எந்த சவாலையும் சந்திக்கத் தயாராக இருக்கும் இளைஞராகப் பார்த்திருக்கிறேன்

இசைஞானி இளையராஜாவை சந்தித்து அவருடைய திருவாசகம் ‘சிம்பொனி’ அனுபவத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தது ஓர் இனிய அனுபவம்.

இளையராஜாவுடன் எனது நட்பு ஏறக்குறைய ஆரம்ப காலத்திலிருந்து தொடர்வது. முதன்முதலாக காயத்ரி, ப்ரியா போன்ற படங்களை பஞ்சு அருணாசலம் எடுத்தபோது (1976) பெங்களுரில் கம்போசிங்கின் போதும், சென்னையில் யேசுதாஸின் முதல் ஸ்டீரியோ, ஸ்டுடியோவில் ரிக்கார்டிங்கின்போதும் – ஆர்வமுள்ள, முன்னேறத் துடிக்கும், எந்த சவாலையும் சந்திக்கத் தயாராக இருக்கும் இளைஞராகப் பார்த்திருக்கிறேன். இன்னமும் ஞாபகம் இருக்கிறது.

அப்போதெல்லாம் சின்தஸைஸர் மிக மிக குறைவாகத்தான் பயன்படுத்தப் பட்டது. வயலின் என்றால் நிஜ வயலின்கள், ப்ளூட் என்றால் நிஜ ப்ளூட். கித்தாரும் அப்படியே. ரிக்கார்டிங் ஸ்டுடியோவில் இசைக் கலைஞர்கள் கூட்டம் பெரும் வட்டமாக இருக்கும். ட்ராக்கில் பாடுவதெல்லாம் கிடையாது. கான்சோலில் இசை அமைப்பாளர் வீற்றிருக்க, உள்ளே ஒரு அரேஞ்சர் இருப்பார். அப்போதே, ராஜா எல்லோருக்கும் நோட்ஸ் எழுதிக் கொடுப்பார் – உள்ளூர் வாத்தியங்களுக்கு ஸ்வரங்களாகவும், வெஸ்டர்னுக்கு நொட்டேஷனிலும்.

எந்த மூலையில், எத்தனை லேசான பிசிறு இருந்தாலும் அவரது நுட்பமான, தீட்டப்பட்ட காதுகளுக்குக் கேட்டு விடும். கட் பண்ணி விட்டு, “என்ன கோதண்டம், பிசிறு கேக்குதே ! சரியா ட்யூன் பண்ணிக்கலையா ?” இது ஒரு இன்பமான, வினோதமான அனுபவம். அங்கங்கே ஞீ ஞா என்று ஆளாளுக்கு ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்க, “ஓகே ! டேக் போகலாமா ? ” என்றதும் நிசப்தமாகும். ஒன்… டூ… என்று கை சொடுக்கினால் முடிவில், திடீர் என்று ஒரே நேரத்தில் அத்தனை பேரும் ஒத்திசைந்து சங்கீதம் புயலாக வெடிக்கும். அந்தத் திடீர்த் துடிப்பு வேறெதிலும் கிடைக்காதது.

ராஜாவின் முன்னேற்றத்தைப் படிப்படியாக கவனித்து வந்திருக்கிறேன். அவரிடம் இருந்த மேதமை, உலகளாவிய நண்பர்களை அவருக்குத் தந்திருக்கிறது. மெல்ல மெல்ல அவர் தன் வாழ்க்கையைப் பற்றியே சிந்திக்கும் போது, வேறு ஏதோ ஒரு உயர்ந்த காரியத்திற்குத் தான் படைக்கப் பட்டிருப்பதை உள்ளுணர்வில் கண்டிருக்கிறார். திருவாசகத்தில் உள்ள பக்தி ரசத்தையும், ஈசனிடம் உண்மையான சரணாகதியையும் உணர்ந்து அவர் பாடியிருக்கும் ஆரடோரியோ, ராஜாவின் இசைப் பயணத்தில் ஒரு மிக முக்கியமான திருப்பம். இனிமேல் அவர் செய்ய இருப்பதற்கெல்லாம் கட்டியம்.

ராஜா ஒரு முழுமையான சிம்பொனியை எழுதக் கூடியவர். அதே போல் சிக்கலான மேற்கத்திய அமைப்பில் கிழக்கத்திய இலக்கியங்களின் சுவையை இணைக்கும் திறமை இவரிடம் தான் காண முடிகிறது. விளைவாக, சிலப்பதிகாரம் ஒரு ஆப்பெராவாக வெளிவந்தால் ஆச்சரியப் பட மாட்டேன். நம்மாழ்வாரின் சூழ்விசும்பு பாசுரங்களை தூரியம் முழங்க, பில்ஹார்மோனிக் இசையில் பரமபதத்துக்குக் கைப்பிடித்து அழைத்துச் செல்லலாம்.

ராஜாவின் முழுமேதைமை வெளிநாட்டில் தான் முதலில் வெளிப்படும். தென்னாட்டில் அறியப்படும்.

சிடியை வாங்கிக் கேட்டுப் பாருங்கள்.

அம்பலம் இணைய இதழில், 12.6.2005 சுஜாதா

தகவல்: பரதன் வெங்கட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!