிச்சதும் மறக்க முடியாத அனுபவம். `ராஜாவின் பார்வையிலே’ படத்துல விஜய்க்கு அம்மாவா நடிச்சப்போ, அவர் அதிகம் பேசவே மாட்டார். ஷாட் இல்லாத நேரத்துல அமைதியா இருப்பார். பல வருஷம் கழிச்சு, அவர்கூட `புலி’ படத்துல இணைஞ்சு நடிச்சபோதும் அவரோட இயல்பான குணம் மாறவே இல்ல. தமிழ் சினிமாவுல புகழ்பெற்ற பெரும்பாலான நடிகர்களுடனும் நடிச்சுட்டேன். இதுல, பாசிட்டிவ், நெகட்டிவ்னு நடிக்காத கேரக்டர்களே இல்லை” என்று சிலாகிப்பவருக்கு, `கன்னிப் பருவத்திலே’, `முதல் மரியாதை’, `என்னுயிர் தோழன்’, `அருணாச்சலம்’ போன்ற படங்கள் ஆல்டைம் ஃபேவரைட்.
தயாரிப்பாளர்களின் படங்கள்ல அதிகளவுல நடிச்சேன். ஆனா, அதனால பெருமையா சொல்லிக்குற அளவுக்கு எனக்குப் பெரிசா வருமானமெல்லாம் கிடைக்கல. இத்தனை வருஷங்கள்ல ஒவ்வொரு காலத்துலயும் புதுப்புது கமிட்மென்ட்ஸ் எனக்கு இருந்துகிட்டே இருக்கு. அதனால, சேமிப்பு, முதலீடுலயெல்லாம் கவனம் செலுத்த முடியல. `அப்பாடா!’ன்னு நிம்மதியா ஓய்வெடுக்கலாம்னு நினைச்சாலும், அதுக்கான சந்தர்ப்பமும் எனக்கு இதுவரை அமையல. அதனாலதான், இந்த 60 வயசான காலத்துலகூட பொருளாதாரத் தேவைக்காக பயந்துகிட்டே ஷூட்டிங் போறேன்.
அப்படீன்னார்
ஆக கோலிவுட்டில் ஒரு தனி இடம் பிடித்து விட்ட வடிவுகரசி அம்மாவுக்கு ஹெப்பி பர்த் டே சொல்வதில் மகிழ்ச்சி
s