நடராஜின் குரு
நடராஜின் நடனத்தைப் பார்த்தவர்கள் உன்னுடைய குரு யார் என்று கேட்க ஆரம்பித்தார்கள். “அப்போதுதான் நடனத்திற்கு குரு வேண்டுமென்பதை அறிந்தேன். அந்த காலகட்டத்தில் வைஜெயந்தி மாலாவின் குருவான கிட்டப்பா பிள்ளையைப் பற்றி பலரும் பேசியதால், நாங்கள் அவரிடம் சென்று மாணவர்களாகச் சேரலாம் என்று முடிவுசெய்தோம். நேராக தஞ்சாவூருக்குப் போனோம். அங்கே திண்ணையில் அமர்ந்து வெற்றிலை போட்டுக் கொண்டிருந்தவரிடம், எங்களுக்கு நடனம் நன்றாகத் தெரியும். மதுரையில் ரொம்ப பேமஸ். இருந்தாலும் ஒரு குருவிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார்கள். அதனால், உங்களிடம் கற்றுக்கொள்ள விரும்புகிறோம் என்று சொன்னோம். அவர் ‘நான்தான்மா கிட்டப்பா பிள்ளை’ என்று சொன்னார். அப்படியே அவர் காலில் விழுந்தோம். அவர் உடனே ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் செல்லுமிடமெல்லாம் நாங்களும் சென்றோம். கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து எங்களை மாணவர்களாக அவர் ஏற்றுக்கொண்டார். ஒரு கட்டத்தில் அவருடனேயே தங்க வைத்துக்கொண்டார்” என்கிறார் நர்த்தகி.
கிட்டத்தட்ட 17வது வயதில் கிட்டப்பா பிள்ளையிடம் சேர்ந்த நடராஜ், அதற்கு அடுத்த 15 வருடங்கள் அவருடனேயே இருந்தார். அந்த 15 வருடமும் புகழ், மேடை, வருவாய் போன்ற எதைப் பற்றியும் கவலைப்படாமல் நடனத்தை கற்றுக்கொள்வதை மட்டுமே வேலையாக வைத்திருந்ததாகச் சொல்கிறார் நட்ராஜ். அந்த காலகட்டத்தில் கிட்டப்பா பிள்ளைக்கு குரு தட்சணையாகக் கொடுப்பதற்கு இவர்களிடம் எதுவும் இல்லை. இருந்தபோதும் தொடர்ச்சியாக நட்ராஜுக்கும் பாஸ்கருக்கும் கற்பித்தார் கிட்டப்பா பிள்ளை. நட்ராஜிற்கு நர்த்தகி என்று பெயர் சூட்டியவரும் அவர்தான்.
நன்றி: பிபிசி தமிழ்